03 July 2017

திருக்குர்ஆன் கேள்விகளும் பதில்களும்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளையின் சார்பாக இரமலான் மாதம் நடத்தப் பெற்ற ”திருக்குர்ஆன் திறனாய்வு போட்டி”யில் இடம் பெற்ற கேள்விகளும் அதற்கான பதில்களும். 
1.   நாம் இறைவனிடமிருந்து அருளப்பட்ட இறைச் செய்தியை மட்டுமே பின்பற்ற வேண்டும். மற்றவைகளை பின்பற்றக் கூடாது என்றுரைக்கும் திருமறை வசனம் எது?
பதில் : உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்! (அல்குர்ஆன் 7 : 3)


2.   மனிதனையும் ஜின்னையும் அல்லாஹ் எதற்காகப் படைத்துள்ளான்.?
ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை. (குர்ஆன் 51 56)
3.   நோன்பு எதற்காக விதியாக்கப்பட்டுள்ளது.?
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சு வதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப் பட்டது போல் உங்களுக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது (அல் குர்ஆன் 2:183)
4.   மக்களுக்கும், ஹஜ்ஜிற்கும் காலம் காட்டியாக அல்லாஹ் எதை ஆக்கியுள்ளான்?
பிறைகளைப் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். ''அவை மக்களுக்கும், (குறிப்பாக) ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்'' எனக் கூறுவீராக        அல்குர்ஆன் 2 : 189
5.   நோன்பு காலத்தில் பயணம் செய்பவர்கள் மற்றும் நோயாளிகளுக்குரிய சட்டம் என்ன?
உங்களில் நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். (அல்குர்ஆன் 2 : 184)
6.   எதை நாடி ஸகாத் கொடுப்பவர்கள் பன்மடங்காகப் பெருக்கிக் கொண்டவர்கள்?
நீங்கள் வட்டிக்குக் கொடுப்பது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை. அல்லாஹ்வின் முகத்தை நாடி ஸகாத் கொடுப்பீர்களானால் இத்தகையோரே பெருக்கிக் கொண்டவர்கள். அல்குர்ஆன் 30:39
7.   நரகவாதிகளுக்கு உணவாகும் சபிக்கப்பட்ட மரம் எது?
ஸக்கூம் எனும் மரம் குற்றவாளியின் உணவாகும் (அல்குர்ஆன் 44 :43,44)
8.   நபிகள் நாயகம் மனோ இச்சைப் படி பேசமாட்டார்கள் என்பதற்கான ஆதாரம் என்ன?
  அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. (வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை (குர்ஆன் 53 : 3,4)
9.   நரகவாதிகள் எத்தனை முழம் சங்கியால் பிணைக்கப்படுவார்கள்?
பின்னர் எழுபது முழம் கொண்ட சங்கிலியால் அவனைப் பிணையுங்கள்! (எனக் கூறப்படும்.) (அல்குர்ஆன் 69 : 32)
10.  அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்து வரம்புகளை மீறுபவர்களின் மறுமை நிலை என்ன?
பதில் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்து அவனது வரம்புகளை மீறுபவனை நரகில் நுழையச் செய்வான். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனை உண்டு.        (அல்குர்ஆன் 4:14)
11.     ஒரே வசனத்தைக் கொண்டு முடியும் இரண்டு அத்தியாயங்கள் (சூராக்கள்) எவை?
அல்ஹாக்கா என்ற (69 வது அத்தியாயம்) மற்றும் அல்வாகிஆ என்ற (56 வது அத்தியாயம்) இரண்டும்ஃபஸப்பிஹ் பிஸ்மி ரப்பிக்க அளீம்என்ற வசனத்தைக் கொண்டு முடிகிறது.

12.  அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பியோருக்கு அழகிய முன்மாதிரி யார்?
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல்குர்ஆன் 33 : 21)
13.  எந்த விலங்கினமும் அதன் தாயும் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது?
மாடும் (6 : 144), கன்றும்  (2 : 51) மாடும் கன்றும் என்பதற்கு பல வசனங்கள் உள்ளன.
14.  குர்ஆனை விளக்கும் பொறுப்பை அல்லாஹ் யாருக்கு கொடுத்துள்ளான்?
  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு. ஆதாரம் : மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம். (அல்குர்ஆன் 16:44)
15.     எதனை மிகவும் பலவீனமான வீடு என திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது?
வீடுகளிலேயே சிலந்தியின் வீடு தான் மிகவும் பலவீனமானது. (அல்குர்ஆன் 29 : 41)
16.  சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்கு அல்லாஹ் விதியாக்கிய கடமை எது?
அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்றுவர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. (அல்குர்ஆன் 3 : 97)
17.     அல்லாஹ் , ரசூலைப் புறக்கணித்து தலைவர்கள் கூறியதையும், பெரியார்கள் கூறியதையும் மார்க்கமாகப் பின்பற்றியவர்களின் மறுமை நிலை என்ன?
பதில் அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் ''நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?'' எனக் கூறுவார்கள். ''எங்கள் இறைவா! எங்கள் தலை வர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டனர்'' எனவும் கூறுவார்கள். ''எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!'' எனவும் கூறுவார்கள்.      (அல்குர்ஆன் 33:66...68)
18.     குழந்தை பாக்கியம் தருபவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே என்பதற்கான ஆதாரம் என்ன?
தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 42 : 49, 50)

19.  அல்லாஹ்விற்கு சிறு தூக்கமோ ஆழ்ந்த உறக்கமோ ஏற்படுமா?
அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. (அல்குர்ஆன் 2 : 255)

20.  உயிருடன் உள்ளோரும் இறந்தோரும் சமமா? கப்ருகளில் உள்ளவர்களை செவியேற்கச் செய்ய இயலுமா?
உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை. (அல்குர்ஆன் 35:22)

21.  நபிகள் நாயகம் சூனியம் வைக்கப்பட்டவர்என்று கூறிய மக்கா காஃபிர்களை அவ்வாறு எப்படி வர்ணிக்கின்றான்?
"சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள்'' என்றும் அநீதி இழைத்தோர் கூறுகின்றனர்.(முஹம்மதே!) அவர்கள் உம்மைப் பற்றி எவ்வாறு உதாரணங்களைக் கூறுகின்றனர் என்பதைக் கவனிப்பீராக! அவர்கள் வழி கெட்டு விட்டனர். அவர்கள் (நேர்) வழி அடைய இயலாது. (அல்குர்ஆன் 25 : 8, 9)  மேலும் 17 : 47, 48 வசனமும் சரியான பதிலாகும்
22.  சுவர்கத்தில் எத்தனை வகையான ஆறுகள் ஓடும்?
இறைவனை) அஞ்சுவோருக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தின் தன்மை, அதில் மாற்றமடையாத தண்ணீரைக் கொண்ட ஆறுகளும், சுவை கெட்டுப் போகாத பாலாறுகளும், அருந்துபவருக்கு இன்பம் தரும் மது ஆறுகளும், தூய்மையான தேன் ஆறுகளும் இருக்கும். (அல்குர்ஆன் 47 : 15)
23.  பூமியில் உள்ள பெரும்பான்மை மக்களின் கருத்தை மார்க்கமாகப் பின்பற்றினால் ஏற்படும் விளைவு என்ன?
பூமியில் உள்ளவர்களில் அதிகமானோருக்கு (முஹம்மதே!) நீர் கட்டுப்பட்டால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுத்து விடுவார்கள். அவர்கள் ஊகத்தையே பின்பற்றுகின்றனர். அவர்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறு இல்லை.  (அல்குர்ஆன் 6 : 116)
24.  சில வெள்ளிக் காசுகளுக்கு விற்கப்பட்ட நபி யார்?
யூசுப் நபிஆதாரம் : எண்ணுவதற்கு எளிதான சில வெள்ளிக் காசுகளுக்கு, அற்ப விலைக்கு அவரை விற்று விட்டனர். (அல்குர்ஆன் 12 : 20)
25.  நமக்கு மத்தியில் முரண்பாடுகள் ஏற்படும் போது யாரிடம் கொண்டு செல்ல வேண்டும் என திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது. ?
ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.   (அல்குர்ஆன் 4:59)
26.  இஸ்லாம் முழுமைப் படுத்தப்பட்ட மார்க்கம் என்பதற்குரிய ஆதாரம் என்ன?
இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். (குர்ஆன் 5:3)
27.     அல்லாஹ் வீற்றிருக்கும் ஆசனம் (குர்ஷ் அல்லது அர்ஷ்). அதனுடைய பிரம்மாண்டம் எப்படிப்பட்டது?
அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். (அல்குர்ஆன் 2:255)
28.     அல்லாஹ்வின் திருநாமங்கள் அதிகம் இடம் பெற்றுள்ள வசனம் எது.?
அல்ஹஷ்ர் என்ற 59 வது அத்தியாயத்தின் 23 வது வசனம்.
29.     இணைவைப்பாளர்களை விட இவ்வுலகில் வாழ்வதற்கு அதிகம் ஆசைப்படும் சமுதாயம் எது?
யூத சமுதாயம். ஆதாரம் : மற்ற மனிதர்களை விட, (குறிப்பாக) இணை கற்பித்தோரை விட வாழ்வதற்கு அதிகமாக ஆசைப்படுவோராக அவர்களைக் காண்பீர்! (அல்குர்ஆன் 2 : 96)
30.     மறுமையில் நல்லடியார்கள் முகமலர்ச்சியுடன் இறைவனைக் காண்பார்கள் என்பதற்குரிய ஆதாரம் என்ன?
அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும்.தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்.  (அல்குர்ஆன் 75:22,23)
31.  நபியவர்கள் விண்ணுலகப் பயணத்தில் எந்த மரத்தின் அருகில் ஜிப்ரீலைக் கண்டார்கள்?
ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார் (அல்குர்அன் 53 : 13. 14)
32.  இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்கள் காலத்து இறைமறுப்பாளர்கள் வணங்கிய சிலைகளின் பெயர்கள் என்ன?
வத்து, ஸுவாவு, யகூஸ், யவூக், நஸ்ர் (அல்குர்ஆன் 71  : 23)
33.  மறுமையில் இறைவனின் கெண்டைக்காலை விட்டும் திரை அகற்றப்படும் போது ஏற்படும் நிகழ்வு என்ன?
கெண்டைக் கால் திறக்கப்பட்டு ஸஜ்தாச் செய்ய அழைக்கப்படும் நாளில் அவர்களுக்கு அது இயலாது.   அல்குர்ஆன் 68:42
34.  சொர்க்கத்தில் எனக்கொரு வீட்டை எழுப்புவாயாக என்று பிரார்த்தித்த பெண்மணி யார்?
"என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்புவாயாக! ஃபிர்அவ்னிடமிருந்தும், அவனது சித்திரவதையிலிருந்தும் என்னைக் காப்பாயாக! அநீதி இழைத்த கூட்டத்திலிருந்தும் என்னைக் காப்பாயாக!'' என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரை நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான்.  (அல்குர்ஆன் 66 : 11)
35.  மூஸா (அலை)  இறைவனைக் கண்டார்களா?
பதில் நாம் வாக்களித்த இடத்துக்கு மூஸா வந்து, அவரிடம் அவரது இறைவன் பேசிய போது ''என் இறைவா! (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்'' எனக் கூறினார். அதற்கு (இறை வன்) ''என்னை நீர் பார்க்கவே முடியாது. எனினும் அந்த மலையைப் பார்ப்பீராக! அது அதற்குரிய இடத்தில் நிலையாக இருந்தால் நீர் என்னைப் பார்க்கலாம்'' என்று கூறினான். அவரது இறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்த போது அதைத் தூளாக்கினான். மூஸா மூர்ச்சித்து விழுந்தார். அவர் தெளிவடைந்த போது ''நீ தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்'' எனக் கூறினார் (அல்குர்ஆன் 7:143)
36.     தொழுவதற்கு தகுதியான பள்ளி என்று எதனை அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்?
ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர்.418 அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான். (குர்ஆன் 9 : 108)
37.  மலக்கு மார்களுக்கு இறக்கைகள் உண்டா? அதற்குரிய ஆதாரம் என்ன?
(அவன்) வானவர்களை இரண் டிரண்டு, மும்மூன்று நான்கு நான்கு சிறகு களைக் கொண்ட தூதர்களாக அனுப்புவான். அவன் நாடியதைப் படைப்பில் அதிகமாக்குவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 35:1)
38.     வட்டியை உண்போர் மறுமை நாளில் எப்படி எழுவார்கள்?
வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள் (அல்குர்ஆன் 2 : 275)
39.  குர்ஆனில் பெயர்  கூறப்பட்ட மலைக்குன்றுகள் மற்றும் மலைகள் எவை?
மலைக்குன்றுகள் : மஷ்அருல் ஹராம் (2 : 198)  ஸஃபா, (2 : 158) மர்வா(2 :158),  மலைகள் : தூர்சினா  (அதாவது தூர் மலை) (2 : 63,93, 4 :154 19 : 52, 20 : 80, 23: 20, 28:29,46, 52;1, 95;2  , ஜுதி மலை (11 : 44), அரஃபாத் (2 : 198)
40.  மூஸா  (அலை) அவர்களின் சமூகத்தில் மக்களை வழிகெடுத்தவனுடைய பெயர் என்ன?
அவர்களை ஸாமிரி வழிகெடுத்து விட்டான்'' (அல்குர்ஆன் 20 : 85) பின்வரும் வசனங்களிலும் ஸாமிரி என்ற பெயர் இடம் பெற்றுள்ளது. 20 ; 87, 20 ; 95
41.  புறம் பேசுவது எத்தகைய  கொடுஞ்செயலுக்கு நிகரானது?
உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள் (அல்குர்ஆன் 49 : 12)
42.  மனிதர்களுக்கு மதிப்பாகவும், ஏறிச் செல்வதற்காகவும் இறைவன் படைத்த பிராணிகள் எவை?
குதிரைகள், கோவேறுக்கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச் செல்லவும், மதிப்புக்காகவும் (அவன் படைத்தான்.) (அல்குர்ஆன் 16 : 8)
43.     குர்ஆன் பெயர் கூறப்பட்ட மலக்குமார்கள் யார்? யார்?
பதில்     ஜிப்ரீல் (அலை) :  (அல்குர்ஆன் 2:98)  2.      மிக்காயீல் (அலை) : (அல்குர்ஆன் 2:98) 3.மாலிக் (அலை) இவர் நரகத்தின் காவலாளி ஆவார்.  (43:77)
44.     உயிரைக் கைப்பற்றும் வானவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதற்குரிய திருமறை வசனம் எது?
''உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்'' என்று கூறுவீராக!  (அல்குர்ஆன் 32:11)
45.     குர்ஆனில் நேரடியாகக் கூறப்பட்ட நபித்தோழரின் பெயர் என்ன?
ஸைத் (ரலி) . ஆதாரம் 33 வது அத்தியாயம் 37 வது வசனம்.
46.     குர்ஆனில் கூறப்பட்ட அதிக பட்ச எண் எது?
இலட்சம். அல்லது நூறாயிரம். ஆதாரம் :       அவரை ஒரு லட்சம் அல்லது (அதை விட) அதிகமானோருக்குத் தூதராக அனுப்பினோம். (அல்குர்ஆன் 37 : 147)
47.  மறுமை நாளில் எத்தனை மலக்குமார்கள் இறைவனின் அர்ஷைச் சுமப்பர்?
அந்நாளில் (முஹம்மதே!) உமது இறைவனின் அர்ஷை தம் மீது எட்டுப் பேர் (வானவர்கள்) சுமப்பார்கள்.  (அல்குர்ஆன் 69:17)
48.     அல்லாஹ்விடம் மாதங்களின் எண்ணிக்கை எத்தனை? அவற்றில் புனிதமானவை எத்தனை?
வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம்பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை  (அல்குர்ஆன் 9 : 36)
49.  பாவம் செய்வதை விட சிறைச்சாலை எனக்கு மிக விருப்பமானது எனக் கூறியவர் யார்?
யூசுப் நபி ஆதாரம் : "என் இறைவா! இப்பெண்கள் அழைப்பதை விட சிறைச்சாலை எனக்கு மிக விருப்பமானது (அல்குர்ஆன் 12 : 33)
50.  நரகத்தை காவல் காக்கும் மலக்குமார்கள் எத்தனை பேர்?
அதன் மேல் பத்தொன்பது (வானவர்கள்) உள்ளனர். நரகத்தின் காவலர்களை வானவர்களாகவே தவிர நாம் ஆக்கவில்லை. (அல்குர்ஆன் 74:30,31)
51.  திருக்குர்ஆனைப் பாதுகாப்பவன் யார்?
நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம். (அல்குர்ஆன் 15:9)
52.  திருக்குர்ஆன் யாருடைய உள்ளங்களில் இருக்கிறது. ?
இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கின்றன. அல்குர்ஆன் 29 : 49
53.  ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அல்லாஹ் எதற்காக இறைத்தூதர்களை அனுப்பினான்?
''அல்லாஹ்வை வணங்குங்கள்! தீய சக்திகளை விட்டு விலகிக் கொள்ளுங்கள்!'' என்று ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம்.    (அல்குர்ஆன் 16:36)
54.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு தனக்கே நன்மை செய்யவோ தீமை செய்யவோ அதிகாரம் உள்ளதா?
''அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்க வில்லை (அல்குர்ஆன் 7:188)
55.     ஸகாத் யார் யாருக்குரியது?
யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன் (குர்ஆன் 9 : 60)
56.     இறைத்தூதர்கள் அற்புதம் செய்வதற்கான நிபந்தனை என்ன?
எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது. (அல்குர்ஆன் 13:38)
14 : 11,  40 : 78,  
57.     இறைத்தூதர்களுக்கு மனைவி , மக்கள் உண்டா?
உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவி யரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். (அல்குர்ஆன் 13:38)
58.     பிறர் வீடுகளுக்குள் ஸலாம் கூறாமல் நுழையலாமா?
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர்களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம் கூறாமலும் நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள். (அல்குர்ஆன் 24:27)
59.     கியாமத் நாளின் அடையாளமாகத் திகழும் இறைத்தூதர் யார்?
"அவர் (ஈஸா) அந்த நேரத்தின் அடையாளமாவார். அதில் நீர் சந்தேகப்படாதீர்! (அல்குர்ஆன் 43 : 61)
60.     இயேசு (ஈஸா (அலை)) இறைவனின் அடியாரா? அல்லது இறைவனின் மகனா?
உடனே அவர் (அக்குழந்தை), ''நான் அல்லாஹ்வின் அடியான். எனக்கு அவன் வேதத்தை அளித்தான். என்னை நபியாக்கினான். '' என்று கூறினார். (அல்குர்ஆன் 19 30)      4 : 172,
61.     ஈஸா (அலை) யூதர்களால் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார்களா?
அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது.    (அல்குர்ஆன் 4:157,158)
62.     கியாமத் நாளில் அனைத்தும் அழிந்த பிறகு நிலைத்து நிற்பது யார்?
இதில் உள்ள அனைவரும் அழிபவர்கள். மகத்துவமும், கண்ணியமும் மிக்க உமது இறைவனின் முகமே மிஞ்சும். (குர்ஆன் 55:27)
63.     யுக முடிவு நேரம் பற்றிய அறிவு யாரிடம் உள்ளது?
யுக முடிவு நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது  . (அல்குர்ஆன் 31:34)
64.     அல்லாஹ் எதற்காக விதியை ஏற்படுத்தியுள்ளான்?
உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், (விதியை ஏற்படுத்தியுள்ளான்)      (அல்குர்ஆன் 57:23)
65.     லுக்மான் (அலை) தன்னுடைய மகனிடம் எதனை மிகப் பெரும் அநியாயம் எனக் கூறினார்?
லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது ''என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்'' என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன் 31:13)
66.     அல்லாஹ் மன்னிக்காத பெரும் பாவம் எது?
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். (அல்குர்ஆன் 4:48 , 4 ; 116)
67.     இணைகற்பிப்பவர் நல்லறங்கள் செய்தால் இறைவன் ஏற்றுக் கொள்வானா?
''நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; (அல்குர்ஆன் 39:65) 
அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும். (அல்குர்ஆன் 6 : 88)
68.   நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபிமார்களில் முத்திரையானவர் என்பதற்கான ஆதாரம் என்ன?
. முஹம்மத் உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களில் முத்திரையாகவும் இருக்கிறார். (அல்குர்ஆன் 33 : 40)
69.     கணவனை இழந்த பெண்கள் மறுதிருமணம் செய்வதற்கு எவ்வளவு காலத் (இத்தா) காத்திருக்க வேண்டும்?
 உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும் (அல்குர்ஆன் 2 : 234)
70.     கருவுற்ற பெண்களுக்கான இத்தா காலம் எவ்வளவு?
கர்ப்பிணிகளின் காலக்கெடு அவர்கள் பிரசவிப்பதாகும். (அல்குர்ஆன் 65 : 4)
71.     இணை வைப்பவர்கள் அல்லாஹ்வின் ஆலயங்களை நிர்வாகம் செய்யலாமா?
இணை கற்பிப்போர் தமது (இறை)மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 9 : 17)

72.  குர்ஆனில் கூறப்பட்ட நிறங்கள் என்ன?
வெள்ளை (2 : 187) 7 ; 108, 20 ;22 26 ; 33, 27 ; 12, , 28 ;32,  35 ; 27, 37 ;46,  கருப்பு (2 : 187, ) மஞ்சள் (2 : 69, 30 : 51) பச்சை (18 ; 31, 55 ; 76,) சிகப்பு (35 : 27, 55 : 37) நீலம் (20 : 102) கரு மஞ்சள் (2 : 69)  கரும்பச்சை (55 ; 64 .


73.  இணைவைத்த நிலையில் மரணித்தோருக்கு பாவமன்னிப்புத் தேடலாமா?
இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது. (அல்குர்ஆன் 9 : 113)

74.  போட்டிக்கு வரும்போது சூனியக்காரன் ...........................................''

 (போட்டிக்கு) வரும்போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்''  (20 ; 69)

75.     ......................, ............................ குறைவு செய்வோருக்குக் கேடு தான்!
அளவு, நிறுவையில் குறைவு செய்வோருக்குக் கேடு தான்! (அல்குர்ஆன் 83 : 1)

76.  உம்முடன் இருக்கும் (தாய் தந்தை ஆகிய) அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ .......................... அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி ………………….எனக் கூறாதீர்! அவ்விருவரையும் விரட்டாதீர்!
 உம்முடன் இருக்கும் (தாய் தந்தை ஆகிய) அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி 'சீ' எனக் கூறாதீர்! அவ்விருவரையும் விரட்டாதீர்! (அல்குர்ஆன் 17 : 23)

77.  .................................... நெருங்காதீர்கள்! அது வெட்கக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது
விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது (குர்ஆன் 17 : 32)

78.  வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிவார்களா?
வானங்களிலும், பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள்.! (குர்ஆன் 27 : 65)

79.  நபியால் தான் விரும்பியோரை நேர்வழியில் செலுத்த முடியுமா?
முஹம்மதே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். அவன் நேர் வழி பெற்றோரை நன்கறிந்தவன் (அல்குர்ஆன் 28  56)

80.  மனிதர்களே! நீங்கள் அல்லாஹ் விடம் தேவையுடையவர்கள். அல்லாஹ்வே ......................; ............................................

மனிதர்களே! நீங்கள் அல்லாஹ் விடம் தேவையுடையவர்கள். அல்லாஹ்வே தேவைகளற்றவன்; புகழுக்குரியவன். (குர்ஆன் 35 : 15)

81.   எங்கள் இறைவனின் மகத்துவம் உயர்ந்தது. அவன் மனைவியையோ, ................................... ஏற்படுத்திக் கொள்ளவில்லை
எங்கள் இறைவனின் மகத்துவம் உயர்ந்தது. அவன் மனைவியையோ, பிள்ளைகளையோ ஏற்படுத்திக் கொள்ளவில்லை. (அல்குர்ஆன் 72  : 3)

82.  அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற ...............................
அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே (அல்குர்ஆன் 7:194)

83.  "அல்லாஹ் எங்களுக்கு ....................... தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி.
"அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. (அல்குர்ஆன் 9 : 51)

84.  மறுமையில் பரிந்துரைகள் (ஷஃபாஅத்) அனைத்தும் யாருக்குச் சொந்தம்?
பரிந்துரைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே'' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 39 : 44)

85.  நாம் அல்லாஹ்வை நோக்கி வஸீலா தேட வேண்டும் எனக் கூறும் வசனம் எது?
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்! அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! வெற்றி பெறுவீர்கள்.  (அல்குர்ஆன் 5 : 35 )

86.  வெள்ளிக் கிழமை ஜும்ஆவிற்கு பாங்கு கூறப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. (அல்குர்ஆன் 62 : 9)

87.  பெண்கள் அலங்காரத்தை வெளிப்படுத்தலாமா?
அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம்.  (அல்குர்ஆன் 24 : 31)

88.     பெண்கள் சலங்கை கொலுசு அணியலாமா?
கூடாது . ஆதாரம் ; அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். அல்குர்ஆன் (24 : 31)

89.     உண்ணுங்கள்! பருகுங்கள்! ............................... செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை ............................................. 
உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான். (அல் குர்ஆன் 7 : 31 )

90.     நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை ............................, ஷைத்தானின் ........................................ 
நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். (அல் குர்ஆன் 5:90)

91.     குரல்களில் வெறுக்கத் தக்க குரல் எது?
குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்''      அல் குர்ஆன் (31 : 19)

92.     அல்லாஹ்விடமிருந்து பாக்கியமிக்க தூய்மையான காணிக்கை எது?
வீடுகளில் நுழையும் போது அல்லாஹ்விடமிருந்து பாக்கியமிக்க தூய்மையான காணிக்கையாக உங்கள் மீதே ஸலாம் கூறிக் கொள்ளுங்கள்!  (அல்குர்ஆன் 24 : 61)

93.     இபுறாஹிம் நபி காஃபிரான தனது தந்தைக்கு ஸலாம் கூறினாரா?
"உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் உங்களுக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவேன். அவன் என்னிடம் அன்புமிக்கவனாக இருக்கிறான் (என்று இப்ராஹீம் கூறினார்).      (அல்குர்ஆன் 19:47)

94.     மக்கா காஃபிர்கள் கஅபாவில் எவ்வாறு தொழுதார்கள்?
சீட்டியடிப்பதும், கை தட்டுவதும் தவிர (வேறெதுவும்) அந்த ஆலயத்தில் அவர்களின் தொழுகையாக இருக்கவில்லை.  (அல்குர்ஆன் 8 : 35)

95.     அல்லாஹ் பத்ரு யுத்தத்தில் எத்தனை ஆயிரம் மலக்குமார்கள் மூலம் உதவி செய்தான்?
"(விண்ணிலிருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவியது உங்களுக்குப் போதாதா?'' என்று நம்பிக்கை கொண்டோருக்கு நீர் கூறியதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன் 3 : 124)

96.  நபியவர்கள் விண்ணுலகப் பயணத்தில் எந்தப் பள்ளியிலிருந்து எந்தப் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்?
மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன்  (அல்குர்ஆன் 17 : 1)

97.     ”அவரைச் சந்தித்ததில் நீர் சந்தேகம் கொள்ளாதீர்” என்று வசனத்தில் யார்? யாரை? சந்தித்ததைப் பற்றி கூறப்படுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) மூஸா நபியை மிஃராஜில் சந்தித்தது. ஆதாரம் ;மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். (முஹம்மதே!) அவரைச் சந்தித்ததில் நீர் சந்தேகம் கொள்ளாதீர். அவரை இஸ்ராயீலின் மக்களுக்கு வழி காட்டியாக்கினோம். (அல்குர்ஆன் 32 : 23)

98.  மக்காவினுடைய மற்றொரு பெயர் என்ன?
அகிலத்தின் நேர்வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்  (அல்குர்ஆன் 3 : 96)

99.  மதீனாவின் பழைய பெயர் திருக்குர்ஆனின் எந்த வசனத்தில் இடம் பெற்றுள்ளது. ?
"யஸ்ரிப் (மதீனா)வாசிகளே! உங்களால் (எதிர்த்து) நிற்க முடியாது. (அல்குர்ஆன் 33 : 13)

100. பாபிலோன் நகரத்தில் மக்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்த ஷைத்தான்களின் பெயர் என்ன?
பாபில் நகரத்தில் சூனியத்தை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத் என்ற ஷைத்தான்களே (ஏகஇறைவனை) மறுத்தனர். (அல்குர்ஆன் 2 : 102)



2 comments:

Unknown said...

மாஷா அல்லாஹ்


Unknown said...

மாஷா அல்லாஹ்


Post a Comment