இஸ்லாம் என்பது அல்லாஹ்விற்குச் சொந்தமான மார்க்கமாகும்.
அல்லாஹ்விடம் மார்க்கம் என்பது இஸ்லாமே. (3 : 9)
இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை யாரேனும் விரும்பினால் அவரிடமிருந்து அது ஏற்கப்படாது. அவர் மறுமையில் நஷ்டமடைந்தவராக இருப்பார். (3 : 85)
இஸ்லாம் இறைவனுடைய மார்க்கம் என்பதின் உண்மையான பொருள் இஸ்லாம் என்று எதை யார் கூறினாலும் அது அல்லாஹ் கூறியதாக இருக்க வேண்டும். அல்லாஹ் கூறாத எந்த ஒன்றும் இஸ்லாமாகக் கருதப்படாது. ஒன்றை சட்டமாக்கும் அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருக்கும் கிடையாது.
இறைவனுக்கு மட்டுமே சொந்தமான இந்த மார்க்கத்தில் இறைத்தூதர்களும் கூட தமது சுயவிருப்பப்படி எதையும் சட்டமாக்கி விட முடியாது.
(முஹம்மதே!) உமது இறைவனின் வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்படு வதைக் கூறுவீராக! அவனது வார்த்தைகளை மாற்றுபவன் இல்லை. அவனன்றி எந்தப் புகலிடத்தையும் நீர் காண மாட்டீர்! (18:27)
இது அகிலத்தாரின் இறைவனிடமிருந்து அருளப்பட்டது.. சில சொற்களை இவர் (முஹம்மது) நம்மீது இட்டுக் கட்டியிருந்தால் இவரை வலது கையால் தண்டித்திருப்போம். பின்னர் அவரது நாடி நரம்பைத் துண்டித்திருப்போம்.. உங்களில் எவரும் அவனைத் தடுப்பவர் அல்லர். இது (இறைவனை) அஞ்சியோருக்கு அறிவுரை. (70 : 43-48)
அவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் கூறப்பட்டால் ''இது அல்லாத வேறு குர்ஆனைக் கொண்டு வருவீராக! அல்லது இதை மாற்றியமைப்பீராக!'' என நமது சந்திப்பை நம்பாதோர் கூறுகின்றனர். நானாக இதை மாற்றியமைத்திட எனக்கு அதிகாரம் இல்லை. எனக்கு அறிவிக்கப் படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றுவதில்லை. என் இறைவனுக்கு நான் மாறு செய்து விட்டால் மகத்தான நாளின் வேதனையை அஞ்சுகிறேன்'' என (முஹம்மதே!) கூறுவீராக! (10 : 15
நபியவர்கள் தமது சுயவிருப்பப்படி தேன் குடிக்கமாட்டேன் என்று கூறியபோது இறைவன் அதனை மிகக் கடுமையாக கண்டித்துள்ளான்.
நபியே! (முஹம்மதே!) உமக்கு அல்லாஹ் அனுமதித்ததை உமது மனைவியரின் திருப்தியை நாடி ஏன் விலக்கிக் கொள்கிறீர்? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் (66 : 1) என்ற திருமறை வசனத்தை அல்லாஹ் இறக்கி வைத்தான்.
மேலும்
- பத்ருப்போர்கைதிகள்விசயமாகநபியவர்கள்சுயமுடிவுஎடுத்தநேரத்திலும்,
- அப்துல்லாஹ்பின்உம்மிமக்தூம்என்றகண்தெரியாதஸஹாபிவந்ததற்காகமுகம்சுளித்த நேரத்திலும்அல்லாஹ்கண்டித்துள்ளான்.
இதிலிருந்து நபியவர்கள் நமக்கு போதித்த அனைத்தும் இறைச் செய்திதான். அதாவது ஹதீஸ்கள் என்று நாம் கூறுபவை நபியவர்கள் தமது சுய இஷ்டப்படி கூறியவையல்ல. மாறாக அவையும் இறைச் செய்திதான் என்பதை நாம் விளங்கிக் கொள்ளமுடிகிறது.
இறைத்தூதரும் கூட இறைவனுடைய கட்டளைகளைத்தான் மக்களுக்குப் போதிக்க வேண்டும். இதைத்தான் இறைவன் பின்வரும் வசனத்தில் உலகமக்கள் அனைவருக்கும் கட்டளையிடுகின்றான்.
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள் (அல்குர்ஆன் 7 : 3)
(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக! (6 :106)
உமக்கு அறிவிக்கப்படுவதைப் பற்றிக் கொள்வீராக! நீர் நேரான பாதையில் இருக்கிறீர். . இது உமக்கும், உமது சமுதாயத்துக்கும் அறிவுரை. பின்னர் விசாரிக்கப்படுவீர்கள். (43 : 43, 44)
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக! அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! அல்லாஹ் உமக்கு அருளியதில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைக் குழப்புவார்கள் என்பதில் கவனமாக இருப்பீராக! அவர்கள் புறக்கணித்தால் அவர்களின் சில பாவங்கள் காரணமாக அவர்களைத் தண்டிப்பதையே அல்லாஹ் நாடுகிறான் என் பதை அறிந்து கொள்வீராக! மனிதர்களில் அதிகமானோர் குற்றம் புரிவோராகவுள்ளனர்(5: 49)
இறைவன் அருளியவற்றை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பதே ஸஹாபாக்களாக இருந்தாலும், மத்ஹப் இமாம்களாக இருந்தாலும், வேறுயாருடைய கருத்தாக இருந்தாலும் அவற்றை மார்க்கமாகக் கருதி பின்பற்றக் கூடாது என்பதற்கு போதுமான ஆதாரமாகும். என்றாலும் மத்ஹபை பின்பற்றக்கூடாது என்பதற்கு மேலதிகமான ஆதாரங்களையும் நாம் எடுத்துக் காட்டியுள்ளோம்.
இந்த உலக சமுதாயம் இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றை மட்டும் தான் பின்பற்ற வேண்டும். இறைவனல்லாத மற்றவர்களின் கருத்தை பின்பற்றினால் அல்லது அதை மார்க்கம் என்று ஏற்றுக் கொண்டால் அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிட்டான்.
மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! எனது வசனங்களை அற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்! அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் (ஏக இறைவனை) மறுப்பவர்கள். (5 : 44)
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள் (5 : 45)
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோரே குற்றவாளிகள். (5 : 47)
இறைவன் விதிக்காத சட்டத்தை இறைவன் அல்லாதவர்கள் விதித்தால் அதாவது பித்அத்துகளை உண்டாக்கினால் அவன் தன்னை இறைவனுக்கு நிகராகக் கருதிய காஃபிராவான். அந்த பித்அத்துகளை பின்பற்றுபவர்கள் அதனை உருவாக்கியவர்களை கடவுளாகக் கருதுகின்றார்கள். இதனை பின்வரும் வசனங்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.
அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக் கிடையே முடிவு செய்யப்பட்டிருக்கும். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது. (42 : 21)
அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர். (9 : 31)
உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? அல்லாஹ் வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்று கூறுவீராக! (49 ; 16)
இன்றைக்கு நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துதான் நபியவர்களால் காட்டித்தரப்படாத பித்அத்துகளை எதிர்த்து மிகக் கடுமையான பிரச்சாரம் செய்கின்றது. பெரும்பாண்மையான இஸ்லாமிய அமைப்புகள் இந்தப் பிரச்சாரத்தை சமுதாய ஒற்றுமையை சீரழிக்கும் பிரச்சாரம் என்றே கருதுகின்றனர்.
ஜமாஅத்தே இஸ்லாமி, விடியல் வெள்ளி, போன்ற அமைப்பினரை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இவர்கள் என்ன கூறுகின்றார்கள்? தர்ஹா வழிபாடு, தாயத்து தகடுகள், மீலாது, மௌலூது, போன்ற இணைகற்பிக்கின்ற பித்அத்தான காரியங்களாக இருந்தாலும், கூட்டுத் துஆ, ஜும்ஆவிற்கு இரண்டு பாங்கு, ஹத்தம் பாத்திஹாக்கள், வயிற்றில் தொப்புளில் கைகளைக் கட்டுதல், தராவீஹ் 20 ரக்அத் தொழுதல் போன்ற மஸாயில் ரீதியான பித்அத்களுகாக இருந்தாலும் இவற்றை காரணமாக வைத்து சமுதாய ஒற்றுமையை சீர்குலைத்து விடக்கூடாது எனக் கூறுகின்றனர். இந்த வழிகெட்ட பிரச்சாரத்திற்கு பலர் பலிகடாவாகிவிட்டனர்.
உண்மையில் இவர்கள் ஒன்றை விளங்கவில்லை. அல்லாஹ் கூறாத ஒன்றை மார்க்கம் என்று உருவாக்குவது, பித்அத் என்று தெரிந்த பின்பும் அதைப் பின்பற்றுவது இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றும் இணைகற்பிக்கக்கூடிய காரியம். அது நம்மை நிரந்தர நரகத்தில் தள்ளிவிடும் என்பதை அவர்கள் உணரவில்லை. இறைவனால் இஸ்லாம் என்று கட்டளையிடப்படாத ஒன்றை நாம் உருவாக்கி பின்பற்றினால் அதை இறைவன் சிறியது, பெரியது என்று எடுத்துக் கொள்ளமாட்டான். மாறாக தன்னுடைய அதிகாரத்தில் தலையிட்டதாகவே எடுத்துக் கொள்வான்.
நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் தன்னுடைய மனைவிமார்களிடம் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தேன் சாப்பிட மாட்டேன் என்று கூறிய சம்பவத்தை எடுத்துக் கொள்வோம் . மேற்கண்ட அமைப்பினரின் மார்க்க அறிவற்ற பார்வையில் பார்த்தால் இது சாதாரணமான ஒன்றுதான்.
ஆனால் இறைவன் தன்னுடைய திருமறையில் அவர்கள் இவ்வாறு கூறியதை மிகக் கடுமையாகக் கண்டிக்கின்றான். நபிகள் நாயகம் தேனைத் தானே சாப்பிடமாட்டேன் என்றார்கள். அல்லாஹ்வையா இல்லையென்று சொல்லிவிட்டார்கள் என்றெல்லாம் அல்லாஹ் பார்க்கவில்லை. இதிலிருந்து நாம் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும் அல்லாஹ் நாம் செய்கின்ற காரியம் சிரியதா? பெரியதா? என்றெல்லாம் பார்க்கமாட்டான். மாறாக தன்னுடைய இறைத்தன்மை சிதைக்கப்படுகிறதா என்று மட்டும்தான் பார்ப்பான். பின்வரும் ஹதீஸின் மூலம் இதனை இன்னும் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'ஹுதைபியா' எனுமிடத்தில் எங்களுக்கு சுப்ஹுத் தொழுகை தொழுவித்தார்கள்.லிஅன்றிரவு மழை பெய்திருந்தது.லி தொழுது முடித்ததும் மக்களை நோக்கி நேராகத் திரும்பி, ''உங்கள் இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா?'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், ''அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்'' என்று கூறினர்.
அப்போது ''என்னை நம்பக் கூடியவர்களும் (என்னை) மறுக்கக் கூடியவர்களுமாக என் அடியார்கள் (இரு பிரிவினராக) உள்ளனர். 'அல்லாஹ்வின் தயவாலும் அவன் கருணையாலும்தான் நமக்கு மழை பொழிந்தது' எனக் கூறியவர்களோ என்னை நம்பி, நட்சத்திரத்தை மறுத்தவர்களாவர். இன்ன இன்ன நட்சத்திரத்தால்தான் (எங்களுக்கு மழை பொழிந்தது) எனக் கூறியவர்களோ என்னை மறுத்து, நட்சத்திரத்தை நம்பியவர்களாவர்' என இறைவன் கூறினான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரி (846)
நட்சத்திரத்தின் காரணமாக மழைபொழிந்தது எனக்கூறுபவன் காஃபிராவான் என்பதுதான் நபியவர்களின் தீர்ப்பு. இது சாதரணமாக அனைவரும் பேசுவதுதானே. இதற்காகவா காஃபிர் என்று நபியவர்கள் கூறவேண்டும். என்றெல்லாம் மார்க்க அறிவுடையவர்கள் கேட்கமாட்டார்கள். ஏனென்றால் இங்கே மழையை பொழிப்பவன் இறைவன்தான் என்ற இறைவனுடைய அதிகாரம் சிதைக்கப்பட்டு நட்சத்திரம் கடவுள் அந்தஸ்திற்கு உயர்த்தப்படுகிறது. இது தெளிவான இணைவைப்புக் காரியமாகும். இதிலிருந்து சிலை வணக்கம் என்ற செயலைச் செய்தால்தான் காஃபிர் என்பதல்ல. மாறாக இறை அதிகாரத்தை கடுகளவை இறைவனல்லாதவர்களுக்கு வழங்கினாலும் அவன் காஃபிர்தான். இதுதான் இறைப்பார்வை.
அதுபோல் தொப்பி அணிவதும், விரலசைப்பதும் சாதரண விசயங்கள் என்று மார்க்க அறிவுடையவர்கள் எண்ண மாட்டார்கள். இங்கு தொப்பி அணிவதோ, விரலசைப்பதோ பிரச்சினையில்லை. மாறாக நபியவர்கள் தொப்பி அணிய வேண்டும் எனக் கட்டளையிடவில்லை. ஆடை என்ற அடிப்படையில் ஒருவன் விரும்பினால் அணியலாம். அணியாமலும் இருக்கலாம். ஆனால் மார்க்கம் தெரியாத ஒருவன் தொப்பி அணிந்தால்தான் பள்ளிக்குள் விடுவேன் என்கிறான். இப்போது இங்கு தொப்பிதானே என்று இறையச்ச முடைய ஒருவன் பார்க்க முடியாது. இஸ்லாம் கூறாத ஒன்றை மார்க்கமாக்க இவர்யார்? இவர் இறைவனா? என்றுதான் ஒரு முஃமின் சிந்திக்க வேண்டும்.
விரலசைத்தல் என்பது நபியவர்கள் காட்டிய சுன்னத். ஒருவன் விரலசைத்தால் ஒடிப்பேன் அடிப்பேன் என்கிறான். மாறாக நிர்பந்தம் என்று இல்லாமலும், நபிவழி என்று தெரிந்தும், ஒருவன் மக்கள் விரும்பவில்லை. எனவே ஒற்றுமைக்காக நாம் விரலசைக்காமல்தான் இருக்க வேண்டும் என்று கூறினால் நிச்சயமாக இவன் சட்டத்தை மாற்றும் அதிகாரத்தை இறைவனுக்கு மட்டும் வழங்கவில்லை. மாறாக இறைவனல்லாதவர்களுக்காவும், பிற நோக்கத்திற்காகவும் இவனும் இறைவனைப் போன்று சட்டத்தை மாற்றுகிறான். இறை அதிகாரத்தை தன்கையில் எடுக்கின்றான். இங்கே இறைவன் விரலசைத்தல்தானே, தொப்பிதானே என்றெல்லாம் பார்க்கமாட்டான். மாறாக இறைச்சட்டத்தை உருவாக்கவோ, மாற்றவோ அதிகாரம் பெற்றவன் யார்? என்பதைத்தான் பார்ப்பான்.
இதை இவர்கள் விளங்காத காரணத்தினால்தான் இன்றைக்கு சின்னச் சின்ன விசயங்களுக்காக சமுதாய ஒற்றுமையை குலைத்துவிடக்கூடாது. மஸாயில் பிரச்சினைகளை பேசக்கூடாது என்றெல்லாம் பிரச்சாரம் செய்கின்றனர். அதாவது அழியக்கூடிய இவ்வுலகத்திற்காக அழியாத மறுமையில் நாம் நிரந்தர நரகத்திற்குச் செல்வதற்கு வழிகாட்டுகிறார்கள். நிச்சயமாக நாமும் சென்றுவிடக் கூடாது. அவர்களும் சென்று விடக்கூடாது. அறியாதவர்கள் நம்மை குழப்பவாதிகள் என்றாலும், பிரிவினை வாதிகள் என்றாலும் எதற்கும் அஞ்சாமல் இறைச்சட்டத்தை நிலைநாட்டக்கூடியவர்களாக நாம் திகழவேண்டும். மார்க்க விரோதிகளின் மயக்கப் பிரச்சாரத்திற்கு நாம் அடிபணிந்துவிடக்கூடாது.
மக்களை இறைச்சட்டத்தை பின்பற்றக்கூடியவர்களாக மாற்ற வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இலட்சியம். உலகமே எதிர்த்து நின்றாலும் சிறிய விசயத்திற்கும் பெரிய விசயத்திற்கும் இறைவனே சட்டம் வகுப்பவன் என்பதை உலகறியச் செய்வதே தவ்ஹீத் ஜமாஅத்தின் கடமை என்பதை தவ்ஹீத் வாதிகள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள் அனை வரையும்விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் (உண்மையான) இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டவர் ஆகமாட்டார். இதை அனஸ் (ரலிரி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி 15)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்த வராவார். (அவை:) 1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு (உலகத்திலுள்ள) அனைத்தையும் விட அதிக நேசத்திற்குரியோராவது. 2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது. 3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறைமறுப்புக்கு மாறுவதை வெறுப்பது. இதை அனஸ் (ரலிரி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி 16)
இன்றைக்கு இஸ்லாமிய அமைப்புகள் முஸ்லிம்கள் கொல்லப்படுவதையும் , எதிரிகளால் பாதிப்பிற்குள்ளாக்கப்படுவதையும் பார்த்து இதனைத் தடுக்கவேண்டும் .என்றால் நாம் ஒன்றுபடவேண்டும். அதற்காக மக்கள் செய்யும் அனாச்சாரமான பித்அத்தான காரியங்களை குறை சொல்லி ஒற்றுமையை குலைக்கக்கூடாது என்கின்றனர். இவையெல்லாம் சாதாரண விசயங்கள்தான் எனக்கூறுகின்றனர்.
முஸ்லிம்கள் பாதிக்கப்படும் போது அவர்களுக்காக போராட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இதற்காக முன்னிலையில் நிற்பதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துதான். ஆனால் அழியக்கூடிய இவ்வுலகில் அவர்களைப் பாதுகாப்பதற்கு பாடுபடுவது போல் அழியாத மறுமையில் அவர்களைக் காப்பாற்ற அதைவிட ஆயிரம் மடங்கு பாடுபடவேண்டும். மக்கள் செய்யும் பித்அத்தான காரியங்களை தடுக்காவிட்டால் மறுமையில் அவர்கள் நிரந்தர நரகத்திற்குச் செல்வார்களே இதனைத் தடுக்காமல் உண்மையில் மறுமையை நம்பியவர்கள் வாழமுடியுமா?
இன்றைக்கு தீய காரியங்கள் எவை என கேட்டால் கொலை, கொள்ளை, விபச்சாரம், வட்டி எனக்கூறுவோம். ஆனால் இவையெல்லாம் மாபாவங்கள், பெரும்பாவங்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இதையெல்லாம் விட கொடிய பாவம் பித்அத்தான காரியங்கள்தான். அதவாது இறைவன் கட்டளையிடாத காரியங்களை இஸ்லாம் என்று கருதிச் செய்வது. இதை நான் கூறவில்லை. இதோ அல்லாஹ்வின் தூதர் கூறுவதைப் பாருங்கள் :
நாயகம்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களிலெல்லாம் மிகத்தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும். (ஜாபிர் (ரலி) நஸயீ (1560)
நபியவர்கள் காட்டித் தராத வழிமுறைகளை உருவாக்குவதை அல்லாஹ் இஸ்லாமாகப் பார்க்கவில்லை. மாறாக அவர்களை மதம்மாறியவர்களாகவே அல்லாஹ் பார்க்கின்றான். அதாவது பித்அத்துகளை பின்பற்றுபவர்கள் இஸ்லாத்தை பின்பற்றவில்லை. மாறாக அவர்கள் உருவாக்கிய புதிய மதத்தையே அவர்கள்கள் பின்பற்றுகின்றனர். இதையும் நானாகக் கூறவில்லை. இதோ அல்லாஹ் கூறுவதாக நபியவர்கள் கூறுவதைப் பாருங்கள் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உங்களுக்கு முன்பே 'அல்கவ்ஸர்' தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். யாருக்கு என்னிடம் வரமுடிகிறதோ அவர் (அந்தத் தடாகத்தின் நீரை) அருந்துவார். யார் (அதை) அருந்துகிறாரோ அவருக்கு இனி ஒருபோதும் தாகமே ஏற்படாது. (இந்நிலையில்) என்னிடம் சிலர் வருவார்கள். அவர்களை நான் அறிந்துகொள்வேன். என்னையும் அவர்கள் அறிந்துகொள்வார்கள். பிறகு எனக்கும் அவர்களுக்கும் இடையே தடுப்பு ஏற்படுத்தப்படும்.
''(இறைவா!) இவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்'' என்று நான் கூறுவேன். அதற்கு ''உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியதை நீங்கள் அறியமாட்டீர்கள்'' என்று சொல்லப்படும். உடனே நான் ''எனக்குப் பின்னால்
(தமது மார்க்கத்தை) மாற்றிவிட்டவர்களை இறைவன் தன் கருணையிருந்து அப்புறப் படுத்துவானாக! அவர்களை இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக!'' என்று (இரண்டு முறை) கூறுவேன். (புகாரி 6584)
அதற்கு இறைவன் ''உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்று விட்டார்கள்'' என்று சொல்வான். (6585)
''உங்களுக்குப் பின்னால் இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே மதம் மாறிச் சென்றுவிட்டார்கள்'' என்றார். (6587)
புகாரி 6584 வது ஹதீஸில் மார்கத்தை மாற்றியவர்கள் என்றும் , 6585 வது ஹதீஸில் பழைய மதததிற்கு திரும்பியவர்கள் என்றும், 6587 வது ஹதீஸில் மதம் மாறியவர்கள் என்றும் பித்அத்துகளை செய்பவர்களை அல்லாஹ் கூறியுள்ளான்.
அன்பிற்குரிய சகோதரர்களே சிந்தித்துப் பாருங்கள். நபியவர்கள் காட்டித் தராத காரியங்களைச் செய்வதை மதம் மாறுதல் என்றும் புதுமார்க்கம் என்றும் நபியவர்கள் எச்சரித்த பின்னரும் இது போன்ற காரியங்களைச் செய்யும் நம்முடைய சமுதாயத்திற்கு நாம் எச்சரிக்கை செய்யாமலிருக்கலாமா?
இப்போது பதில் கூறுங்கள் நாம் பாடுபடவேண்டிய முதல் விசயம் பித்அத்துகளை ஒழிப்பதா? அல்லது சமுதாய ஒற்றுமை என்ற பெயரில் அவற்றை கண்டு கொள்ளாமல் இருப்பதா?
மறுமை நம்பிக்கையையும், இறைவசனங்களையும், நபி மொழிகளையும் மனக்கண்முன் நிறுத்தி சிந்தித்துப்பாருங்கள். அற்ப உலக இலாபத்திற்காக மறுமையை நாசமாக்கும் இத்தகைய சமுதாய அமைப்புகளைத்தான் மிகப்பெரும் வைரஸ் கிருமிகளாக நாம் கருத வேண்டும். இறைச்சட்டங்களுக்கு மாற்றமாக எதைச் செய்தாலும் நிச்சயமாக அது நன்மையாக மாறாது. நாம் நன்மை என்று எண்ணிக் கொண்டாலும் சரியே. இதோ நபியவர்களின் எச்சரிக்கையைப் பாருங்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : யார் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை அதில் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்படவேண்டியதே! அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி) நூல் : புகாரீ (2697)
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : நம் கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும். ஆயிஷா(ரலி) நூல் : முஸ்லிம் (3243)
பரிசுத்த இஸ்லாமிய மார்க்கம் நபியவர்களின் காலத்தோடு முழுமைப்படுத்தப்பட்டுவிட்டது. அவர்களுக்குப் பிறகு வேறுயாரிடமும் தேவையாகாத அளவிற்கு தெளிவான மார்க்கத்தில் நம்மை விட்டுச் சென்றுள்ளார்கள்.
இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். (அல்குர்ஆன் 5:3)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான் உங்களை (மார்க்கம்) வெண்மையான ( தாக இருக்கும்) நிலையில் விட்டுச் செல்கின்றேன். அதனுடைய இரவும் பகலைப் போன்றதாகும். அழியக் கூடியவனைத் தவிர வேறு யாரும் எனக்குப் பிறகு அதை விட்டும் வழி தவற மாட்டார்கள். அறிவிப்பவர் : இர்பாள் பின் ஸாரியா(ரலி) நூல் : அஹ்மத் (16519)
மார்க்கம் என்பது நாயகம்(ஸல்) அவர்களோடு முழுமைப்படுத்தப்பட்டு விட்டது. இனி இம்மார்க்கத்தில் ஒன்றைக் கூட்டுவதற்கோ குறைப்பதற்கோ யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது.
முதல் மனிதருக்கு இறைவனின் கட்டளை
முதல் மனிதராகிய ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் எல்லாவிதமான ஞானங்களையும் கற்றுக் கொடுத்தான். ஆதம் (அலை) அவர்களுக்கு அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்ததாக அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் கூறுகிறான். இப்படி எல்லா விதமான அறிவு ஞானத்தை அல்லாஹ் ஆதம் அவர்களுக்கு வழங்கியிருந்தாலும் அவர்களை பூமிக்கு அனுப்பும் போது தன்னுடைய இறைச்செய்தியை மட்டுமே பின்பற்ற வேண்டும் என கட்டளை பிறப்பிக்கின்றான்.
''இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்! என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்'' என்று கூறினோம். (அல்குர்ஆன் 2 : 38)
இருவரும் ஒட்டுமொத்தமாக இங்கிருந்து இறங்குங்கள்! உங்களில் சிலர் மற்றும் சிலருக்கு பகைவர்களாவீர்கள். என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வருமானால் எனது நேர் வழியைப் பின்பற்றுபவர் வழி தவற மாட்டார். துர்பாக்கியசாலியாகவும் மாட்டார் (2 : 123)
இதிலிருந்தே மார்க்க விசயங்களில் நபிமார்களாக இருந்தாலும் அவர்களாக எதையும் தங்களுடைய அறிவின் மூலம் சிந்தித்து பின்பற்றுவதற்கு அதிகாரமில்லை என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். இதனை வேறுவகையில் கூறுவதாக இருந்தால் இஸ்லாம் என்பது அல்லாஹ்வின் கட்டளைகள் மட்டும்தான். இதில் இறைக்கட்டளைகளுடன் வேறுயாருடைய கருத்தும் கலந்து விடக்கூடாது என்பதைத்தான் அல்லாஹ் விரும்புகிறான்.
நபிகள் நாயகமும் இறைச் செய்தியையே பின்பற்ற வேண்டும்
உண்மையை உள்ளடக்கிய வேதத்தை உமக்கு அருளினோம். அது தனக்கு முன் சென்ற வேதத்தை உண்மைப்படுத்துவதாகவும், அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கிறது. எனவே அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக! உம்மிடம் வந்துள்ள உண்மையை அலட்சியம் செய்து அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! உங்களில் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைத் திட்டத்தையும், வழியையும் ஏற் படுத்தியுள்ளோம். (அல்குர்ஆன் 5 : 48)
(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக (அல்குர்ஆன் 6 : 106)
0 comments:
Post a Comment