23 September 2021

சஃபர் மாதம் பீடை மாதமா?

 சஃபர் மாதம் பீடை மாதமா?

முன்னுரை

மனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்துள்ளான்.. அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ கிடையாது. ஆனால் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட இந்தக் காரியங்களை முஸ்லிம்களே பால் கிதாபு, பார்வை பார்த்தல் என்ற பெயர்களில் செய்து வருகின்றனர். இது போன்று இஸ்லாத்திற்கு முரணாக, முஸ்லிம்கள் செய்யும் காரியங்களில் ஒன்று தான் ஸஃபர் மாதத்தைப் பீடை மாதம் என்று கருதுவதாகும். இந்த நம்பிக்கை எந்த அளவுக்கு இஸ்லாத்துக்கு எதிரான நம்பிக்கை என்பதை இக்கட்டுரையில் நாம் காணவிருக்கின்றோம். 

ஸஃபர் மாதம் தொடர்பாக முஸ்லிம்களிடம் காணப்படும் தவறான நம்பிக்கைகள்


முஸ்லிம்களில் சிலர் ஸஃபர் மாதம் முழுவதும் திருமணம் போன்ற காரியங்களை செய்யாமல் இருக்கின்றனர். 

அது போன்று ஸஃபர் கழிவு அல்லது ஒடுக்கத்து புதன் என்ற பெயரில் ஸஃபர் மாதத்தின் கடைசி புதன்கிழமை அன்று ஒரு சில அரபி வார்த்தைகளை மா இலைகளிலும் தட்டுகளிலும் மை கொண்டு எழுதி, அப்படி எழுதிய வாசகங்களை தண்ணீரில் கரைத்து குடித்து, வீடுகளில் தெளித்து, தலையில் தெளித்து குளித்தால் முஸீபத்துகள் நீங்கும் என்று செய்து வருகிறார்கள். 


ஸஃபர் மாத கடைசி புதனன்று வீடு முழுவதும் சுத்தம் செய்து  கறி-சோறு சமைத்து, அரிசி ரொட்டியும் சுட்டு ஆண்களும் பெண்களுமாக சேர்ந்து கடற்கரைக்கோ, ஆற்றாங்கரைக்கோ, புல்வெளிக்கோ, தர்ஹாக்களுக்கோ சென்று நீராடிவிட்டு அங்கேயே சாப்பிட்டு விட்டு வந்தால் முஸீபத்துகள் நீங்கும் என நம்புகின்றனர். நமது கடையநல்லூரில் உள்ள முஸ்லிம்கள்  பெரியாறு, மற்றும் ஏழுசுனைப் பிறை போன்ற இடங்களுக்கு குடும்பத்துடன் சென்று ஆண்களும், பெண்களும் கலந்து குளிக்கின்றனர். இவ்வாறு செய்வதைதான் ஒடுக்கத்துப் புதன் என்று கருதுகின்றனர். 


இன்னும் ஒருசில பகுதிகளில் கணவன்-மனைவி ஒடுக்கத்து புதன் அன்று புல்வெளி பிரதேசம் சென்று சிறிது நேரத்திற்கு புல்வெளியில் காலை வைத்துவிட்டு நேராகச் சினிமா தியேட்டருக்கு சென்று படம் பார்க்கின்றனர். 


இன்னும் சில இடங்களில் கொழுக் கட்டைகளைச் சுட்டு  அதைப் பீடை பிடித்தவரின் (?) தலையில் கொட்டுவார்கள். இதன் மூலம் பீடை நீங்கிவிடும் என நம்புகின்றனர். 

இது போன்ற காரியங்கள் முழுக்க முழுக்க இஸ்லாத்திற்கு நேர் எதிரான காரியங்களாகும். இவை எப்படித் தவறானவை என்பதற்குரிய சான்றுகளைக் காண்போம். 

இஸ்லாத்தில் பீடை மாதம் என்பது கிடையாது. 

எந்த ஒரு மாதத்தையும், நாளையும் பீடை (கெட்டது) என்று நம்புவது திருமறைக்குர்ஆனுக்கும், நபிமொழிகளுக்கும் எதிரான நம்பிக்கையாகும். நமக்கு ஏற்படும் நல்லவை கெட்டவை அனைத்துமே அல்லாஹ்வின் நாட்டப்படியே ஏற்படுகிறது. எந்த ஒரு நாளின் காரணமாகவோ, நேரத்தின் காரணமாகவோ ஏற்படுவதில்லை. இதோ அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள். 


“அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர வேறெதுவும் எங்களை ஒருபோதும் அணுகாது. அவனே எங்கள் பாதுகாவலன். இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வேண்டும்” எனக் கூறுவீராக!

(அல்குர்ஆன் 9 : 51)


அல்லாஹ் உமக்கு ஏதேனும் துன்பத்தை ஏற்படுத்தினால் அதை நீக்குபவன் அவனைத் தவிர யாருமில்லை. அவன் உமக்கு ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவர் யாருமில்லை. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை வழங்குகிறான். அவன் மன்னிப்புமிக்கவன், நிகரிலா அன்பாளன். 

(அல்குர்ஆன் 10:107)


நாட்களை நல்ல நாட்கள், கெட்ட நாட்கள் என்று கருதுவதை அல்லாஹ் வெறுக்கிறான். அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். 

“ஆதமுடைய மகன் என்னை நோவினை செய்கின்றான். நானே காலமாக இருக்க அவன் காலத்தைத் திட்டுகின்றான். என் கையிலே ஆட்சியுள்ளது. இரவு பகலை நானே புரட்டி வருகிறேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா

நூல்: புகாரி 4826

ஒரு நாளை நல்ல நாள் கெட்ட நாள் என்று கருதுவது தவறான நம்பிக்கை என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம். இவ்வாறிருக்க ஸஃபர் மாதம் பீடை மாதம் என்று நம்புவது இஸ்லாத்திற்கு எதிரான நம்பிக்கையாகும் என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம். 

ஸஃபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். 

தொற்று நோய் என்பதும் கிடயாது. , பறவைச் சகுணம் என்பதும் கிடையாது.  ஸபர் பீடை என்பதும் கிடையாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5707, 5717

அறியாமைக் காலத்தில் வாழ்ந்த அரபியர்கள் ஷவ்வால் மாதத்தை பீடை மாதமாகக் கருதினார்கள். அதில் திருமணம் போன்ற காரியங்களைச் செய்யமாட்டார்கள். இந்த நம்பிக்கையை நபி (ஸல்) அவர்கள் தகர்ந்தெறிந்து அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை ஷவ்வால் மாதத்தில்தான் திருமணம் செய்து கொண்டார்கள். இது தொடர்பாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதைப் பாருங்கள். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை ஷவ்வால் மாதத்தில் மணந்துகொண்டார்கள்; ஷவ்வால் மாதத்திலேயே என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியரில். அவர்களுடன் என்னைவிட அதிக நெருக்கத்திற்குரியவர் யார்?

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : முஸ்லிம் (2782)

எந்த ஒரு மாதத்தையும் பீடை மாதம் என்று கருதுவது இஸ்லாம் ஒழித்த மூட நம்பிக்கைகளில் ஒன்றாகும் என்பதை மேற்கண்ட சான்றுகளிலிருந்து நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம். 

நபிகள் நாயகம் ஸஃபர் மாதத்தில் நோயுற்றார்களா?

நபி (ஸல்) அவர்கள் ஸஃபர் மாதத்தில் நோய்வாய்ப் பட்டிருந்ததால் அந்த மாதம் பீடை மாதம் என்ற நம்பிக்கை தமிழக சில முஸ்லிம்களிடம் உள்ளது. மேலும் அந்த ஸஃபர் மாதத்தின் கடைசி புதன்கிழமை அன்றுதான் நபி (ஸல்) அவர்கள் குணமடைந்து நீராடினார்களாம், அதனால் நாமும் ஒடுக்கத்துப் புதனில் குளித்து நமது முஸீபத்தை நீக்க வேண்டுமாம் என்று இஸ்லாமிய அறிஞர்களில் சிலர் மக்களிடம் போதிக்கின்றனர். 

 இந்த சம்பவம் முழுக்க முழுக்க ஆதாரமற்ற பொய்யான சம்பவமாகும். 

நோய் ஏற்பட்டால் அது நீங்குவதற்கு அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும். மருத்துவம் பார்க்க வேண்டும் என்றே நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். 

இவ்வாறு ஆறு குளங்களில் சென்று குளிக்க வேண்டும் என்றோ, கறி சோறு சமைத்து சாப்பிட வேண்டும் என்றோ நபி (ஸல்) அவர்கள் ஒரு போதும் கற்றுத் தரவுமில்லை அவர்கள் அவ்வாறு செய்யவுமில்லை. 

நமக்கு நோய் ஏற்பட்டால் அதை நீக்கக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் மட்டும்தான்.  இதோ இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறியதாக திருக்குர்ஆன் குறிப்பிடுவதைப் பாருங்கள்.!


நான் நோயுற்றால் அவனே என்னைக் குணப்படுத்துகிறான்.

(அல்குர்ஆன் 26: 80)

எனவே ஸஃபர் மாதத்தில் நபிகள் நாயகம் நோயுற்றார்கள் என்று நம்புவதும், ஆறு குளங்களில் சென்று குளித்தால் பீடை நீங்கிவிடும் என்று நம்புவதும் இஸ்லாத்திற்கு மாற்றமான நம்பிக்கையாகும். 


வேண்டாம் மாற்ற மத கலாச்சாரம் 

நல்ல நேரம், கெட்ட நேரம் பார்ப்பது, சகுணம் பார்ப்பது, பீடை மாதம் என நம்புவது, ஜோசியம் பார்ப்பது, ஆறு குளங்களில் குளித்தால் துன்பம் நீங்கிவிடும் என்று நம்புவது இவையெல்லாம் மாற்றுமதக் கலாச்சாரம் ஆகும். 


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் பிற சமுதாயத்திற்கு ஒப்பாக நடக்கிறானோ அவன் அவர்களைச் சார்ந்தவனே. 

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் :  அபூதாவூத் (3512)

இந்த ஸஃபர் மாதம் மாதம் தொடர்பான நம்பிக்கை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த இஸ்லாமிய நம்பிக்கை அல்ல. அது முழுக்க முழுக்க முஸ்லிம் அல்லாதவர்களின் நம்பிக்கையைப் போன்றதாகும். எனவே இது போன்ற தவறான நம்பிக்கைகளிலிருந்து நம்மையும், நமது சமுதாயத்தையும் நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். 


அறிவுப் பூர்வமான சான்றுகள். 

இவர்களின் வாதப்படி ஸஃபர் மாதம் ஒரு பீடை மாதம் என்று வைத்துக் கொண்டால்(?) எல்லோருக்கும் கேடுகள் வரும் நாளாக இருக்க வேண்டும், அதே போன்று நல்ல நாள் என்று ஒன்று இருக்குமேயானால் அந்த நாள் உலகத்தில் இருக்கக்கூடிய அனைவருக்கும் நன்மையானதாகவே இருக்கவேண்டும். எந்தவொரு நாளாக இருந்தாலும் அவற்றில் நல்லவைகளும், கெட்டவைகளும் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கின்றது. உலகிலுள்ள அனைவருக்கும் நல்லது நடக்கும் நாளாகவோ அல்லது எல்லோருக்கும் தீயவை நடக்கும் நாளாகவோ யாரும் ஒரு நாளைக் காட்ட முடியாது. இந்த அடிப்படை யதார்த்த உண்மையைக்கூட அறிந்து செயல்பட முடியாமல் பிற்காலத்தில் ஏற்பட்ட செயல்களின் காரணமாக மூளைச் சலவை செய்யப்பட்டு சுயமாக சிந்தித்து நல்லது, கெட்டது எது என பிரித்தறிய முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை நினைக்கும்பொழுது மார்க்க பிடிப்பற்ற அறிஞர்கள் உண்மையான இஸ்லாத்தினை எடுத்து சொல்லாததும், தூய இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டாத முஸ்லிம்களும் ஆவர் என்று அறிய முடிகிறது.


ஆக வாழ்க்கையில் ஒருவர் சந்தோஷப்படுவது மற்றொருவர் துக்கப்படுவதென்பது நாள்தோறும் நிகழும் நிகழ்வுகளாகும். இது அல்லாஹ்வின் விதியின் அடிப்படையில் ஏற்படுகிறது. இந்த அடிப்படையை சிந்தித்தாலே ஸஃபர் மாதம் பீடை மாதம் என்ற தவறான மூடநம்பிக்கையிலிருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ள முடியும்.


நபி வழி நடப்போம்! புது வழி தவிர்ப்போம்!


நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவை ஆகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: நஸயீ 1560


ஒரு நிகழ்ச்சி இஸ்லாத்தில் முஸ்லிம்களால் நடைமுறைப் படுத்தபடுகின்றது என்றால் அது குர்ஆன், ஹதீஸின் நிழலில்தான் செய்யப்படவேண்டும். ஆக இந்த ஸஃபர் மாதத்தை பீடை என்பதற்கு குர்ஆன்-ஹதீஸில் எந்த ஆதாரமும் இல்லை என்பதை விளங்கி இது போன்ற மார்க்கம் அனுமதிக்காத செயல்களை விட்டொழிக்க வேண்டும். அல்லாஹ் போதுமானவன்.

0 comments:

Post a Comment