1. குகையில் மாட்டிக் கொண்ட மூவரின் சம்பவம்
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில்
மூன்று பேர் (ஒன்றாக) நடந்து சென்றனர்; இறுதியில் (மலையில் இருந்த) குகையொன்றில் இரவைக் கழிப்பதற்காக தஞ்சம் புகுந்தனர்; அதில் அவர்கள் நுழைந்தவுடன்
மலையிலிருந்து பெரும் பாறையொன்று உருண்டுவந்து குகைவாசலை அடைத்துவிட்டது. அப்போது அவர்கள்
நீங்கள் செய்த நற்செயலைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால் தவிர நீங்கள் தப்ப முடியாது! என்று தமக்குள் கூறிக்
கொண்டனர்.
அவர்களில் ஒருவர், இறைவா! எனக்கு வயது
முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் அவர்களுக்குப் பால் (கறந்து) கொடுப்பதற்கு முன்
என் குடும்பத்தினருக்கோ குழந்தைகளுக்கு பால் கொடுப்பதில்லை! ஒரு நாள் எதையோ தேடிச்
சென்றதால் தாமதமாக நான் வந்தேன். எனது தாயும்,
தந்தையும் (முன்பே) உறங்கிவிட்டிருக்கக் கண்டேன். அவர்களுக்குப்
பால் கொடுப்பதற்கு முன், என் குடும்பத்தினருக்கோ என் அடிமைகளுக்கோ பால் கொடுப்பதை நான் விரும்பாததால் அவர்கள்
விழிப்பதை எதிர்பார்த்து என் கைகளில் பாத்திரத்தை வைத்துக் கொண்டு காத்திருந்தேன்.
ஃபஜ்ர் நேரம் வந்ததும் அவ்விருவரும் விழித்துத் தமக்குரிய பாலைக் குடித்தனர். ஆகவே, இறைவா! நான் இதை உனது
திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களை
விட்டுஅகற்று! எனக் கூறினார். உடனே, அவர்கள் வெளியேற முடியாத அளவிற்குப் பாறை சற்று விலகியது!
மற்றொருவர், இறைவா! என் தந்தையின்
சகோதரரின் மகள் ஒருத்தி இருந்தார்; அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தாள். நான் அவளை அடைய விரும்பினேன்; அவள் என்னிடமிருந்து
விலகிச் சென்றாள். அவளுக்கு பஞ்சம் நிறைந்த ஆண்டு ஒன்று வந்த போது (பொருளாதார நெருக்கடி
ஏற்பட்டு) என்னிடம் வந்தாள்; நான்அவளை அடைந்திட அவள் எனக்கு வழிவிடவேண்டும் என்ற நிபந்தனையில் பேரில் நூற்றி
இருபது தங்கக்காசுகளை அவளுக்குக்கொடுத்தேன். அவளை என் வசப்படுத்தி (உறவுகொள்ள முனைந்து)
விட்ட போது, முத்திரையை அதற்கான (மணபந்தத்தின்) உரிமையின்றி உடைப்பதற்கு உனக்கு நான் அனுதி
தரமாட்டேன்! என்று அவள் கூறினாள். உடனே, அவளுடன் உறவு கொள்ளும் பாவத்(தைச் செய்வ)திலிருந்து விலகிக் கொண்டேன். அவள் எனக்கு
மிகவும் விருப்பமானவளாக இருந்தும் அவளை விட்டுத் திரும்பிவிட்டேன்; நான்அவளுக்குக் கொடுத்த
தங்க நாயணத்தை அவளிடமே விட்டு விட்டேன். இதை உனது திருப்தியை நாடி நான் செய்திருந்தால்
நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களை விட்டு அகற்று! எனக் கூறினார். பாறை
விலகியது; ஆயினும் அவர்களால் வெளியேற முடியவில்லை.
மூன்றாமவர், இறைவா! நான் சில ஆட்களைக்
கூலிக்கு அமர்த்தி அவர்களது கூலியையும் கொடுத்தேன். ஒரே ஒருவர் மட்டும் தமது கூலியை
விட்டுவிட்டுச் சென்று விட்டார். அவரது கூலியை நான் முதலீடுசெய்து, அதனால் செல்வம் பெருகியிருந்த
நிலையில் சிறிது காலத்திற்குப் பின் அவர் என்னிடம் வந்தார். அல்லாஹ்வின் அடியாரே! எனது
கூலியை எனக்குக் கொடுத்துவிடும்! என்று கூறினார். நீர் பார்க்கின்ற இந்த ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், அடிமைகள் எல்லாம் உம்
கூலியிலிருந்து கிடைத்தவைதாம்! என்று நான் கூறினேன். அதற்கவர் அல்லாஹ்வின் அடியாரே! என்னை கேலி செய்யாதீர்! என்றார். நான் உம்மை
கேலி செய்யவில்லை! என்று நான் கூறினேன். அவர் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஓட்டிச்சென்று விட்டார். இறைவா!
இதை நான் உனது திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப்
பாறையை எங்களை விட்டு அகற்று! எனக் கூறினார். பாறை முழுமையாக விலகியது. உடனே, அவர்கள் வெளியேறிச் சென்று விட்டனர்!.
இதை அப்துல்லாஹ் பின்
உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி (2272)
2. நபி செய்த போரும் நம் சமுதாயத்தின் நிலையும்
நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:
இறைத்தூதர்களில் ஒருவர்
(புனிதப் போருக்குச் சென்றார். அப்போது அவர் தம் சமுதாயத்தாரிடம், ஒரு பெண்ணிடம் இல்லற உரிமையைப் பெற்றவன் அவளுடன்
வீடு கூட விரும்பி இன்னும் கூடாமல் இருப்பானாயின் என்னைப் பின்பற்றி (போருக்கு) வர
வேண்டாம். வீடு கட்டி முடித்து, அதன் முகட்டை (இன்னும்) உயர்த்தாமலிருப்பவனும் என்னைப் பின்பற்றி
(போருக்கு) வர வேண்டாம். ஆட்டையோ, பெண் ஒட்டகங்களையோ வாங்கி விட்டு, அவை குட்டிகள் போடுவதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவனும் என்னைப் பின்பற்றி (போருக்கு)
வரவேண்டாம் என்று கூறி விட்டுப் போருக்குச் சென்றார். ஓர் ஊரை (வெள்ளிக்கிழமை)
அஸர் தொழுகையின் நேரத்தில் அல்லது சற்றேறக் குறைய அந்த வேளையில் அவர் நெருங்கினார்.
(சற்று நேரத்தில் சூரியன் மறையத் தொடங்க, சனிக் கிழமை போரிடுவது அவர்களுக்கு தடை செய்யப்
பட்டிருந்த காரணத்தால் தோற்றுப் போக நேரிடுமே என்றஞ்சி) சூரியனை நோக்கி, நீ இறைவனின் கட்டளைப்படி இயங்குகின்றாய். நானும் இறை கட்டளைப்படி நடக்க வேண்டியவன்
ஆவேன் என்று கூறி விட்டு, இறைவா! சூரியனை (உடனே மறைய விடாமல்) தடுத்து விடு என்று பிரார்த்தித்தார். எனவே, அல்லாஹ் அவர்களுக்கு வெற்றியை வழங்கும் வரை அது தடுத்து நிறுத்தப்பட்டது.
(வெற்றி பெற்ற) பிறகு அந்த இறைத்தூதர் போரில் கிடைத்த பொருட்களை ஒன்றாகச் சேகரித்தார்.
அப்போது அதை (எரித்துக் கருக்கி) உண்பதற்கு (வானிலிருந்து) நெருப்பு வந்தது. ஆனால், அவற்றை அது உண்ண வில்லை. ஆகவே, அந்த இறைத் தூதர், உங்களிடையே (இந்தப் பொருட்களிலிருந்து) திருட்டுப்
பொருள் ஏதோ ஒன்று உள்ளது. ஆகவே, ஒவ்வொரு குலத்திலிருந்தும் ஒரு மனிதர் என்னிடம் உறுதி மொழி கொடுக்கட்டும் என்று கூறினார். (உறுதி மொழி கொடுத்துக் கொண்டிருந்த போது) ஒரு மனிதனின் கை இறைத்
தூதரின் கையோடு ஒட்டிக் கொண்டது. அப்போது இறைத்தூதர், உங்களிடையே தான் திருடப்பட்ட பொருள் உள்ளது. ஆகவே, உனது குலத்தார் என்னிடம் உறுதிமொழி கொடுக்கட்டும் என்று கூறினார். (அவ்வாறே அவர்கள் கொடுக்க) இரண்டு மனிதர்களின் கை அல்லது மூவருடைய
கை அவருடைய கையுடன் ஒட்டிக் கொண்டது. அப்போது அவர், உங்களிடையே தான் திருடப்
பட்ட பொருள் உள்ளது என்றார். ஆகவே, அம்மக்கள் தங்கத்தாலான பசுமாட்டுத் தலை ஒன்றைக்
கொண்டு வந்து அதை வைத்தனர். நெருப்பு வந்து அதைத் தின்றுவிட்டது. பிறகு அல்லாஹ், போரில் கிடைக்கும் பொருட்களை (எடுத்துக் கொண்டு பயன்படுத்த) நமக்கு அனுமதியளித்தான். நமது பலவீனத் தையும் இயலாமையையும் கண்டு அதை நமக்கு அனுமதிக்கப்பட்டதாக ஆக்கி
விட்டான்.
இதை அபூஹுரைரா (ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி (3124)
3. குருடர், வழுக்கத்தலையர், வெண்குஷ்டர் சம்பவம்
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பனூ இஸ்ராயீல் குலத்தாரில்
மூன்று பேர்: (ஒருவர்) தொழு நோய் பிடித்தவராகவும் (மற்றொருவர்) வழுக்கைத் தலையராகவும்
(இன்னொருவர்) குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அவர்களை சோதிக்க நாடி வானவர் ஒருவரை
அவர்களிடம் அனுப்பினான். அவர் தொழு நோயாளியிடம் வந்து, உனக்கு மிகவும் விருப்பமானது எது? என்று கேட்க அவர், நல்ல நிறம், நல்ல தோல் (தான் எனக்கு மிகவும் விருப்பமானவை). மக்கள் (என் வியாதியின் காரணத்தால்)
என்னை அருவருக்கிறார்கள் என்று சொன்னார். உடனே அவ்வானவர் அவரை (தம் கரங்களால்) தடவ அந்த
வியாதி அவரை விட்டுச் சென்றுவிட்டது. அவருக்கு அழகிய நிறமும் அழகிய தோலும் தரப்பட்டன.
பிறகு அவ்வானவர், எந்தச் செல்வம் உங்களுக்கு மிகவும் விருப்பமானது? என்று கேட்க அவர்,
ஒட்டகம் தான்... (என்றோ) அல்லது மாடுதான்...(எனக்கு மிகவும்
விருப்பமான தாகும்) என்று பதிலளித்தார். கருத்தரித்த ஒட்டகம் அவருக்கு கொடுக்கப்பட்டது.
அவ்வானவர், இதில் உனக்கு பரக்கத் (வளர்ச்சி) வழங்கப்படும் என்று சொன்னார். பிறகு அவ்வானவர் வழுக்கைத் தலையரிடம் சென்றார். உனக்கு மிகவும்
விருப்பமானது எது? என்று கேட்டார். அவர், அழகான முடியும் இந்த வழுக்கை என்னை விட்டுப் போய் விடுவதும்
தான் (எனக்கு மிகவும் விருப்பமானது.) மக்கள் என்னை அருவருத்து (ஒதுக்கி வைத்து) விட்டார்கள் என்று சொன்னார். உடனே அவ்வானவர், அவரது தலையைத் தடவிக் கொடுக்க, அவருக்கு அழகான முடி வழங்கப்பட்டது. அவ் வானவர், எந்தச் செல்வம் உனக்கு
விருப்பமானது? என்று கேட்டார். அவர், மாடு தான் எனக்கு மிக விருப்பமான செல்வம் என்று சொன்னார். உடனே வானவர் அந்த வழுக்கைத் தலையருக்கு கர்ப்பமான மாடு ஒன்றைக்
கொடுத்து, இதில் உனக்கு வளர்ச்சி வழங்கப்படும் என்று சொன்னார். பிறகு, அவ்வானவர் குருடரிடம் சென்று, உனக்கு மிகவும் விருப்பமானது எது? என்று கேட்டார். அவர், அல்லாஹ் என் பார்வையை எனக்குத் திரும்பச் செய்வதும் அதைக் கொண்டு
மக்களை நான் பார்ப்பதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது) என்று பதிலளித்தார். அவ்வானவர் அவரைத் தடவிட, அல்லாஹ் அவருக்கு அவரது
பார்வையைத் திருப்பித் தந்தான். அவ்வானவர், உனக்கு எந்தச் செல்வம் விருப்பமானது? என்று கேட்க அவர்,
ஆடு தான் (எனக்கு மிகவும் விருப்ப மானது) என்று பதில் அளித்தார். உடனே, அவ்வானவர் அவருக்குக் கருவுற்ற ஆடு ஒன்றைக் கொடுத்தார். அந்த
இருவரும் (-ஒட்டகம் வழங்கப்பட்டவரும் மாடு வழங்கப்பட்டவரும்-) நிறைய குட்டிகள் ஈந்திடப்
பெற்றனர். இவர் (-ஆடு வழங்கப் பட்டவர்-) நிறையக் குட்டிகள் பெற்றார். தொழு நோயாளியாய்
இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஒட்டகங்களும் வழுக்கைத் தலையராய் இருந்தவருக்கு ஒரு
கணவாய் நிரம்ப மாடுகளும், குருடராக இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஆடுகளும் (பெரு மளவில்)
கிடைத்தன. பிறகு அவ்வானவர் தொழு நோயாளியாய் இருந்தவரிடம் தமது பழைய தோற்றத்திலும் அமைப்பிலும்
சென்று, நான் ஓர் ஏழை மனிதன். என் பயணத்தில் என் வாழ்வாதாரம் அறுபட்டு விட்டது. (செலவுக்குப்
பணம் தீர்ந்து போய்விட்டது.) இன்று உதவிக்கான வழி வகை (எனக்கு) அல்லாஹ்வையும் பிறகு
உன்னையும் தவிர வேறெவருமில்லை. உனக்கு அழகிய நிறத்தையும் அழகிய தோலையும் செல்வத்தையும்
கொடுத்த(இறை)வனின் பெயரால் உன்னிடம் ஓர் ஒட்டகத்தைக் கேட்கின்றேன். அதன் வாயிலாகப்
பயணத் தில் நான் போக வேண்டிய இடத்தைச் சென்றடைவேன் என்று சொன்னார். அதற்கு அந்த மனிதர், (எனக்குக்) கடமைகள்
நிறைய இருக்கின்றன. (எனவே, என்னால் நீ கேட்டதைத் தர முடியாது) என்றார். உடனே அவ்வானவர், உன்னை எனக்குத் தெரியும் போலுள்ளதே. மக்கள் அருவருக்கின்ற தொழு
நோயாளியாக நீ இருக்கவில்லையா? நீ ஏழையாக இருக்கவில்லையா? பிறகு அல்லாஹ் உனக்கு
(செல்வத்தைக்) கொடுத் தான் அல்லவா? என்று கேட்டார். அதற்கு அவன், (இல்லையே; நான் இந்த அழகான நிறத்தையும் தோலையும் மற்றும் திரண்ட இந்தச் செல்வத்தையும்) வாழையடி
வாழையாக (என் முன்னோர்களிடமிருந்து) வாரிசாகப் பெற்றேன் என்று பதிலளித்தான். உடனே அவ்வானவர், நீ (இக்கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு
எப்படி இருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும் என்று சொன்னார். பிறகு வழுக்கைத் தலையரிடம் தமது (பழைய) தோற்றத்திலும் அமைப்பிலும்
வந்து முன்பு இவரிடம் (தொழு நோயாளியிடம்) சொன்னதைப் போன்றே சொன்னார். அவனும் முதலாமவன்
அவருக்கு பதிலளித் ததைப் போன்றே பதிலளித்தான். வானவரும், நீ (உன் கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படியிருந்தாயோ அப்படியே உன்னை
அல்லாஹ் மாற்றி விடட்டும் என்று சொன்னார். பிறகு (இறுதியாக), குருடரிடம் தமது தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து, நான் ஓர் ஏழை மனிதன்; வழிப்போக்கன். என் வாழ்வாதாரம் (வழிச் செலவுக்கான பணம்) தீர்ந்துபோய்
விட்டது. இன்று உதவிக்கான வழிவகை (எனக்கு) அல்லாஹ் வையும், பிறகு உன்னையும் தவிர வேறெவரு மில்லை. என் பயணத்தில் என் தேவையைத் தீர்த்துக் கொள்ள
உதவும் ஆடு ஒன்றைத் தரும்படி உனக்குப் பார்வையைத் திரும்பத் தந்தவன் பெயரால் கேட்கின்றேன் என்று சொன்னார். (குருடராயிருந்து பார்வை பெற்ற) அந்த மனிதர் வானவரிடம், நான் குருடனாகத் தான் இருந்தேன். அல்லாஹ் என் பார்வையைத் திருப்பித் தந்தான். நான்
ஏழையாக இருந்தேன்; என்னைச் செல்வந்தனாக்கினான். ஆகவே, நீ விரும்புவதை எடுத்துக் கொள். அல்லாஹ்வின்
மீதாணை யாக! நான் இன்று நீ எடுக்கின்ற எந்தப் பொருளையும் திருப்பித் தரும்படி அல்லாஹ்
விற்காக சிரமப்படுத்த மாட்டேன். என்று சொன்னார். உடனே அவ்வானவர், உன் செல்வத்தை நீயே வைத்துக் கொள். இது உங்களைச் சோதிப்பதற்காகத் தான். அல்லாஹ்
உன்னைக் குறித்து திருப்தி யடைந்தான். உன் இரு தோழர்கள் (தொழு நோயாளி மற்றும் வழுக்கைத் தலையன்) மீது கோபம் கொண்டான் என்று சொன்னார்.
இதை அபூஹுரைரா (ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி (3464)