26 October 2016

தலாக்கின் சட்ட திட்டங்கள்

தலாக்கின் சட்ட திட்டங்கள்


விவாகரத்துச் சட்டம் எளிமையாக்கப்பட்டிருக்கும் அதே சமயம் அதற்குரிய முறைகளையும் இஸ்லாம் நமக்கு கற்றுத் தருகிறது. அது பற்றிய மார்க்க வழிகாட்டுதல்களைத் தருகின்றோம்.

கணவன் மனைவிக்கு மத்தியில் பிரச்சினை ஏற்படும் போது கணவன் மனைவியைப் பிரிவதற்கே தலாக் எனக் கூறப்படும். மனைவி கணவனைப் பிரிவதற்கு குலா என்று கூறப்படும்.

தலாக்கிற்கு முன் பின்பற்ற வேண்டிய நல்லிணக்க வழிமுறைகள்

கணவன் மனைவியிடம் வெறுக்கும் விஷயங்களைக் கண்டால் அவன் உடனடியாக தலாக் விட வேண்டும் என்ற முடிவை எடுப்பது கூடாது. தலாக்கிற்கு முன் கணவன் மனைவிக்கு மத்தியில் பிரவினை ஏற்படாமல் நல்லிணக்கம் ஏற்படுவதற்காக பல்வேறு வழிமுறைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

Ø  முதலில் மனைவிக்குச் சிறந்த முறையில் அறிவுரை கூறித் திருத்த முற்பட வேண்டும்.

Ø  அது பயன் தரவில்லை என்றால் தற்காலிகமாகப் படுக்கையிலிருந்து அவர்களை விலக்க வேண்டும்.

Ø  அதுவும் பயன் தராத போது அடித்துத் திருத்த வேண்டும்.

( எந்தச் சந்தர்ப்பத்திலும் மனைவியின் முகத்தில் அடிப்பதையும், காயம் ஏற்படும்படி அடிப்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிக வன்மையாகத் தடுத்துள்ளார்கள். (நூல்: புகாரி 1294, 1297)
விவாகரத்து என்ற அளவுக்குச் செல்வதைத் தடுக்கவே இலேசாக அடிக்க இஸ்லாம் அனுமதிக்கிறது.)

Ø  இதன் பிறகும் இருவருக்கிடையே நல்லிணக்கம் ஏற்படவில்லையானால் இருவரது குடும்பத்தைச் சேர்ந்த நடுவர்கள் மூலம் பேசித் தீர்க்க வேண்டும்.


தலாக்கிற்கு முன் பின்பற்றப்பட வேண்டிய இந்த நான்கு அடிப்படைகளையும் பின்வரும் திருக்குர்ஆன் வசனம் எடுத்துரைக்கிறது.


وَاللَّاتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ فَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلًا إِنَّ اللَّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا . وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوا حَكَمًا مِنْ أَهْلِهِ وَحَكَمًا مِنْ أَهْلِهَا إِنْ يُرِيدَا إِصْلَاحًا يُوَفِّقِ اللَّهُ بَيْنَهُمَا إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا خَبِيرًا  )النساء: 34، 35
(

மனைவியர் மாறுசெய்வதை நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! அவர்களைப் படுக்கைகளில் விலக்கி வையுங்கள்! அவர்களை (இலேசாக) அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டுவிட்டால் அவர்களுக்கு எதிராக எந்தவொரு வழியையும் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான்.

அவ்விருவருக்குமிடையில் பிரிவினை ஏற்பட்டு விடும் என்று நீங்கள் பயந்தால் அவனது குடும்பத்தாரிலிருந்து ஒரு நடுவரையும், அவளது குடும்பத்தாரிலிருந்து ஒரு நடுவரையும் அனுப்பி வையுங்கள்! அவ்விருவரும் சமாதானத்தை விரும்பினால் அல்லாஹ் அவர்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவான். அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், நன்கு தெரிந்தவனாகவும் இருக்கிறான். 

(அல்குர்ஆன் 4 : 34, 35)

இந்த நான்கு நடவடிக்கைகளாலும் கூட இணக்கம் ஏற்படவில்லையானால் அவர்கள் இணைந்து வாழ்வதில் அர்த்தமே இல்லை! இந்நிலையில் வேறு வழி ஏதுமின்றி தலாக்கை இஸ்லாம் அனுமதிக்கிறது.

மேற்கண்ட நடிவடிக்கைகள் மார்க்கத்தின் பிரகாரம் வெறுக்கக்கூடிய காரணங்களை மனைவியிடம் கண்டால் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்தான். இதற்குமாற்றமாக மனைவி வரதட்சணை தரவில்லை, சீர் செய்யவில்லை போன்ற மார்க்கத்திற்கு புறம்பான காரியங்களுக்காக மனைவியை வெறுத்து ஒருவன் தலாக் கூறினால் நிச்சயம் மறுமையில் இறைவனுடைய நரகத்திற்கு அவன் அஞ்சிக் கொள்ள வேண்டும்.

விவாகரத்துச் செய்யும் முறை

''உன்னை விவாகரத்துச் செய்கிறேன்'' என்று மனைவியிடம் கணவன் கூறுவதன் மூலம் விவாகரத்து ஏற்பட்டு விடும். இதற்கென எவ்விதச் சடங்குகளும் இல்லை.

அதே நேரத்தில எந்த ஒன்றையும் கவனிக்காம் ஒரே மூச்சில் ”தலாக், தலாக், தலாக்” என்று கூறுவது தலாக்கின் வழிமுறை கிடையாது. இதற்கு பல்வேறு நிபந்தனை இஸ்லாம் விதித்துள்ளது.
Ø  மனைவி மாதவிலக்கிலிருந்து குளித்து தூய்மையாக இருக்கும் காலகட்டத்தில்தான் தலாக் கூற வேண்டும். மாதவிடாய் நேரத்தில் தலாக் கூறுவது கூடாது. 
Ø  தலாக் கூறும் போது இரண்டு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
Ø  ஒரு தலாக் என்பது மூன்று மாதவிடாய்க் காலம் அதாவது மூன்று பரிசுத்த காலம் அவகாசம் கொண்டதாக இருக்க வேண்டும். இவ்வாறே மூன்று தலாக்கிற்கும் காத்திருக்கும் காலம் இருக்க வேண்டும். அந்தக் காலகட்டத்தை கணக்கிட வேண்டும்.
Ø  இந்த கணக்கிடும் காலகட்டத்தில் மனைவி கணவன் வீட்டில்தான் இருக்க வேண்டும். தெளிவான மானக் கேடான காரியங்களைச் செய்தாலே தவிர மனைவியை கணவன் வீட்டிலிருந்து வெளியேற்றக் கூடாது. மனைவியும் தானாக வெளியேறக் கூடாது.
Ø  இக்கால கட்டத்தில் மனைவிக்குரிய அனைத்து செலவீனங்களுக்கும் கணவனே  பொறுப்பாளியாவான்.
Ø  கணவன் மனைவி உறவு முறிந்து விட்டால் தலாக் விடப்பட்ட பெண்ணிற்கு ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டும்.
Ø  திருமணத்தின் போது வழங்கிய மஹரையோ, கணவன் மனைவியாக வாழும் காலகட்டத்தில் கணவன் மனைவிக்கு வழங்கிய எதையும் திருப்பிக் கேட்பது அறவே கூடாது.
மேற்கண்ட நிபந்தனைகளுக்குரிய சான்றுகளைக் காண்போம்.
பெண்களை விவாகரத்துச் செய்யும் போது அவர்கள் இத்தாவைக் கணக்கிடுவதற்கு தகுந்தவாறு அவர்களின் மாதவிலக்கை கவனித்து விவாகரத்துச் செய்ய வேண்டும். தன்னுடைய மனைவிக்கு எப்போது மாதவிடாய் ஏற்படும்.? எப்போது முடியும்? என்பதை தலாக் விடுபவன் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஏனெனில் தலாக்கினுடைய இத்தாக் காலம் மாதவிடாயிலிருந்து தூய்மையடைவதைக் கொண்டே கணக்கிடப்படவேண்டும்.

يَاأَيُّهَا النَّبِيُّ إِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَطَلِّقُوهُنَّ لِعِدَّتِهِنَّ وَأَحْصُوا الْعِدَّةَ وَاتَّقُوا اللَّهَ رَبَّكُمْ )الطلاق: 1(

நபியே! (நீர் கூறுவீராக!) நீங்கள் பெண்களை மணவிலக்குச் செய்தால் அவர்களின் காத்திருப்புக் காலத்தைக் கணக்கிடுவதற்கு ஏற்ற வகையில் மணவிலக்குச் செய்யுங்கள். நீங்களும் அக்காத்திருப்புக் காலத்தை கணக்கிட்டு வாருங்கள்! உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! 

(அல் குர்ஆன்
65 : 1)


மேற்கண்ட வசனத்தில் இத்தாவைக் கடைபிடிப்பதற்கேற்ப தலாக் விட வேண்டும் என அல்லாஹ் கூறுகிறான்.
இதிலிருந்து ஒரு பெண் மாதவிடாயிலிருந்து குளித்து தூய்மையாக இருக்கும் நாளில்தான் அவளை தலாக் விட வேண்டும்.


5333- حَدَّثَنَا حَجَّاجٌ ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ إِبْرَاهِيمَ ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِيرِينَ ، حَدَّثَنِي يُونُسُ بْنُ جُبَيْرٍ سَأَلْتُ ابْنَ عُمَرَ فَقَالَ طَلَّقَ ابْنُ عُمَرَ امْرَأَتَهُ وَهْيَ حَائِضٌ فَسَأَلَ عُمَرُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَمَرَهُ أَنْ يُرَاجِعَهَا ثُمَّ يُطَلِّقَ مِنْ قُبُلِ 
عِدَّتِهَا 

யூனுஸ் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் (மாதவிடாயிலிருக்கும் மனைவியை மண விலக்குச் செய்வது குறித்துக்) கேட்டேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
நான் மாதவிடாயிலிருந்த என் மனைவிக்கு மணவிலக்கு அளித்தேன். ஆகவே, (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் (இது குறித்து) வினவினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அவள்  இத்தா'வை எதிர்கொள்வதற்கேற்ற  நேரத்தில் (அதாவது மாதவிடாயிலிருந்து தூய்மை அடைந்த முதல் நாளில்) (விரும்பினால்) அவர் தலாக் சொல்லட்டும் என அவருக்கு உத்தரவிடுங்கள் என்று சொன்னார்கள்.
நூல் : புகாரி (5333)



மனைவி மாதவிடாயாக இருக்கும் போது தலாக் விடுவது கூடாது என்பதை பின்வரும் ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ ، حَدَّثَنَا هَمَّامُ بْنُ يَحْيَى ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَبِي غَلاَّبٍ يُونُسَ بْنِ جُبَيْرٍ ، قَالَ : قُلْتُ لاِبْنِ عُمَرَ رَجُلٌ طَلَّقَ امْرَأَتَهُ وَهْيَ حَائِضٌ فَقَالَ تَعْرِفُ ابْنَ عُمَرَ إِنَّ ابْنَ عُمَرَ طَلَّقَ امْرَأَتَهُ وَهْيَ حَائِضٌ فَأَتَى عُمَرُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَذَكَرَ ذَلِكَ لَهُ فَأَمَرَهُ أَنْ يُرَاجِعَهَا فَإِذَا طَهُرَتْ فَأَرَادَ أَنْ يُطَلِّقَهَا فَلْيُطَلِّقْهَا

 நான் மாதவிடாய்ப் பருவத்திலிருந்த என் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டேன். ஆகவே, (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் சென்று இது குறித்துத் தெரிவித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'உங்கள் புதல்வர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும்; அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையான பிறகு அவளை மணவிலக்குச் செய்ய விரும்பினால்  அவளை அவர் மணவிலக்குச் செய்துகொள்ளட்டும்' என உத்தரவிடுங்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலிநூல் : புகாரி (5258)


ஒருவர் தன்னுடைய மனைவியை தலாக் விடும் போது அவள் மாதவிலக்கிலிருந்து தூய்மையானவராக இருக்க வேண்டும். மாதவிலக்கின் போது தலாக் விடுவது கூடாது. மேலும் இத்தாக் காலத்தையும் கணக்கிட வேண்டும்.

வெளிநாட்டில் இருந்து கொண்டு அல்லது மனைவியை விட்டும் தூரமான இடத்தில் இருந்து கொண்டு கடிதத்தின் மூலம் தலாக் கூறினால் இது சாத்தியமாகுமா? மனைவியுடன் ஒரே வீட்டில் இருந்து கொண்டு அவளுடைய மாதவிலக்கு காலங்களை அறிந்து கொண்டால்தான் இது சாத்தியமாகும்.  எனவே கடிதத்தின் மூலம் தலாக் விடுதல் என்பது மார்க்கத்திற்கு எதிரானதாகும். கடிதம் மூலம் கூறிய தலாக் மார்க்க அடிப்படையில் செல்லத்தக்கதல்ல.

ஒருவன் தன்னுடைய மனைவியை இரண்டு சாட்சிகளை வைத்து தலாக் கூறிவிட்டால் உடனே இருவரும் பிரிந்து விட வேண்டும் என்பது கிடையாது. இருவரும் ஒரே வீட்டில்தான் தங்கியிருக்க வேண்டும். இருவருக்கும் மத்தியில் இல்லற வாழ்க்கை மட்டும் நிகழாதே தவிர இருவரும் கணவன் மனைவியைப் போன்றுதான் வாழவேண்டும். தலாக்விடப்பட்டவள் தானாக விரும்பிக்கூட கணவனின் வீட்டை விட்டும் வெளியேறக்கூடாது. கணவனும் அவளை தன்னுடைய வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறக்கூடாது. 

கணவன் மனைவிக்கு மத்தியில் எப்படியாவது உறவு ஏற்பட வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு தலாக்கினுடைய வழிமுறைகளை ஆக்கியிருக்கின்றான். 

 தன்னுடைய மனைவி மானக்கேடான காரியத்தைச் செய்ததற்காக அவளை தலாக்விட்டால் மட்டுமே அவளை கணவனின் வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும். இதனை பின்வரும் வசனத்திலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

لَا تُخْرِجُوهُنَّ مِنْ بُيُوتِهِنَّ وَلَا يَخْرُجْنَ إِلَّا أَنْ يَأْتِينَ بِفَاحِشَةٍ مُبَيِّنَةٍ وَتِلْكَ حُدُودُ اللَّهِ وَمَنْ يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَقَدْ ظَلَمَ نَفْسَهُ لَا تَدْرِي لَعَلَّ اللَّهَ يُحْدِثُ بَعْدَ ذَلِكَ أَمْرًا (الطلاق)

அப்பெண்கள் பகிரங்க மானக்கேட்டைச் செய்தாலே தவிர அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றி விடாதீர்கள்! அப்பெண்கள் (தாமாக) வெளியேறவும் வேண்டாம். இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். யார் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகிறாரோ அவர் தனக்கே அநியாயம் செய்து கொண்டார். இதன்பின்னர் (இணக்கத்திற்கான) ஏதேனும் ஓர் ஏற்பாட்டை அல்லாஹ் உருவாக்கக்கூடும் என்பதை நீர் அறிய மாட்டீர்.

      (அல் குர்ஆன் 65 : 1)


கணவர் தன்னுடைய மனைவியை தலாக் கூறினால் அந்த தலாக்கிற்குப் பிறகு மனைவி மறுதிருமணம் செய்யாமல் கணவர் வீட்டிலேயே காத்திருக்க வேண்டிய கால அளவு மூன்று மாதவிடாய் காலம் ஆகும்.

وَالْمُطَلَّقَاتُ يَتَرَبَّصْنَ بِأَنْفُسِهِنَّ ثَلَاثَةَ قُرُوءٍ وَلَا يَحِلُّ لَهُنَّ أَنْ يَكْتُمْنَ مَا خَلَقَ اللَّهُ فِي أَرْحَامِهِنَّ إِنْ كُنَّ يُؤْمِنَّ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَبُعُولَتُهُنَّ أَحَقُّ بِرَدِّهِنَّ فِي ذَلِكَ إِنْ أَرَادُوا إِصْلَاحًا وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ )البقرة: 228(

மணவிலக்குச் செய்யப்பட்ட பெண்கள் தமக்(கு மறுமணம் செய்வதற்)காக மூன்று மாதவிடாய் காலம் எதிர்பார்த்திருக்க வேண்டும். அவர்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருந்தால், அவர்களின் கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை அவர்கள் மறைக்கக் கூடாது. இ(க்காத்திருப்புக் காலத்)தில் அவர்கள் இணக்கத்தை நாடினால் அப்பெண்களைத் திருப்பி அழைத்துக் கொள்வதற்கு அவர்களுடைய கணவர்களே அதிக உரிமை படைத்தவர்கள். பெண்கள்மீதுள்ள கடமைகளைப் போன்றே அவர்களுக்கு முறைப்படியான உரிமைகளும் உண்டு. அவர்களைவிட ஆண்களுக்கு ஒருபடி உயர்வுண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; நுண்ணறிவாளன்.

அல்குர்ஆன் (2 : 228)

இந்த மூன்று மாதவிடாய்க் கால அவகாசம் கணவன் மனைவிக்கு மத்தியில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே இஸ்லாம் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அல்லாஹ் கூறுகிறான்.

لَعَلَّ اللَّهَ يُحْدِثُ بَعْدَ ذَلِكَ أَمْرًا (الطلاق)

இதன்பின்னர் (இணக்கத்திற்கான) ஏதேனும் ஓர் ஏற்பாட்டை அல்லாஹ் உருவாக்கக்கூடும்

(அல்குர்ஆன் 65 : 1)

என்பது தான் அந்தக் காரணம்.

விவாகரத்துச் செய்த உடன் மனைவி தனது தாய்வீட்டுக்குப் போய்விட்டால் அந்தப் பிரிவு நிரந்தரமாகி விடக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. கணவன் வீட்டிலேயே அவள் இருந்தால் இருவருக்கும் இடையே உறவு ஏற்பட்டு முதல் விவாகரத்து முடிவுக்கு வந்து விடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.


இருவருக்கும் இடையே இணைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பளிக்கும் முகமாகவே வீட்டை விட்டு வெளியேற்றாதீர்கள் என்று ஆண்களுக்கும், வெளியேறாதீர்கள் என்று பெண்களுக்கும் அல்லாஹ் கட்டளை பிறப்பிக்கிறான்.

மனைவி விபச்சாரம் செய்த காரணத்துக்காக விவாகரத்து நடந்தால் மட்டும் விவாகரத்து நடந்தவுடன் அவர்களை வெளியேற்றலாம் என்பதும் இவ்வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.
நல்லிணக்கம் ஏற்படுவதற்கு திருக்குர்ஆன் குறிப்பிடும் அவகாசம் வழங்கப்படாமல் ஒரே மூச்சில் தலாக், தலாக், தலாக் என்று கூறினால் அது தலாக்காகவே கருதப்படாது. ஒரு தலாக் கூறி நல்லிணக்கம் ஏற்படுவதற்கான இந்தகாலகட்டம் வழங்கப்பட்டாலே அது முறையான ஒரு தலாக்காக கருதப்படும்.

நல்லிணக்கம் ஏற்படுவதற்கு இறைவன் வழங்கிய காலகட்டத்தில் கணவன் மனைவிக்கு மத்தியில் நல்லிணக்கம் ஏற்பட்டு விடும் என்றால் கணவன் மனைவியை திரும்பச் சேர்த்துக் கொள்ளலாம். அவர்களுக்குள் கணவன் மனைவி பந்தம் முறியாது.

وَبُعُولَتُهُنَّ أَحَقُّ بِرَدِّهِنَّ فِي ذَلِكَ إِنْ أَرَادُوا إِصْلَاحًا

இ(க்காத்திருப்புக் காலத்)தில் அவர்கள் இணக்கத்தை நாடினால் அப்பெண்களைத் திருப்பி அழைத்துக் கொள்வதற்கு அவர்களுடைய கணவர்களே அதிக உரிமை படைத்தவர்கள்.

(அல்குர்ஆன் 2 :  228)

கணவன் மனைவியை முதல் தலாக் கூறி - நல்லிணக்கம் ஏற்படுவதற்கு இறைவன் ஏற்படுத்திய மூன்று மாதவிடாய் காலத்திற்குள் - அவர்களுக்கு மத்தியில் நல்லிணக்கம் ஏற்பட்டு கணவன் மனைவியை திரும்ப அழைத்துக் கொள்ளவில்லையென்றால் அந்த இருவருக்கும் மத்தியில் கணவன் மனைவி என்ற உறவு முறிந்து விடும்.

தலாக் விடப்பட்ட பெண் தான் விரும்பும் வேறு கணவரை திருமணம் செய்து கொள்ளலாம். அல்லது முதல் கணவனோடு மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினால் அப்போதும் முறையாக மஹர் கொடுத்து சாட்சிகள் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இது பற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.


وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا تَعْضُلُوهُنَّ أَنْ يَنْكِحْنَ أَزْوَاجَهُنَّ إِذَا تَرَاضَوْا بَيْنَهُمْ بِالْمَعْرُوفِ ذَلِكَ يُوعَظُ بِهِ مَنْ كَانَ مِنْكُمْ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكُمْ أَزْكَى لَكُمْ وَأَطْهَرُ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ )البقرة: 232
(
பெண்களை நீங்கள் மணவிலக்குச் செய்து, அவர்கள் தமது தவணையை அடையும்போது, அப்பெண்கள் தம(து விருப்பத்து)க்குரிய கணவர்களை, அவர்கள் தமக்கிடையே பொருந்திக் கொண்டு நன்முறையில் (மறு) திருமணம் செய்வதைத் தடுக்காதீர்கள். இதன் மூலம், உங்களில் அல்லாஹ்வின்மீதும், மறுமை நாள்மீதும் நம்பிக்கை கொண்டவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இதுவே உங்களுக்கு மிகவும் அப்பழுக்கற்றதும் தூய்மையானதும் ஆகும். அல்லாஹ்வே அறிகிறான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.

(அல்குர்ஆன் 2 : 232)


மேற்குறிப்பிட்ட வசனத்தில் ” தம(து விருப்பத்து)க்குரிய கணவர்களை” என்று அல்லாஹ் குறிப்பிடுவதிலிருந்து அது தலாக் விட்ட முதல் கணவரை மீண்டும் திருமணம் செய்து கொள்வதையும் எடுத்துக் கொள்ளும், அல்லது வேறு நபர்களை திருணம் செய்து கொள்வதையும் எடுத்துக் கொள்ளும்.


காத்திருக்கும் காலம் மூன்று தலாக்கிற்கும் உண்டு.
ஒருவர் தன்னுடைய மனைவியை தலாக் என்று கூறியவுடன் கணவன் மனைவி உறவு முறிந்து விடாது மாறாக நல்லிணக்கம் ஏற்படுவதற்காக மூன்று மாதவிடாய்க் காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று திருக்குர்ஆன் குறிப்பிட்டதை நாம் கண்டோம்.

இந்த காத்திருக்கும் காலம் மூன்று தலாக்கிற்கும் உரியதாகும். அதாவது முதல் தலாக் கூறிய பிறகு ஒரு பெண் மூன்று மாதவிடாய்க் காலம் மறுதிருமணம் செய்யாமல் காத்திருப்தைப் போல் இரண்டு தலாக் கூறிய பிறகும் மறுதிருமணம் செய்யாமல் மூன்று மாதவிடாய்க் காலம் காத்திருக்க வேண்டும். அது போன்று மூன்றாவது தலாக் கூறிய பிறகும் மறுதிருமணம் செய்யாமல் மூன்று மாதவிடாய்க் காலம் காத்திருக்க வேண்டும்.

முதல் தலாக்கிற்குப் பிறகு காத்திருக்கும் காலத்தில் கணவன் மனைவியை திரும்ப அழைத்துக் கொள்ளலாம், காத்திருக்கும் காலத்திற்குள் திரும்ப அழைக்காமல் கணவன் மனைவி உறவு முறிந்து விட்டால் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினால் மறுதிருமணம் செய்து கொள்ளலாம்.

இரண்டாவது தலாக்கிற்குப் பிறகும் காத்திருக்கும் காலத்தில் கணவன் மனைவியை திரும்ப அழைத்துக் கொள்ளலாம். அல்லது காத்திருக்கும் காலம் முடிந்து கணவன் மனைவி உறவு முறிந்து விட்டால் இருவரும் சேர்ந்து வாழ விரும்பினால் மறுதிருமண் செய்து கொள்ளலாம்.
ஆனால் இவ்வாறு காத்திருக்கும் காலத்திற்குள் மனைவியை திரும்ப அழைத்துக் கொள்வதும், அல்லது காத்திருக்கும் காலம் முடிந்து விட்டால் மறுதிருமணம் மூலம் இணைந்து கொள்வதும் முதல் இரண்டு தலாக்கிற்கு மட்டும்தான்.

இது பற்றி திருமறைக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

الطَّلَاقُ مَرَّتَانِ فَإِمْسَاكٌ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌ بِإِحْسَانٍ

இந்த(த் திருப்பி அழைத்துக் கொள்ளும்) மணவிலக்கு இரண்டு தடவைதான். பின்னர் முறைப்படி சேர்ந்து வாழ வேண்டும்; அல்லது அழகிய முறையில் விடுவித்துவிட வேண்டும்.
 
(அல்குர்ஆன் 2 : 229)


ஒருவன் தன்னுடைய மனைவியை இரண்டு தடவை தலாக் கூறி திரும்ப அழைத்துக் கொண்ட பிறகு அல்லது மறுதிருமணம் செய்து கொண்ட பிறகு மூன்றாவது தடவை தலாக் கூறினால் காத்திருக்கும் காலம் முடிந்த பிறகு மனைவி வேறு ஒருவரைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

மூன்றாவது தலாக் கூறிய பிறகு காத்திருக்கும் காலத்தில் திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமையோ அல்லது காத்திருக்கும் காலம் முடிந்து விட்டால் இருவரும் மறுதிருமணத்தின் மூலம் சேர்ந்து கொள்ளும் உரிமையோ இருவருக்கும் கிடையாது. 

அதே நேரத்தில் அப்பெண் மற்றொரு ஆணை திருமணம் செய்து அவர் அப்பெண்ணை தலாக் கூறி - காத்திருக்கும் காலகட்டத்தில் திரும்ப அழைத்துக் கொள்ளாமல்- அவர்களுக்கு மத்தியில் திருமண உறவு முறிந்து விடும் என்றால் அப்பெண் மீண்டும் முதல் கணவரோடு திருமணத்தின் மூலம் சேர்ந்து கொள்ள விரும்பினால் சேர்ந்து வாழலாம்.

இது பற்றி திருமறைக்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

فَإِنْ طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِنْ بَعْدُ حَتَّى تَنْكِحَ زَوْجًا غَيْرَهُ فَإِنْ طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَنْ يَتَرَاجَعَا إِنْ ظَنَّا أَنْ يُقِيمَا حُدُودَ اللَّهِ وَتِلْكَ حُدُودُ اللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ )البقرة: 230(

அவன் அவளை (மூன்றாவது தடவை) மணவிலக்குச் செய்து விட்டால், அதன் பிறகு அவனல்லாத வேறு கணவனை அவள் திருமணம் செய்யும் வரை அவனுக்கு அனுமதிக்கப்பட்டவள் அல்ல. இவனும் அவளை மணவிலக்குச் செய்து விட்டால் (அவளும், முந்தைய கணவனும் ஆகிய) இருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநாட்டுவார்கள் என்று எண்ணினால் அவ்விருவரும் மீண்டும் (திருமணம் செய்து) சேர்ந்து கொள்வது அவர்கள்மீது குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். அறிந்து கொள்ளும் சமுதாயத்திற்கு இவற்றை அவன் தெளிவாக்குகின்றான்.


(அல்குர்அன் 2 : 230)

ஒவ்வொரு தலாக்கிற்கும் பிறகும் காத்திருக்கும் காலம் அவசியமாகும். ஒருவன் ஒரே நேரத்தில் தலாக், தலாக், தலாக் என்று மூன்று தடவை கூறினாலும், மூவாயிரம் தடவை கூறினாலும் அது ஒரு தலாக்காகத்தான் கருதப்படும். நபியவர்கள் இவ்வாறுதான் கணக்கிட்டுள்ளார்கள்.


عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ كَانَ الطَّلاَقُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- وَأَبِى بَكْرٍ وَسَنَتَيْنِ مِنْ خِلاَفَةِ عُمَرَ طَلاَقُ الثَّلاَثِ وَاحِدَةً


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மற்றும் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிக் காலத்திலும், உமர் (ரலி) அவர்களது ஆட்சியின் (முதல்) இரண்டு ஆண்டுகளிலும் முத்தலாக் ஒரு தலாக்காகவே (நடைமுறையில்) இருந்தது.

அறிவிப்பவர்  : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : முஸ்லிம் (2932)

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாதவிடாய் ஏற்படாத பெண்களின் இத்தாக் காலம்
ஒருவர் தனது மனைவியை தலாக் கூறிய பிறகு அவர்களுக்கு மத்தியில் நல்லிணக்கம் ஏற்படுவதற்காக காத்திருக்கும் காலத்தை இறைவன் ஏற்படுத்தியுள்ளான் என்பதையும் அக்காலத்தில் பெண்கள் மறுதிருமணம் செய்யாமல் காத்திருக்க வேண்டும் என்பதையும் முன்னர் பார்த்தோம்.

மாதவிடாய் ஏற்பபடும் பெண்களுக்கு காத்திருக்கும் காலம் மூன்று மாதவிடாய்க் காலம் ஆகும்.
அதே நேரத்தில் ஒருவர் தனது மனைவியை முதல் தலாக் அல்லது இரண்டாவது தலாக் கூறும்  போது அவர் கர்ப்பிணியாக இருந்தால் அவள் பிரசவிக்கும் வரை மறுதிருமணம் செய்யாமல் காத்திருக்க வேண்டும். அவள் பிரசவிப்பதற்குள் திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமை கணவனுக்கு உள்ளது. அவள் பிரசவிப்பதற்குள் திரும்ப அழைத்துக் கொள்ளவில்லையென்றால் அவர்களுக்குள் திருமண உறவு முறிந்து விடும். அவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினால் மீண்டும் மறுதிருமணத்தின் மூலம் சேர்ந்து கொள்ளலாம்.

ஆனால் ஒருவர் மூன்றாவது தலாக் கூறும் போது மனைவி கர்ப்பிணியாக இருந்தால் அவளை மீண்டும் அழைத்துக் கொள்ளும் உரிமை கணவருக்கு கிடையாது. அவள் பிரசவித்த பிறகு வேறு ஒருவரைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். மீண்டும் முதல் கணவரோடு சேர்ந்து வாழ விரும்பினால் முன்னர் கூறி வழிமுறைகளின் பிரகாரம்தான் முடியும்.

அது போன்றே மாதவிடாய் ஏற்படாத பெண்களுக்கும், மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களுக்கும் காத்திருக்கும் காலம் மூன்று மாதங்களாகும். இவற்றிலும் மேற்கூறப்பட்ட சட்டங்கள் பின்பற்றப்பட வேண்டும்.


இது பற்றி திருமறைக் குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.


وَاللَّائِي يَئِسْنَ مِنَ الْمَحِيضِ مِنْ نِسَائِكُمْ إِنِ ارْتَبْتُمْ فَعِدَّتُهُنَّ ثَلَاثَةُ أَشْهُرٍ وَاللَّائِي لَمْ يَحِضْنَ وَأُولَاتُ الْأَحْمَالِ أَجَلُهُنَّ أَنْ يَضَعْنَ حَمْلَهُنَّ وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مِنْ أَمْرِهِ يُسْرًا . ذَلِكَ أَمْرُ اللَّهِ أَنْزَلَهُ إِلَيْكُمْ وَمَنْ يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا . )الطلاق: 4، 5(


உங்கள் பெண்களில் மாதவிடாய் நின்றுவிட்டவர்கள் குறித்து நீங்கள் சந்தேகித்தால் அவர்களுக்கும், மாதவிடாய் ஏற்படாதோருக்கும் அவர்களின் காத்திருப்புக் காலம் மூன்று மாதங்களாகும். கருவுற்ற பெண்களுக்குரிய தவணை அவர்கள் தமது குழந்தையைப் பெற்றெடுப்பதாகும். அல்லாஹ்வை அஞ்சுபவருக்கு அவரது செயலை அவன் எளிதாக்குவான்.

இது அல்லாஹ்வின் ஆணையாகும். அதை உங்களுக்கு அருளியுள்ளான். அல்லாஹ்வை அஞ்சுபவரின் தீமைகளை அவரிடமிருந்து அவன் அழித்து விடுவான். அவருக்கான கூலியை மகத்தானதாக ஆக்குவான்.

(அல்குர்ஆன் 65 : 4, 5)

காத்திருக்கும் காலகட்டத்தில் மனைவியின் செலவீனங்களுக்கு கணவனே பொறுப்பு

இறைவன் அனுமதித்திருக்கும் மூன்று தலாக்கில் ஒவ்வொரு தலாக்கிற்குப் பிறகும் மாதவிடாய் ஏற்படும் பெண்களுக்கும், கர்ப்பிணிப்பெண்களுக்கும், மாதவிடாய் ஏற்படாத பெண்களுக்கும், மாதவிடாய் அற்றுப் போன பெண்களுக்கும் உரிய காத்திருக்கும் காலகட்டத்தை திருமறைக்குர்ஆன் குறிப்பிட்டுள்ளது.

இதில் முதல் இரண்டு தலாக்கிற்குப் பிறகுள்ள காலம் கணவன் மனைவியை திரும்ப அழைத்துக் கொள்வதற்கு உரிய காலகட்டமாகும்.

மூன்றாவது தலாக் கூறிவிட்டால் கணவன் மனைவியை திரும்ப அழைத்து கொள்ள முடியாது. மனைவி காத்திருக்கும் காலம் முடிந்த பிறகு தனக்கு பிடித்த வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளலாம்.

மூன்று தலாக்கிற்குமுரிய இந்த காத்திருக்கும் காலகட்டத்தில் மனைவி கணவனின் வீட்டில்தான் இருக்க வேண்டும். மனைவியின் செலவீனங்கள் அனைத்திற்கும் கணவனே பொறுப்பாளியாவான்.

அது போன்று ஒருவன் தன்னுடைய மனைவியை தலாக் விட்ட பிறகு இவன் மூலம் அவளுக்குப் பிறந்த குழந்தைக்கு அவள் பாலூட்டினால் அந்தப் பாலூட்டும் காலகட்டத்தில் அவளுக்கான அனைத்து செலவீனங்களுக்கும், குழந்தையின் செலவீனங்களுக்கும் கணவனே பொறுப்பாளியாவான்.


இது பற்றி திருமறைக்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.


أَسْكِنُوهُنَّ مِنْ حَيْثُ سَكَنْتُمْ مِنْ وُجْدِكُمْ وَلَا تُضَارُّوهُنَّ لِتُضَيِّقُوا عَلَيْهِنَّ وَإِنْ كُنَّ أُولَاتِ حَمْلٍ فَأَنْفِقُوا عَلَيْهِنَّ حَتَّى يَضَعْنَ حَمْلَهُنَّ فَإِنْ أَرْضَعْنَ لَكُمْ فَآتُوهُنَّ أُجُورَهُنَّ وَأْتَمِرُوا بَيْنَكُمْ بِمَعْرُوفٍ وَإِنْ تَعَاسَرْتُمْ فَسَتُرْضِعُ لَهُ أُخْرَى . لِيُنْفِقْ ذُو سَعَةٍ مِنْ سَعَتِهِ وَمَنْ قُدِرَ عَلَيْهِ رِزْقُهُ فَلْيُنْفِقْ مِمَّا آتَاهُ اللَّهُ لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا مَا آتَاهَا سَيَجْعَلُ اللَّهُ بَعْدَ عُسْرٍ يُسْرًا  )الطلاق: 6، 7(

உங்களின் வசதிக்கேற்ப, உங்கள் வசிப்பிடத்தில் அவர்களையும் வசிக்கச் செய்யுங்கள். அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்! அவர்கள் கருவுற்றவர்களாயிருந்தால் தமது குழந்தையைப் பெற்றெடுக்கும்வரை அவர்களுக்காகச் செலவிடுங்கள். உங்களுக்காக(க் குழந்தைக்கு) அவர்கள் பாலூட்டினால் அவர்களுக்குரிய கூலியைக் கொடுத்துவிடுங்கள்! உங்களுக்கிடையே நல்லமுறையில் ஆலோசித்துக் கொள்ளுங்கள். (இதில்) உங்களுக்குச் சிரமம் இருந்தால் அக்குழந்தைக்கு மற்றொருத்தி பாலூட்டட்டும்.

வசதியுள்ளவர், தனது வசதிக்கேற்ப செலவு செய்யட்டும். யாருக்கு வாழ்வாதாரம் குறைத்து வழங்கப்பட்டுள்ளதோ அவர், தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து செலவு செய்யட்டும். எவருக்கும் தான் வழங்கியதைத் தவிர (அதற்கு மேல்) அவரை அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். கஷ்டத்திற்குப்பின் அல்லாஹ் எளிதானதை ஏற்படுத்துவான்.

(அல்குர்ஆன் 65 : 6,7)


وَالْوَالِدَاتُ يُرْضِعْنَ أَوْلَادَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ لِمَنْ أَرَادَ أَنْ يُتِمَّ الرَّضَاعَةَ وَعَلَى الْمَوْلُودِ لَهُ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ لَا تُكَلَّفُ نَفْسٌ إِلَّا وُسْعَهَا لَا تُضَارَّ وَالِدَةٌ بِوَلَدِهَا وَلَا مَوْلُودٌ لَهُ بِوَلَدِهِ وَعَلَى الْوَارِثِ مِثْلُ ذَلِكَ فَإِنْ أَرَادَا فِصَالًا عَنْ تَرَاضٍ مِنْهُمَا وَتَشَاوُرٍ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا وَإِنْ أَرَدْتُمْ أَنْ تَسْتَرْضِعُوا أَوْلَادَكُمْ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ إِذَا سَلَّمْتُمْ مَا آتَيْتُمْ بِالْمَعْرُوفِ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ )البقرة: 233(

(மணவிலக்குச் செய்யப்பட்ட மனைவியின் மூலம்) பாலூட்டுவதை முழுமைப்படுத்த வேண்டும் என விரும்புபவருக்காகத் தாய்மார்கள் இரண்டு முழு ஆண்டுகள் தமது குழந்தைகளுக்குப் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நன்முறையில் உணவளிப்பதும், ஆடை வழங்குவதும் தந்தைக்குக் கடமையாகும். எவரும் அவரது சக்திக்கு மீறி நிர்ப்பந்திக்கப்பட மாட்டார். தாய் தனது குழந்தையின் காரணமாகவோ, அல்லது தந்தை தனது குழந்தையின் காரணமாகவோ சிரமப்படுத்தப்பட மாட்டார்கள். (தந்தை இறந்து விட்டால்) வாரிசுதாரர்மீது இதுபோன்ற கடமை உள்ளது. இருவரும் உடன்பட்டு, ஆலோசித்துப் பாலூட்டுவதை நிறுத்த விரும்பினால் இருவர்மீதும் குற்றமில்லை. செவிலித் தாய் மூலம் உங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட விரும்பினால், நீங்கள் கொடுக்க வேண்டியதை நல்ல முறையில் கொடுத்து விட்டால் உங்கள்மீது குற்றமில்லை. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அல்லாஹ், நீங்கள் செய்வதைப் பார்ப்பவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். 


(அல்குர்ஆன் 2 : 233)

காத்திருப்புக் காலம் தேவையற்ற பெண்கள்

சில சூழ்நிலைகளில் திருமண ஒப்பந்தம் முடிந்து கணவன் மனைவி தாம்பத்யம் துவங்குவதற்கு முன்பாகவே அவர்களுக்குள் பிரிவினை ஏற்படலாம்.

மனைவியுடன் சேர்ந்து வாழ்வதற்கே தகுதியில்லாத மிகப் பெரும் குறை அவளிடம் இருந்திருக்கலாம்.

இந்நிலையில் இருவருக்கும் மத்தியில் சமாதானம் செய்தும்  இணைந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டால் அவர்கள் தலாக்கின் மூலம் பிரிந்து விடலாம்.  

இந்நிலையில் கணவன் மனைவியை தலாக் கூறிவிட்டால் அவள் உடனடியாக தான் விரும்பியவரை மறுமணம் செய்து கொள்ளலாம். மறுதிருமணம் செய்வதற்காக காத்திருப்புக் காலம் எதுவும் அவள் மீது கடமையில்லை. ஆனால் அவளுக்கு ஜீவனாம்சம் வழங்குவது அவசியமாகும்.


يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نَكَحْتُمُ الْمُؤْمِنَاتِ ثُمَّ طَلَّقْتُمُوهُنَّ مِنْ قَبْلِ أَنْ تَمَسُّوهُنَّ فَمَا لَكُمْ عَلَيْهِنَّ مِنْ عِدَّةٍ تَعْتَدُّونَهَا فَمَتِّعُوهُنَّ وَسَرِّحُوهُنَّ سَرَاحًا جَمِيلًا (الأحزاب: 49)


இறைநம்பிக்கை கொண்டோரே! இறைநம்பிக்கை கொண்ட பெண்களை நீங்கள் மணமுடித்து, பின்னர் அவர்களைத் தீண்டுவதற்கு முன் மணவிலக்குச் செய்து விட்டால் உங்களுக்காக நீங்கள் கணக்கிடும் இத்தா’ (காத்திருத்தல்) எதுவும் அப்பெண்கள்மீது கடமையில்லை. எனவே, நீங்கள் அவர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கி, அழகிய முறையில் அவர்களை விட்டுவிடுங்கள்!

அல்குர்ஆன் 33 : 49


நீங்கள் பெண்களைத் தீண்டாமலோ அல்லது அவர்களுக்கு மணக்கொடையை நிர்ணயிக்காமலோ அவர்களை மணவிலக்குச் செய்தால் உங்கள்மீது குற்றமில்லை. வசதியுடையவர் தனது சக்திக்கேற்பவும், வசதி குறைந்தவர் தனது சக்திக்கேற்பவும் அழகிய முறையில் அவர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குங்கள். (இது) நன்மை செய்வோர்மீது கடமையாகும்.

நீங்கள் அவர்களுக்கு மணக்கொடையை நிர்ணயித்து, அவர்களைத் தீண்டுவதற்கு முன் மணவிலக்குச் செய்தால் நீங்கள் நிர்ணயித்ததில் சரிபாதி (அவர்களுக்கு) உண்டு. அப்பெண்கள் விட்டுக் கொடுத்தாலோ அல்லது திருமண ஒப்பந்தம் யாருடைய அதிகாரத்தில் இருக்கிறதோ - அ(க்கண)வர் விட்டுக் கொடுத்தாலோ தவிர. (ஆண்களாகிய) நீங்கள் விட்டுக் கொடுப்பதே இறையச்சத்திற்கு மிக நெருக்கமானது. உங்களுக்கிடையே தாராளத்தன்மையை மறந்துவிடாதீர்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன். 


(அல்குர்ஆன் 2 : 236, 237)


மேற்கண்ட வசனங்களில் மனைவியோடு தாம்பத்தியத்தில் ஈடுபடாத நிலையில் தலாக் கூற வேண்டிய நிலை ஏற்பட்டால் தலாக்கிற்குப் பிறகு அவர்கள் இத்தா அனுசரிக்க வேண்டியதில்லை என்று அல்லாஹ் கூறிவிட்டு அவர்களுக்கு ”வாழ்க்கை வசதி அளிக்க வேண்டும்” என்று கூறுகிறான்.


இந்த வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடும் வாழ்க்கை வசதி என்பது ”காத்திருக்கும் காலத்தில் மனைவிக்காக வழங்கப்படும் செலவீனததைக் குறிக்காது. ஏனெனில் இந்த வசனத்தில் இத்தா தேவையில்லாத பெண்களுக்குத்தான் வாழ்க்கை வசதி அளிக்க வேண்டும் என்கின்றான்.
இது தலாக் விடப்பட்ட பெண்களுக்கு கணவனின் வசதிக்குத் தகுந்தவாறு வழங்கப்பட வேண்டிய ஜீவனாம்சம் என்ற பெரும் தொகையையே குறிக்கிறது.


இது பற்றி ஜீவனாம்சம் என்ற தலைப்பிலும் விளக்கப்பட்டுள்ளது.

 மஹரை திருப்பிக் கேட்பது கூடாது
ஒருவன் தன்னுடைய மனைவியை தலாக்கின் மூலம் பிரிந்து விட்டால் அவன் அவளுக்கு திருமணத்தின் போது வழங்கிய மஹரையோ, கணவன் மனைவியாக வாழும் காலகட்டத்தில் வழங்கிய அன்பளிப்புகளையோ, செலவீனங்களையோ திருப்பிக் கேட்பது கூடாது.

திருமணத்தின் போது ஒரு பொற்குவியலையே மஹராக வழங்கியிருந்தாலும் கூட தலாக்கின் மூலம் பிரிந்து விட்டால் திருப்பிக் கேட்க அனுமதியில்லை.

இது தொடர்பாக திருமறைக் குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.


{وَإِنْ أَرَدْتُمُ اسْتِبْدَالَ زَوْجٍ مَكَانَ زَوْجٍ وَآتَيْتُمْ إِحْدَاهُنَّ قِنْطَارًا فَلَا تَأْخُذُوا مِنْهُ شَيْئًا أَتَأْخُذُونَهُ بُهْتَانًا وَإِثْمًا مُبِينًا (20) وَكَيْفَ تَأْخُذُونَهُ وَقَدْ أَفْضَى بَعْضُكُمْ إِلَى بَعْضٍ وَأَخَذْنَ مِنْكُمْ مِيثَاقًا غَلِيظًا} [النساء: 20، 21]


நீங்கள் (மணவிலக்குச் செய்த) ஒரு பெண்ணின் இடத்தில் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய விரும்பினால் (மணவிலக்குச் செய்யப்பட்ட) அவளுக்கு நீங்கள் ஒரு (பொற்)குவியலையே கொடுத்திருந்தாலும் அதிலிருந்து எதையும் எடுத்துக் கொள்ளாதீர்கள்! அநியாயமாகவும், பகிரங்கமான பாவமாகவும் இருக்கும் நிலையில் அதை நீங்கள் எடுத்துக் கொள்ளலாமா?

உங்களிடம் அவர்கள் உறுதியான உடன்படிக்கை ஏற்படுத்தி, நீங்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்துவிட்ட நிலையில் எப்படி நீங்கள் அதை எடுத்துக் கொள்ள முடியும்?

(அல்குர்ஆன் 4 : 20, 21)


கணவன் மனைவியாக வாழும் காலகட்டத்தில் அன்பளிப்பாக வழங்கியவற்றையும் தலாக்கிற்குப் பிறகு திருப்பிக் கேட்பது கூடாது


قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْعَائِدُ فِي هِبَتِهِ كَالْكَلْبِ يَقِيءُ ثُمَّ يَعُودُ فِي قَيْئِهِ.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  தன் அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவன் வாந்தியெடுத்த பிறகு, அதை மீண்டும் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான்.

அறிவிப்பவர் ; இப்னு அப்பாஸ் (ரலி)  நூல் ; புகாரி (2589)

விவாகரத்திற்கு சாட்சிகள்
தலாக்கின் போது இரண்டு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

 சாட்சியாக இருப்பவர்கள்

எப்போது தலாக் கூறினார்?

காத்திருப்புக்காலத்தில் மனைவிக்கு தங்குமிடம் மற்றும் செலவீனங்களை வழங்கினாரா?

தலாக் கூறி சரியாக மூன்று மாதவிடாய் காலம் கழிந்துள்ளதா? மற்ற நிலையிலுள்ள பெண்களாக இருந்தால் அதற்குரிய கால வரை முழுமையடைந்துள்ளதா?

தலாக்கின் மூலம் பிரிந்து விட்டால் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்கினாரா?

போன்ற விசயங்களுக்கு சாட்சியாக இருக்க வேண்டும். இவர்கள் அல்லாஹ்விற்காக சாட்சி கூறவேண்டும். பொய்சாட்சியாகவோ, ஒருவருக்கு சாதகமாகவோ சாட்சி கூறுவது கூடாது. அவ்வாறு பொய்சாட்சி கூறினால் அதற்கான விளைவை அவர்கள் மறுமையில் சந்திப்பார்கள்.

وَأَشْهِدُوا ذَوَيْ عَدْلٍ مِنْكُمْ وَأَقِيمُوا الشَّهَادَةَ لِلَّهِ ذَلِكُمْ يُوعَظُ بِهِ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآَخِرِ وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا (2)65         

உங்களில் இரு நடுநிலையாளர்களைச் சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்காக சாட்சியை நிலைநாட்டுங்கள்! அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புவோருக்காக இவ்வாறு அறிவுறுத்தப்படுகிறது. யார் அல்லாஹ்வை அஞ்சுகிறாரோ அவருக்கு ஒரு வழியை அவன் ஏற்படுத்துவான்.

 (அல்குர்ஆன் 65 : 2)

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனத்தில் விவாகரத்துச் செய்யும் போது நேர்மையான இரண்டு சாட்சிகள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை இறைவன் கூறியுள்ளான்.

''சாட்சி'' என்ற தமிழ் வார்த்தைக்கு அரபி மூலத்தில் இடம்பெற்றுள்ளவார்த்தையின் முழுமையான பொருள் ''கண்ணால் நேரில் காண்பவர்'' என்பதாகும்.

விவாகரத்துச் செய்பவனையும், செய்யப்பட்டவளையும் , இருவருக்கிடையே விவாகரத்து நடப்பதையும் கண்ணால் காண்பவர்தான் அதற்குச் சாட்சியாக முடியும்.

ஒருவர் கடிதத்தில் தலாக் கூறி, அதற்கு சாட்சியாக இருவரைக் குறிப்பிட்டிருந்தாலும் அவர் அக்கடிதத்தை சுய நினைவோடு எழுதினாரா? அல்லது யாராவது மிரட்டி எழுதினாரா? எவ்வித நிர்பந்தமுமின்றி எழுதினாரா? அல்லது வேறு யாராவது அவரது பெயரைப் பயன்படுத்தி எழுதியுள்ளார்களா? என்பது போன்ற பல சந்தேகங்கள் ஏற்படும். எவ்வித நிர்பந்தமுமின்றி நேர்மையான இரு சாட்சிகளுக்கு முன் சொல்வதுதான் தலாக்கின் சரியான வழிமுறையாகும்.

ஒருவன் தன்னுடைய மனைவியிடம் நேரடியாகத்தான் தான் அவளை தலாக் விடுவதாகக் கூறவேண்டும். இது இரண்டு சாட்சிகள் முன்னிலையில் நடைபெறவேண்டும். மேலும் பெண்களை விவாகரத்துச் செய்யும் போது அவர்கள் இத்தாவைக் கணக்கிடுவதற்கு தகுந்தவாறு அவர்களின் மாதவிலக்கை கவனித்து விவாகரத்துச் செய்ய வேண்டும்.

يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَطَلِّقُوهُنَّ لِعِدَّتِهِنَّ وَأَحْصُوا الْعِدَّةَ وَاتَّقُوا اللَّهَ رَبَّكُمْ لَا تُخْرِجُوهُنَّ مِنْ بُيُوتِهِنَّ وَلَا يَخْرُجْنَ إِلَّا أَنْ يَأْتِينَ بِفَاحِشَةٍ مُبَيِّنَةٍ وَتِلْكَ حُدُودُ اللَّهِ وَمَنْ يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَقَدْ ظَلَمَ نَفْسَهُ لَا تَدْرِي لَعَلَّ اللَّهَ يُحْدِثُ بَعْدَ ذَلِكَ أَمْرًا (1)65

நபியே! (நீர் கூறுவீராக!) நீங்கள் பெண்களை மணவிலக்குச் செய்தால் அவர்களின் காத்திருப்புக் காலத்தைக் கணக்கிடுவதற்கு ஏற்ற வகையில் மணவிலக்குச் செய்யுங்கள். நீங்களும் அக்காத்திருப்புக் காலத்தை கணக்கிட்டு வாருங்கள்! உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அப்பெண்கள் பகிரங்க மானக்கேட்டைச் செய்தாலே தவிர அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றி விடாதீர்கள்! அப்பெண்கள் (தாமாக) வெளியேறவும் வேண்டாம். இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். யார் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகிறாரோ அவர் தனக்கே அநியாயம் செய்து கொண்டார். இதன்பின்னர் (இணக்கத்திற்கான) ஏதேனும் ஓர் ஏற்பாட்டை அல்லாஹ் உருவாக்கக்கூடும் என்பதை நீர் அறிய மாட்டீர்

(அல்குர்ஆன் 65 : 1)


மேற்கண்ட வசனத்தில் விவாகரத்துச் செய்பவன் தன்னுடைய மனைவியை விவாகரத்துச் செய்து விட்டால் அவள்  இத்தாவைக் கடைபிடிப்பதற்கேற்ப விவாகரத்துச் செய்ய வேண்டும் என்று கூறுகிறான்.

அதாவது இத்தா என்பது ஒரு பெண் மறுமணம் செய்வதற்குரிய கால அளவாகும்.
மேலும் ஒருவன் தன்னுடைய மனைவியை விவாகரத்துச் செய்தால் அவன் விவாகரத்துச் செய்த நாளிலிருந்து அவளுடைய இத்தா நாட்களை கணக்கிடுவது கணவன் மீது கடமையாகும். மேலும் இத்தாவுடைய நாட்களில் அப்பெண்கள் கணவனுடைய வீ்ட்டில்தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.

 ஆனால் கடிதம் மூலம் தலாக் கூறும் போது மேற்கண்ட இறைக்கட்டளைகளை பின்பற்றுவது ஒரு போதும் சாத்தியமில்லை.
எனவே கணவர் இரண்டு சாட்சிகளின் முன்னிலையில் மனைவியிடம்   நேரடியாக தலாக்கைத் தெரிவிக்காத காரணத்தினால் கடிதம் மூலம் தலாக் கூறியதாக கூறுவது இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் செல்லத்தக்கதல்ல. அது தலாக்காக கருதப்படாது.
ஜீவனாம்சம்
பெண்களுக்கு இரண்டு வகையான பாதுகாப்பை இஸ்லாம் ஏற்படுத்துகின்றது. ஒன்று திருமணத்தின் போது கணிசமான தொகையை மஹராகப் பெற்று அவள் தனது பொறுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக விவாகரத்துச் செய்தவுடன் கணவனின் பொருளாதார வசதியைக் கவனித்து ஒரு பெருந்தொகையை, சொத்தை ஜமாஅத்தினர், அல்லது இஸ்லாமிய அரசு அவளுக்குப் பெற்றுத் தர வேண்டும். திருக்குர்ஆன் 2:241 வசனம் இதைத் தான் கூறுகிறது.

{ وَلِلْمُطَلَّقَاتِ مَتَاعٌ بِالْمَعْرُوفِ حَقًّا عَلَى الْمُتَّقِينَ [البقرة: 241
மணவிலக்குச் செய்யப்பட்ட பெண்களுக்கு(க் கணவனிடமிருந்து) நியாயமான முறையில் வாழ்க்கை வசதிகள் உண்டு. (இது) இறையச்சமுடையோர்மீது கடமையாகும்.

 (அல் குர்ஆன் 2 : 241)

இவ்வசனத்தின் ஒவ்வொரு சொல்லும் ஆழமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.

ஆயினும் முஸ்லிம்களில் பலர் இத்தா காலத்துக்கு, அதாவது, மூன்று மாத காலத்துக்கு அவளுக்கு ஜீவனாம்சம் வழங்குவதையே வசனம் குறிக்கிறது என்று நினைக்கின்றனர்.

இத்தா எனும் காத்திருக்கும் காலத்தில் கணவன்  செய்யும் செலவு என்பது இன்னமும் அவள் மனைவியாக இருக்கிறாள் என்பதற்காவும், காத்திருக்கும் காலத்தில் அவள் மறுதிருமணம் செய்ய முடியாது என்பதினாலும் ஆகும்.

ஆனால் மேற்குறிப்பிட்ட வசனத்தில்  நல்ல முறையில்” வசதிகள் அளிக்கப்பட வேண்டும்” என்று அல்லாஹ் கூறியிருப்பதிலிருந்து இது தலாக்கிற்குப் பிறகு கொடுக்க வேண்டிய ஜீவனாம்சமே ஆகும்.

ஒரு பெண்ணுடன் வாழ்ந்து அவளது இளமையை அனுபவித்து விட்டு மூன்று மாதம் செலவுக்குப் பணம் கொடுப்பது அழகிய முறையாகவோ, நியாயமான முறையாகவோ இருக்காது.

தனது மகளுக்கு இப்படி நேர்ந்தால் எது நியாயமானதாகப்படுகிறதோ அது தான் நியாயமானது. எனவே இத்தா காலத்திற்கு மட்டும் வசதிகள் அளிக்க வேண்டும் என்பது மேற்கண்ட வசனத்தின் கருத்தல்ல.

திருக்குர்ஆன் 2:236 வசனம் கூறுவதை இதற்கு அளவு கோலாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

لَا جُنَاحَ عَلَيْكُمْ إِنْ طَلَّقْتُمُ النِّسَاءَ مَا لَمْ تَمَسُّوهُنَّ أَوْ تَفْرِضُوا لَهُنَّ فَرِيضَةً وَمَتِّعُوهُنَّ عَلَى الْمُوسِعِ قَدَرُهُ وَعَلَى الْمُقْتِرِ قَدَرُهُ مَتَاعًا بِالْمَعْرُوفِ حَقًّا عَلَى الْمُحْسِنِينَ )البقرة: 236
நீங்கள் பெண்களைத் தீண்டாமலோ அல்லது அவர்களுக்கு மணக்கொடையை நிர்ணயிக்காமலோ அவர்களை மணவிலக்குச் செய்தால் உங்கள்மீது குற்றமில்லை. வசதியுடையவர் தனது சக்திக்கேற்பவும், வசதி குறைந்தவர் தனது சக்திக்கேற்பவும் அழகிய முறையில் அவர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குங்கள். (இது) நன்மை செய்வோர்மீது கடமையாகும்.

 (அல் குர்ஆன் 2: 236)

ஒரு பெண்ணோடு இல்லற வாழ்க்கையில் ஈடுபடாமல் அவளை தலாக் விட்டால் அவள் மறுதிருமணம் செய்வதற்கு காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. என்றாலும் இத்தா எனும் காத்திருக்கும் காலம் இல்லாத பெண்ணிற்கும் அவளை தலாக் விட்டால் வசதிகள் அளிக்க வேண்டும் என்று இறைவன் கூறுகிறான்.

இது தலாக்விடப்பட்ட பெண்களுக்கு வழங்க வேண்டிய ஜீவனாம்சம் ஆகும்.

வசதியுடையவர் தனது சக்திக்கேற்பவும்வசதி குறைந்தவர் தனது சக்திக்கேற்பவும்  தொகை கொடுக்க வேண்டும் என்பதே இவ்வசனத்தின் கருத்தாக இருக்க முடியும். விவாகரத்துச் செய்பவன் வசதியுள்ளவன் என்றால் அவனது வசதிக்கேற்ப கோடிகளைப் பெற்றுத் தரும் பொறுப்பு ஜமாஅத்துகளுக்கு உண்டு. சில ஆயிரங்கள் தான் அவனால் கொடுக்க இயலும் என்றால் அதைப் பெற்றுத் தர வேண்டும். இறைவனை அஞ்சுவோருக்கு இது கட்டாயக் கடமையாகும். எனவே ஜமாஅத்தினர் இவ்வசனத்தின் ஒவ்வொரு சொல்லையும் கவனித்து அல்லாஹ்வுக்கு அஞ்சி நியாயம் வழங்க வேண்டும்.