14 December 2023

இரமலான் அல்லாத நாட்களில் இரவுத் தொழுகையைத் ஜமாஅத்தாகத் தொழலாமா?

  நபி (ஸல்) அவர்கள் இரமலான் மாதம் முழுவதும் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவதற்கு ஆர்வமூட்டியுள்ளார்கள்.

இரமலானில் சில நாட்கள் தொடர்ச்சியாக அவர்கள் ஜமாஅத்தாக நிறைவேற்றியும் உள்ளார்கள். கடமையாகிவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே அவர்கள் ஜமாஅத்தாக நிறைவேற்றவில்லை. நபி (ஸல்) அவர்கள் மரணத்திற்குப் பிறகு யாரும் மார்க்கத்தில் எதையும் கடமையாக்கிவிட முடியாது. எனவே நாம் இரமலான் முழுவதும் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுது கொள்ளலாம்.

29 May 2023

குர்பானி

 குர்பானியின் சட்டங்கள்


 
குர்பானி கொடுப்பது வலியுறுத்தப்பட்ட சுன்னத்.

 عَنْ أُمِّ سَلَمَةَ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- قَالَ « إِذَا رَأَيْتُمْ هِلاَلَ ذِى الْحِجَّةِ وَأَرَادَ أَحَدُكُمْ أَنْ يُضَحِّىَ فَلْيُمْسِكْ عَنْ شَعْرِهِ وَأَظْفَارِهِ ».

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் துல்ஹஜ் பிறையைக் கண்டு, உங்களில் ஒருவர் குர்பானி கொடுக்க நாடினால், அவர் தமது முடியையும் நகங்களையும் அகற்றாமல் இருக்கட்டும்!

அறிவிப்பவர் உம்மு ஸலமா (ரலி) நூற்கள் : முஸ்லிம் (3999) நஸயீ (4285)

“உங்களில் ஒருவர் குர்பானி கொடுக்க நாடினால்” என்று நபியவர்கள் குறிப்பிடுவதன் மூலம் குர்பானி என்பது விரும்பியவர் செய்கின்ற சுன்னத்தான நற்செயல் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். குர்பானியின் சிறப்புகள் தொடர்பாக வரும் திருமறை வசனங்கள், நபிமொழிகள் அனைத்தும் குர்பானி கொடுப்பது வலியுறுத்தப்பட்ட சுன்னத் என்பதை நமக்கு எடுத்துரைக்கிறது.

21 March 2023

இரவுத் தொழுகையில் ஒவ்வொரு இரண்டு ரக்அத்திற்கும் மத்தியில் திக்ர், தஸ்பீஹ் செய்வது நபிவழியா?

பதில் : 

இதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் கிடையாது. இவையெல்லாம் மார்க்கத்தில் நுழைவிக்கப்பட்ட பித்அத் ஆகும்.



செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி).

நூல்: நஸாயீ 1578.

நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப் பட்டதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 2697

"நம்முடைய மார்க்கத்தில் இல்லாத ஒரு செயலை யார் புதிதாகச் செய்கிறாரோ அது (இறைவனிடம்) நிராகரிக் கப்பட்டதாகும்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் 3541

 (மார்க்கத்தில்) புதிதாக உருவாக்கப்படும் (பித்அத்தான) காரியங்களை விட்டும் உங்களை நான் எச்சரிக்கை செய்கிறேன். ஏனெனில் புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு காரியமும் பித்அத். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடு என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இர்பாள் பின் ஸாரியா(ரலி)

நூல்: அஹ்மத் 17184

குர்ஆன் சுன்னாவைப் பின்பற்றக் கூடியவர்களுக்கு இதுவே போதுமானதாகும். ஆனால் மத்ஹபைப் பின்பற்றுவதாக கூறுபவர்கள் தங்களது இமாம்கள் கூறினால்தான் ஏற்றுக் கொள்வோம் என்கிறார்கள். அவர்களுக்காக மத்ஹபைச் சார்ந்த அறிஞர்களின் கூற்றுகளை கீழே தருகிறோம்.


மாலிக் மத்ஹபைச் சார்ந்த அறிஞர் இப்னுல் ஹாஜ் அவர்களின் ஃபத்வா

المدخل لابن الحاج (2/ 293)

(فَصْلٌ فِي الذِّكْرِ بَعْدَ التَّسْلِيمَتَيْنِ مِنْ صَلَاةِ التَّرَاوِيحِ)ِ وَيَنْبَغِي لَهُ أَنْ يَتَجَنَّبَ مَا أَحْدَثُوهُ مِنْ الذِّكْرِ بَعْدَ كُلِّ تَسْلِيمَتَيْنِ مِنْ صَلَاةِ التَّرَاوِيحِ  وَمِنْ رَفْعِ أَصْوَاتِهِمْ بِذَلِكَ وَالْمَشْيِ عَلَى صَوْتٍ وَاحِدٍ فَإِنَّ ذَلِكَ كُلَّهُ مِنْ الْبِدَعِ

தராவீஹ் தொழுகையில் ஒவ்வொரு இரண்டு ஸலாமிற்குப் பிறகு திக்ர் செய்வதைப் பற்றிய விளக்கம்

தராவீஹ் தொழுகையில் ஒவ்வொரு இரண்டு ஸலாமிற்குப் பிறகும் திக்ர் என்று அவர்கள் எதைப் புதிதாக (மார்க்கமாக) உருவாக்கியுள்ளார்களோ அதைத் தவிரந்து கொள்வது அவசியமானதாகம். அவற்றைக் கொண்டு அவர்கள் தமது சப்தங்களை உயர்த்துவதையும், ஒரே குரலாக ஓதுவதையும் தவிர்ந்து கொள்ள வேண்டும். இவை அனைத்துமே பித்அத் ஆகும்.

(நூல் : அல்மத்ஹல் லிஇப்னில் ஹாஜ் பாகம் 2 பக்கம் 293)


ஷாஃபி மத்ஹபைச் சார்ந்த அறிஞர் இப்னு ஹஜர் அல் ஹைஸமி அவர்களின் ஃபத்வா

الفتاوى الفقهية الكبرى (1/ 186)

 وَسُئِلَ فَسَّحَ اللَّهُ في مُدَّتِهِ هل تُسَنُّ الصَّلَاةُ عليه صلى اللَّهُ عليه وسلم بين تَسْلِيمَاتِ التَّرَاوِيحِ أو هِيَ بِدْعَةٌ يُنْهَى عنها فَأَجَابَ بِقَوْلِهِ الصَّلَاةُ في هذا الْمَحَلِّ بِخُصُوصِهِ  لم نَرَ شيئا في السُّنَّةِ وَلَا في كَلَامِ أَصْحَابِنَا فَهِيَ بِدْعَةٌ يُنْهَى عنها من يَأْتِي بها بِقَصْدِ كَوْنِهَا سُنَّةً في هذا الْمَحَلِّ بِخُصُوصِهِ

தராவீஹ் தொழுகையில் ஒவ்வொரு ஸலாத்திற்கும் மத்தியில் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஓதுவது சுன்னத்தாக்கப்பட்டுள்ளதா? அல்லது அது தடைசெய்யப்பட வேண்டிய பித்அத்தா?
இதற்கு (இமாம் இப்னு ஹஜர் ஹைஸமீ) பின்வருமாறு பதிலளித்தார் :

குறிப்பாக இந்த இடத்தில் ஸலவாத் சொல்ல வேண்டும் என்பதற்கு நபிவழியில் எந்த ஆதாரத்தையும் நாம் காணவில்லை. நம்(முடைய மத்ஹபைச்) சார்ந்தவர்களின் பேச்சிலும் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இது ஒரு பித்அத் ஆகும்.  குறிப்பாக இந்த இடத்தில் ஸலவாத் சொல்வது சுன்னத் ஆகும் என்ற நோக்கத்தில் யார் அதைச் செய்கிறாரோ அவர் அதை விட்டும் தடுக்கப்பட வேண்டும்.


(அல்ஃபதாவா அல்ஃபிக்ஹியத்துல் குப்ரா பாகம் 1, பக்கம் 186)

19 March 2023

இரவுத் தொழுகை

இரவுத் தொழுகை 




கடமையான தொழுகைக்குப் பிறகு மிகவும் சிறப்பு வாய்ந்த, அதிக நன்மையைப் பெற்றுத் தரக் கூடிய தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்.

 

''ரமலான் மாதத்திற்குப் பிறகு சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி      நூல்: முஸ்லிம் 2157


இரவில் தொழப்படும் தொழுகைக்குப் பல பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. 1. ஸலாத்துல் லைல் (இரவுத் தொழுகை) 2. கியாமுல் லைல் (இரவில் நிற்குதல்) 3. வித்ர் (ஒற்றைப்படைத் தொழுகை) 4. தஹஜ்ஜுத் (விழித்துத் தொழும் தொழுகை) ஆகிய பெயர்கள் ஹதீஸ்களில் காணப்படுகின்றன.

ரமலான் மாதத்தில் தொழப்படும் இரவுத் தொழுகைக்குப் பழக்கத்தில் தராவீஹ் என்று குறிப்பிடுகின்றனர். இந்தப் பெயர் நபிமொழிகளில் குறிப்பிடப்படவில்லை.

இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். ஒருவர் இரவுத் தொழுகையை முடித்துக் கொள்ள நாடினால் ஒற்றைப் படை எண்ணிக்கை தொழுது அத்தொழுகையை முடிக்க வேண்டும்.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகையைப் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். உங்களில் எவரும் ஸுப்ஹுத் தொழுகையைப் பற்றி அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அவர் (முன்னர்) தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கி விடும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரீ 990

இரவுத் தொழுகையின் நேரம்


இஷாத் தொழுகை முடிந்ததிலிருந்து பஜ்ர் நேரம் வரும் வரை இத்தொழுகையைத் தொழலாம். நபி (ஸல்) அவர்கள் அனைத்து நேரங்களிலும் தொழுதுள்ளார்கள். பின்வரும் ஹதீஸ்களின் அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் இரவின் எல்லா நேரங்களிலும் இரவுத் தொழுகையை நிறைவேற்றியுள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம் 


நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை முடித்ததிலிருந்து பஜ்ர் தொழுகை வரை (மொத்தம்)
11 ரக்அத்கள் தொழுதுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் 1340


இரவின் கடைசியின் மூன்றிலொரு பகுதி நேரமான போது
11 ரக்அத்கள் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி)

நூல்: புகாரீ 7452


நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் இரவின் கடைசி நேரத்தில் எழுந்து தொழுதார்கள். (ஹதீஸின் கருத்து)

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 428


நபி (ஸல்) அவர்கள் பாதி இரவான போது எழுந்து தொழுதார்கள். (ஹதீஸின் கருத்து)

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரீ 183


நபி (ஸல்) அவர்கள் இரவின் அனைத்து நேரத்திலும் வித்ர் தொழுதுள்ளார்கள். அவர்களின் வித்ர் (சில நேரங்களில்) ஸஹர் வரை நீடித்துள்ளது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரீ 996


ரக்அத்களின் எண்ணிக்கை

8+3 ரக்அத்கள்

''ரமலானில் நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?'' என்று ஆயிஷா (ரலி) இடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், ''நபி (ஸல்) அவர்கள் ரமலானிலும், ரமலான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும், நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும், நீளத்தையும் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்'' என்று விடையளித்தார்கள்.

''அல்லாஹ்வின் தூதரே! வித்ருத் தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குவீர்களா?'' என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''ஆயிஷா! என் கண்கள் தாம் உறங்குகின்றன; என் உள்ளம் உறங்குவதில்லை'' என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸலமா

நூல்கள்: புகாரீ 1147, முஸ்லிம் 1344


12+1 ரக்அத்கள்

நபி (ஸல்) அவர்களின் மனைவியும் எனது சிறிய தாயாருமான மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில் நான் ஒரு நாள் இரவு தங்கினேன். நான் தலையணையின் பக்க வாட்டில் சாய்ந்து தூங்கினேன். நபி (ஸல்) அவர்களும், அவர்களது மனைவியும் அதன் மற்ற பகுதியில் தூங்கினார்கள். இரவின் பாதி வரை - கொஞ்சம் முன் பின்னாக இருக்கலாம் - நபி (ஸல்) அவர்கள் தூங்கினார்கள். பின்னர் விழித்து அமர்ந்து தங்களுடைய கையால் முகத்தைக் தடவித் தூக்கக் கலக்கத்தைப் போக்கினார்கள். பின்னர் ஆலுஇம்ரான் என்ற அத்தியாயத்தின் இறுதியிலுள்ள பத்து வசனங்களை ஓதினார்கள். பின்னர் எழுந்து சென்று, தொங்க விடப்பட்டிருந்த பழைய தோல் பையிலிருந்து (தண்ணீர் எடுத்து) உளூவை நல்ல முறையில் செய்தார்கள். நானும் எழுந்து நபி (ஸல்) அவர்கள் செய்தது போன்று (உளூ) செய்து விட்டு நபி (ஸல்) அவர்களின் அருகில் போய் நின்றேன். அவர்கள் தங்கள் வலக்கரத்தை என் தலை மீது வைத்தார்கள். எனது வலது காதைப் பிடித்து (அவர்களின் வலப்பக்கம்) நிறுத்தினார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்பு வித்ரு தொழுதார்கள். பின்னர் பாங்கு சொல்பவர் வரும் வரை சாய்ந்து படுத்தார்கள். பிறகு எழுந்து சுருக்கமாக இரு ரக்அத்கள் தொழுது விட்டு சுப்ஹுத் தொழுகைக்காக (வீட்டை விட்டு) வெளியே சென்றார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்கள்: புகாரீ 183, முஸ்லிம் 1400


நபி (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்கள்: புகாரீ 1138, முஸ்லிம் 1402


10+1 ரக்அத்கள்

நபி (ஸல்) அவர்கள் இரவில் பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஒரு ரக்அத்தை வித்ராகத் தொழுதார்கள். தொழுது முடித்த பின் (தம்மை அழைப்பதற்காக) தொழுகை அறிவிப்பாளர் தம்மிடம் வரும் வரை வலப்பக்கம் சாய்ந்து படுத்திருப்பார்கள். (அவர்) வந்ததும் (எழுந்து) சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஸுப்ஹுடைய சுன்னத்) தொழுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் 1339


8+5 ரக்அத்கள்

நபி (ஸல்) அவர்கள் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ராகத் தொழுவார்கள். அ(ந்த ஐந்து ரக்அத்)தில் கடைசி ரக்அத் தவிர வேறெந்த ரக்அத்திலும் உட்கார மாட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் 1341


4+5 ரக்அத்கள்

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: எனது சிறிய தாயாரும் நபி (ஸல்) அவர்களின் மனைவியுமான மைமூனா பின்துல் ஹாரிஸ் (ரலி) அவர்களின் வீட்டில் நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்த இரவில் நானும் தங்கியிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் (பள்ளியில்) இஷா தொழுகை நடத்தி விட்டுப் பின்னர் தமது வீட்டிற்கு வந்து நான்கு ரக்அத்துகள் தொழுது விட்டு உறங்கினார்கள். பின்னர் எழுந்து ''சின்னப் பையன் தூங்கிவிட்டானோ?'' அல்லது அது போன்ற ஒரு வார்த்தையைச் சொல்லி விசாரித்து விட்டு மீண்டும் தொழுகைக்காக நின்று விட்டார்கள். நானும் (அவர்களுடன்) அவர்களது இடப்பக்கமாகப் போய் நின்று கொண்டேன். உடனே என்னை அவர்களின் வலது பக்கத்தில் இழுத்து நிறுத்தி விட்டு (முதலில்) ஐந்து ரக்அத்துகளும் பின்னர் (சுப்ஹின் முன்ன சுன்னத்) இரண்டு இரக்அத்துகளும் தொழுது விட்டு அவர்களின் குறட்டை ஒலியை நான் கேட்குமளவிற்கு ஆழ்ந்து உறங்கிவிட்டார்கள். பிறது (சுபுஹுத்) தொழுகைக்கு புறப்பட்டார்கள்.

நூல்: புகாரி (117)


8+5 ரக்அத்கள்

நபி (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ராகத் தொழுவார்கள். அ(ந்த ஐந்து ரக்அத்)தில் கடைசி ரக்அத் தவிர வேறெந்த ரக்அத்திலும் உட்கார மாட்டார்கள்

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் (1341)


9 ரக்அத்கள்

நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ''ஃபஜ்ருடைய ஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் (நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள்)'' என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: மஸ்ரூக்

நூல்: புகாரீ 1139


7 ரக்அத்கள்

நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ''ஃபஜ்ருடைய ஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் (நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள்)'' என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: மஸ்ரூக்

நூல்: புகாரீ 1139


5 ரக்அத்கள்

''வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி)

நூல்கள்: நஸயீ 1692, அபூதாவூத் 1212, இப்னுமாஜா 1180


3 ரக்அத்கள்

''வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி)

நூல்கள்: நஸயீ 1692, அபூதாவூத் 1212, இப்னுமாஜா 1180


1 ரக்அத்

''வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி)

நூல்கள்: நஸயீ 1692, அபூதாவூத் 1212, இப்னுமாஜா 1180

வித்ரை இறுதியாகத் தொழுதல்

இரவுகளின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி (998)


வித்ர் தொழும் முறை

நபி (ஸல்) அவர்கள் ஐந்து அல்லது ஏழு ரக்அத்கள் வித்ர் தொழுவார்கள். அவற்றுக்கிடையே ஸலாமைக் கொண்டோ, அல்லது பேச்சைக் கொண்டோ பிரிக்க மாட்டார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)

நூல்கள்: நஸயீ 1695, இப்னுமாஜா 1182, அஹ்மத் 25281


நபி (ஸல்) அவர்கள் ஐந்து ரக்அத்கள் வித்ர் தொழுவார்கள். அதன் கடைசியில் தவிர மற்ற ரக்அத்களில் அமர மாட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: நஸயீ 1698


நபி (ஸல்) அவர்களுக்கு உடல் கனத்த போது ஏழு ரக்அத்கள் தொழுதார்கள். அதில் அதன் கடைசி ரக்அத்தில் தவிர மற்ற ரக்அத்துகளில் உட்காரவில்லை.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: நஸயீ 1699

...
நபி (ஸல்) அவர்கள வயதாகி பலவீனம் அடைந்த போது ஏழு ரக்அத்கள் வித்ரு தொழுதார்கள். அதில் ஆறாவது ரக்அத்தில் தவிர மற்ற ரக்அத்களில் உட்காரவில்லை. பின்னர் எழுவார்கள். ஸலாம் கொடுக்க மாட்டார்கள். பின்னர் ஏழாவது ரக்அத்தைத் தொழுவார்கள். பின்னர் ஸலாம் கூறுவார்கள். பின்னர் இரண்டு ரக்அத்கள் அமர்ந்து தொழுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: நஸயீ 1700

நபி (ஸல்) அவர்கள் மூன்று ரக்அத்கள் வித்ரு தொழுவார்கள். அதில் கடைசி ரக்அத்தில் தவிர மற்ற ரக்அத்களில் அமர மாட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: பைஹகீ (பாகம்:3, பக்கம்:28)

நபி (ஸல்) அவர்கள் மூன்று ரக்அத்கள் வித்ரு தொழுவார்கள். முதல் ரக்அத்தில் ஸப்பி ஹிஸ்ம ரப்பி(க்)கல் அஃலாஎன்ற அத்தியாயத்தையும் இரண்டாவது ரக்அத்தில் குல் யா அய்யுஹல் காஃபிரூன்என்ற அத்தியாயத்தையும் மூன்றாவது ரக்அத்தில் குல் ஹுவல்லாஹு அஹத்என்ற அத்தியாயத்தையும் ஓதுவார்கள்.

அறிவிப்பவர்: உபை பின் கஅப் (ரலி)

நூல்: நஸாயீ (1681)


வித்ரு தொழுகையில் குனூத்


நபி (ஸல்) அவர்கள் வித்ரு தொழுகையில் குனூத் ஓதுவதற்குச் சில வார்த்தைகளை எனக்குக் கற்றுத் தந்தார்கள். (அவை)

اَللّٰهُمَّ اهْدِنـِيْ فِيْمَنْ هَدَيْتَ وَعَافِنِيْ فِيْمَنْ عَافَيْتَ وَتَوَلَّنِيْ فِيْمَنْ تَوَلَّيْتَ وَبَارِكْ لِيْ فِيْمَا أَعْطَيْتَ وَقِـنِـيْ شَرَّ

مَا قَضَيْتَ إِنَّكَ تَقْضِيْ وَلاَ يُقْضٰى عَلَيْكَ إِنَّهُ لاَ يَذِلُّ مَنْ وَالَيْتَ تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ

அல்லாஹும் மஹ்தினீ ஃபீமன் ஹதய்த்த. வஆஃபினி ஃபீமன் ஆஃபய்த்த. வதவல்லனீ ஃபீமன் தவல்லய்த்த. வபாரிக்லீ ஃபீமா அஃதய்த்த. வகினீ ஷர்ர மாகலய்த்த. ஃபஇன்னக தக்லீ வலா யுக்ளா அலைக்க. இன்னஹு லாயதில்லு மன்வாலைத்த. தபாரக்த ரப்பனா வதஆலைத்த.

அறிவிப்பவர்: ஹஸன் (ரலி)

நூல்கள்: நஸாயீ (1725), திர்மிதீ (426), அபூதாவுத் (1214), இப்னு மாஜா (1168), அஹ்மத் (1625, 1631)

வித்ரு தொழுகையில் மேலுள்ள குனூத் எனும் பிரார்த்தனையை ஓத வேண்டும். அதனை ஓதும் போது கைகளை உயர்த்துவதற்கோ, சப்தமாக ஓதுவதற்கோ ஆதாரங்கள் இல்லை.


ஒரு இரவில் இரண்டு வித்ரு இல்லை

ஒரு இரவில் இரண்டு வித்ரு தொழுகை இல்லைஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: இப்னு அலீ (ரலி)

நூல்: திர்மிதீ (470)


வித்ருக்குப் பின் ஓதும் துஆ

سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوْسِ

நபி (ஸல்) அவர்கள் வித்ர் தொழுகைக்கு ஸலாம் கொடுக்கும் போது, ஸுப்ஹானல் மலி(க்)குல் குத்தூஸ் (பரிசுத்தமான அரசன் தூய்மையானவன்) என்று மூன்று முறை கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அப்ஸா (ரலி)

நூல்கள்: அஹ்மத் (14814), நஸாயீ (1717), அபூதாவுத் (1218)


இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுதல்


இரவுத் தொழுகையை ஜமாஅத்தாக தொழுது கொள்வதற்கும் நபிமொழிகளில் ஆதாரம் உள்ளது.


ஆயிஷா (ரலி
) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் தமது அறையில் தொழுபவர்களாக இருந்தனர். அவர்களின் தலையை மக்கள் பார்க்கும் அளவிற்கு அந்த அறையின் சுவர் குட்டையாக இருந்தது. மக்கள் அவர்களைப் பின்பற்றி தொழலானார்கள். மறுநாள் காலையில் மக்கள் இது பற்றி பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். இரண்டாம் நாளில் நபி (ஸல்) அவர்கள் தொழுதபோது மக்களும் அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள். இவ்வாறு இரண்டு மூன்று இரவுகள் செய்யலானார்கள். அதன் பின் நபி(ஸல்) அவர்கள் (தொழ) வராமல் உட்கார்ந்து விட்டார்கள். காலையில் மக்கள் இது பற்றிப் பேசிக் கொள்ளலானார்கள். ''இரவுத் தொழுகை உங்கள் மீது கடமையாக்கப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சினேன். (அதனாலேயே வரவில்லை) என்று கூறினார்கள்.

நூல்: புகாரி (729)

(இரவுத் தொழுகை கடமையாக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தினால்தான் நபியவர்கள் ஜமாஅத்தாகத் தொழுவதற்கு வரவில்லை.  மாறாக ஜமாஅத்தாகத் தொழுவது கூடாது என்பதற்காக அல்ல. நபியவர்களோடு மார்க்கம் முழுமை பெற்றவிட்டது. எனவே இனி ஜமாஅத்தாகத் தொழுதால் கடமையாகிவிடும் என்ற அச்சம் ஏற்பட அறவே வாய்ப்பில்லை. எனவே இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுது கொள்ளலாம்.)


ஆயிஷா (ரலி
) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் நள்ளிரவில் பள்ளிக்குச் சென்று தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள். விடிந்ததும் மக்கள் இது பற்றிப் பேசிக் கொண்டார்கள். (மறுநாள்) முதல் நாளை விட அதிகமான மக்கள் திரண்டு நபி (ஸல்) அவர்கள் பின்னால் நின்று தொழுதார்கள். விடிந்ததும் மக்கள் இது பற்றிப் பேசிக் கொண்டார்கள். இந்த மூன்றாம் இரவில் பள்ளிவாசலுக்கு நிறையப் பேர் வந்தனர். நபி (ஸல்) பள்ளிவாசலுக்கு வந்து தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதனர். நான்காம் இரவில் பள்ளிவாசல் கொள்ளாத அளவிற்கு மக்கள் திரண்டனர். ஆனால் நபி (ஸல்) அவர்கள் சுபுஹுத் தொழுகைக்குத் தான் வந்தனர். ஸுப்ஹுத் தொழுகை முடித்ததும் மக்களை நோக்கி தஷஹ்ஹுத் மொழிந்து ''நான் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து கூறுகிறேன். நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமலில்லை. எனினும் இது உங்கள் மீது கடமையாக்கப்பட்டு அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடும் என்று நான் அஞ்சினேன்'' எனக் கூறினார்கள். நிலைமை இப்படி இருக்க (ரமலானின் இரவுத் தொழுகையை மக்கள் தனித் தனியாகவே தொழுது கொண்டிருக்க) நபி (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்.

நூல்: புகாரி (2012)


உமர் (ரலி
) அவர்களுடன் நாங்கள் ஓர் இரவு ரமலானில் பள்ளிவாசலுக்குச் சென்றோம். மக்கள் பல்வேறு குழுக்களாக இருந்தனர். சிலர் தனியாகவும் வேறு சிலர் கூட்டாகவும் தொழுது கொண்டிருந்தனர். உமர் (ரலி) அவர்கள் இவர்களை ஒரே இமாமின் பின்னே தொழுமாறு ஏற்பாடு செய்வது நல்லது என்று எண்ணி அவ்வாறே செயல்படுத்தினார்கள். உபய் பின் கஅப் அவர்களை இமாமாக ஏற்பாடு செய்தார்கள். பின்பு மற்றோர் இரவு (பள்ளிக்கு) வந்த அவர்கள் மக்கள் ஒரே இமாமைப் பின்பற்றி தொழுவதைக் கண்டார்கள். ''இந்த புதிய ஏற்பாடு நன்றாக இருக்கிறது. இப்போது தொழுது விட்டுப் பிறகு உறங்குவதை விட உறங்கி விட்டு இரவின் இறுதியில் தொழுவது மிகவும் சிறந்ததாகும்'' எனவும் கூறினார்கள்

அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான்

நூல்: புகாரி (2010)


இப்னு அப்பாஸ் (ரலி
) அவர்கள் அறிவிக்கிறார்கள்: எனது சிறிய தாயாரும் நபி (ஸல்) அவர்களின் மனைவியுமான மைமூனா பின்துல் ஹாரிஸ் (ரலி) அவர்களின் வீட்டில் நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்து இரவில் நானும் தங்கியிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் (பள்ளியில்) இஷா தொழுகை நடத்தி விட்டுப் பின்னர் தமது வீட்டிற்கு வந்து நான்கு ரக்அத்துகள் தொழுது விட்டு உறங்கினார்கள். பின்னர் எழுந்து ''சின்னப் பையன் தூங்கி விட்டானோ?'' என்று அல்லது அது போன்ற ஒரு வார்த்தையைச் சொல்லி விசாரித்து விட்டு மீண்டும் தொழுகைக்காக நின்று விட்டார்கள். நானும் (அவர்களுடன்) அவர்களது இடப் பக்கமாகப் போய் நின்று கொண்டேன். உடனே என்னை அவர்களின் வலது பக்கத்தில் இழுத்து நிறுத்தி விட்டு (முதலில்) ஐந்து ரக்அத்துகளும் பின்னர் இரண்டு ரக்அத்துகளும் தொழுது விட்டு அவர்களின் குறட்டை ஒலியை நான் கேட்குமளவிற்கு ஆழ்ந்து உறங்கிவிட்டார்கள். பிறது சுபுஹுத் தொழுகைக்கு புறப்பட்டார்கள்.

நூல்: புகாரி (117)

அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் நோன்பு நோற்றோம். (கடைசி) ஏழு நாட்கள் எஞ்சியிருக்கின்றவரை நபி (ஸல்) அவர்கள் அம்மாதத்தில் எதையும் தொழ வைக்கவில்லை. (அந்நாளில்) இரவில் ஒரு பகுதி செல்லும் வரை எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். ஆறு (நாட்கள்)இருக்கும் போது எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை. (மாதம் முடிய) ஐந்து நாள் இருக்கும் போது இரவின் பாதிவரை எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! இந்த இரவு (முழுவதும்) நீங்கள் எங்களுக்கு உபரியாகத் தொழுகை நடத்தக் கூடாதா?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபியவர்கள் ''ஒரு மனிதர் இமாம் (தொழுகை நடத்தி) முடிக்கின்ற வரை அவருடன் தொழுதால் அவருக்கு இரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மை கணக்கிடப்படுகிறது'' என்று கூறினார்கள். (மாதம் முடிய) நான்கு நாள் இருந்த போது எங்களுக்கு அவர்கள் தொழ வைக்கவில்லை. (மாதம் முடிய) மூன்று நாள் இருந்த போது தம்முடைய குடும்பத்தார்களையும் மனைவிமார்களையும் ஒன்றிணைத்து எங்களுக்கு ஸஹர் (நேரம்) தவறிவிடுமோ என்று நாங்கள் அஞ்சும் அளவிற்கு எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள். பிறகு மாதத்தின் மீதமுள்ள நாட்களில் அவர்கள் தொழுகை நடத்தவில்லை.

நூல்: அபூ தாவூத் (1167)

'ஒரு மனிதர் இமாம் (தொழுகை நடத்தி) முடிக்கின்ற வரை அவருடன் தொழுதால் அவருக்கு இரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மை கணக்கிடப்படுகிறது''

என்ற நபியவர்களின் கூற்றிலிருந்து இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவது சிறப்பிற்குரியது என்பதை அறிந்த கொள்ளலாம். பள்ளிவாசலில்தான் ஜமாஅத்தாகத் தொழவேண்டும் என்பதில்லை. வீட்டில் ஜமாஅத்தாகத் தொழுதாலும் இந்தச் சிறப்பை அடைந்து கொள்ளலாம். 

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருபத்தி மூன்றாவது நோன்பினுடைய இரவுப் பகுதியில் இரவின் முதல் பகுதியில் மூன்றில் ஒரு பகுதி வரை தொழுதோம். பிறகு இருபத்தைந்தாம் இரவில் அவர்களுடன் பாதி இரவு வரை தொழுதோம். பிறகு இருபத்து ஏழாம் இரவில் அவர்களுடன் நாங்கள் ஸஹர் (உணவை) அடைய முடியாதோ என்று எண்ணும் அளவிற்குத் தொழுதோம்.

அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)

நூல்: நஸயி (1588)

மேற்கண்ட நபிமொழிகள் அனைத்தும் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாக நிறைவேற்றலாம் என்பதற்குரிய சான்றுகளாகும். எனவே இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவது பித்அத் என்று கூறுவோரின் கருத்து வழிகேடாகும். 


வீட்டில் தொழுவது சிறந்தது

நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தில் பாயினால் ஒரு அறையை அமைத்துக் கொண்டார்கள். சில இரவுகள் அதனுள் தொழுதார்கள். அவர்களது தோழர்களில் சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள். இதைப் பற்றி அறிந்து நபி (ஸல்) அவர்கள் (அந்த அறைக்கு வராமல்) உட்கார்ந்து விட்டார்கள். பின்பு மக்களை நோக்கி வந்து ''உங்களது செயல்களை நான் கண்டேன். மக்களே உங்களது இல்லங்களிலேயே தொழுது கொள்ளுங்கள். கடமையான தொழுகை தவிர மற்ற தொழுகைகளைத் தமது வீட்டில் தொழுவதே சிறப்பாகும்'' என்று கூறினார்கள்

அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி)

நூல்: புகாரி (731)

இரவுத் தொழுகையை இயன்ற அளவிற்குத் தொழுது கொள்ளலாம்


என்னிடம் பனூஅசத் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி இருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வீட்டுக்குள்) வந்து, யார் இவர்?' என்று கேட்டார்கள். நான் இவர் இன்னார் என்று கூறிவிட்டு இரவெல்லாம் உறங்க  மாட்டார் (தொழுது கொண்டே இருப்பார்) என்று அவரது தொழுகை குறித்து (புகழ்ந்து) பேசினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் போதும் நிறுத்து! என்று கூறிவிட்டு (வணக்க வழிபாடுகள் உள்ளிட்ட) நற்செயல்களில் உங்களால் இயன்றதையே (நிலையாகச்) செய்துவாருங்கள். நிச்சயமாக நீங்கள் சலிப்படையாத வரை அல்லாஹ் சலிப்படைய மாட்டான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி (1151)

இரவின் கடைசி நேரத்தில் தொழுவது சிறந்தது.

சுபிட்சமும் உயர்வும் மிக்க நம் இறைவன் ஒவ்வோர் இரவும் பூமியின் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றிலோரு பகுதி நீடிக்கும்போது, “என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனையை நான் அங்கீகரிக்கிறேன். என்னிடம் யாரேனும் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் யாரேனும் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்என்று கூறுகிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (1145)


இரவுத் தொழுகை தவறி விட்டால்...

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களுக்கு நோய் முதலியவற்றால் இரவுத் தொழுகை தவறி விட்டால் (அதற்கு ஈடாகப்) பகலில் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.

நூல்: முஸ்லிம் (1358)