28 February 2012

மக்காவில் சப்தமிட்டு தக்பீர் சொல்வது சரியா?


கேள்வி : மக்காவில் தொழும் போது இமாம் அல்லாஹு அக்பர் என்று சொன்ன பிறகு சப்தமாக வேறொருத்தர் இன்னும் சப்தமாக சொல்வார். நல்லா மைக் செட் இல்லாத காலத்தில் வேண்டுமென்றால் மக்களுக்கு கேட்காது என்பதற்காக   இப்படி இரண்டாவது ஒரு ஆள் சப்தமாக சொல்கிறார் என்று கூறலாம். ஆனால் இப்போது மக்காவில் இருக்கும் செட் உலகத்தில் சிறந்தது என்று கூறலாம். இமாம் பாத்திஹா சூராவுக்கு முன் மெதுவாக பிஸ்மில்லாஹ் சொன்னாலும் கணீர் என்று தெளிவாக கேட்கும். இப்படி இருக்க இந்த பழைய முறையை பின்பற்றுவது சரியா

பதில் :
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது  அவர்களுக்குப் பின்னால் நாங்கள் (நின்றவாறே) தொழுதோம். அவர்கள் அமர்ந்தவாறே எங்களுக்குத் தொழுவித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தக்பீர் கூற, அதை அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்குக் கேட்கும் விதமாக  (உரத்த குரலில்) கூறிக்கொண்டிருந்தார்கள். 
நூல்  : முஸ்லிம் (701)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்து போய்விட்டார்களோ அந்த நோயின் போது அவர்களிடம் பிலால் (ரலி) அவர்கள் தொழுகை பற்றி அறிவிப்பதற் காக வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் அவர்களிடம் (மக்களுக்குத்) தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று சொன்னார்கள். அதற்கு நான், (என் தந்தை) அபூபக்ர் அவர்கள் (அதிகமாகத் துக்கப்படுகின்ற) இளகிய மனம் உடையவர்கள்; (தொழுவதற்காக) நீங்கள் நிற்குமிடத்தில் அவர்கள் நின்றால் (மனம் நெகிழ்ந்து) அழுவார்கள். அவர்களால் (தொழுகையில்) ஓத முடியாது என்று கூறினேன். அபூபக்ர் அவர்களிடம் (மக்களுக்குத்) தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று (மீண்டும்) சொன்னார்கள். நான் முன்பு சொன்ன பதிலையே மீண்டும் (மீண்டும்) சொன்னேன். மூன்றாவது அல்லது நான்காவது தடவையில் அவர்கள் (பெண்களாகிய) நீங்கள் யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள்தாம். அபூபக்ர் அவர்களிடம் (மக்களுக்குத்) தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று கூறினார்கள். அவ்வாறே அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (தம் உடல்நலம் சற்றுத் தேறியிருப்பதைக் கண்ட போது) இரண்டு மனிதர்களுக்கிடையே தொங்கியபடி (பள்ளிவாசலை நோக்கி) புறப்பட்டு வந்தார்கள். (நோயினால் கால்களை ஊன்ற முடியாமல் தம்மிரு கால்களையும் தரையில் பதித்து கோடிட்டு(க் கொண்டு அவர்கள் புறப்ப)ட்டு வந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது. நபி (ஸல்) அவர்களைக் கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் (தொழுவிக்கும் இடத்திலிருந்து) பின்வாங்க முயன்றார்கள். அப்போது அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் நீங்கள் தொழுகை நடத்துங்கள்' என்று (கையால்) சைகை செய்தார்கள். ஆயினும் அபூபக்ர் (ரலி) அவர்கள் சற்று பின்வாங்கிக் கொண்டார்கள். நபி (ஸல்) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு (இடப்) பக்கத்தில் அமர்ந்(து தொழுவித்)தார்கள் அபூபக்ர் (ரலி) அவர்கள் (நபியவர்கள் கூறும்) தக்பீரை மக்களுக்குக் கேட்கும் விதமாக (உரத்த குரலில்) கூறிக் கொண்டிருந்தார்கள்
நூல்  : புகாரி (712)
மேற்கண்ட ஹதீஸ்களில் இருந்து நபியவர்கள் நோய்வாய்பட்டிருக்கும் காலகட்டத்தில்தான் அபூ பக்கர் (ரலி) அவர்கள் நபியவர்களின் தக்பீரை மக்களுக்கு கேட்கும்படி எடுத்துக் கூறியுள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே இமாமின் சப்தம் பலவீனமாக இருக்கும் போது, அல்லது மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் போது இமாமின் சப்தம் மக்களுக்கு எட்டாது என்று கருதும் நேரத்தில் தக்பீரை இமாமிற்கு பின்னால் நிற்கும் ஒருவர் உரத்த குரலில் கூறுவது அனுமதிக்கப்பட்டதே என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
அதே நேரத்தில் இமாமின் சப்தம் தெளிவாக பின்பற்றித் தொழுபவர்களை சென்றடையும் போது தக்பீரை உரத்த குரலில் பின்னால் நிற்கும் ஒருவர் மீண்டும் கூறுவது நபியவர்களின் சுன்னத்திற்கு எதிரானதே. இந்த அடிப்படையில் கஃபாவில் தற்போதுள்ள இந்த நடைமுறை நபியவர்களின் வழிகாட்டுதலுக்கு எதிரானதாகும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

0 comments:

Post a Comment