குர்பானியின் சட்டங்கள்
عَنْ أُمِّ سَلَمَةَ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- قَالَ « إِذَا رَأَيْتُمْ هِلاَلَ ذِى الْحِجَّةِ وَأَرَادَ أَحَدُكُمْ أَنْ يُضَحِّىَ فَلْيُمْسِكْ عَنْ شَعْرِهِ وَأَظْفَارِهِ ».
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் துல்ஹஜ்
பிறையைக் கண்டு, உங்களில் ஒருவர் குர்பானி கொடுக்க நாடினால், அவர் தமது முடியையும்
நகங்களையும் அகற்றாமல் இருக்கட்டும்!
அறிவிப்பவர் உம்மு ஸலமா (ரலி) நூற்கள்
: முஸ்லிம் (3999) நஸயீ (4285)
“உங்களில் ஒருவர் குர்பானி கொடுக்க நாடினால்” என்று
நபியவர்கள் குறிப்பிடுவதன் மூலம் குர்பானி என்பது விரும்பியவர் செய்கின்ற சுன்னத்தான
நற்செயல் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். குர்பானியின் சிறப்புகள் தொடர்பாக வரும்
திருமறை வசனங்கள், நபிமொழிகள் அனைத்தும் குர்பானி கொடுப்பது வலியுறுத்தப்பட்ட
சுன்னத் என்பதை நமக்கு எடுத்துரைக்கிறது.
குர்பானி கொடுக்க நாடியவர் பேண வேண்டியவை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் துல்ஹஜ்
பிறையைக் கண்டு, உங்களில் ஒருவர் குர்பானி கொடுக்க நாடினால், அவர் தமது முடியையும்
நகங்களையும் அகற்றாமல் இருக்கட்டும்!
அறிவிப்பவர் உம்மு ஸலமா (ரலி) நூற்கள்
: முஸ்லிம் (3999) நஸயீ (4285)
குர்பானி வணக்கத்தை நிறைவேற்றுதற்கான தகுதி
குர்பானிப்
பிராணிகளில் ஒன்றை வாங்கி குர்பானி கொடுப்பதற்கோ அல்லது கூட்டுக்குர்பானியில் சேர
சக்தியுடைய அனைவரும் குர்பானி எனும் சுன்னத்தான வணக்கத்தை நிறைவேற்றலாம்.
நபியவர்கள் ஒரு
ஆட்டை குர்பானி கொடுத்துவிட்டு இறைவா! முஹம்மதிடமிருந்தும்
முஹம் மதின் குடும்பத்தாரிடமிருந்தும் முஹம்மதின் சமுதாயத்தாரிடமிருந்தும் இதை ஏற்றுக்
கொள்வாயாக! என்று கூறியுள்ளார்கள். இதிலிருந்து ஒரு குடும்பத்தின்
சார்பாக ஓர் ஆடு போதுமானது என்பதை அறிந்து கொள்ளலாம்.
عَنْ
عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- أَمَرَ بِكَبْشٍ أَقْرَنَ
يَطَأُ فِى سَوَادٍ وَيَبْرُكُ فِى سَوَادٍ وَيَنْظُرُ فِى سَوَادٍ فَأُتِىَ بِهِ
لِيُضَحِّىَ بِهِ فَقَالَ لَهَا « يَا عَائِشَةُ هَلُمِّى الْمُدْيَةَ ».ثُمَّ قَالَ « اشْحَذِيهَا بِحَجَرٍ ». فَفَعَلَتْ
ثُمَّ أَخَذَهَا وَأَخَذَ الْكَبْشَ فَأَضْجَعَهُ ثُمَّ ذَبَحَهُ ثُمَّ قَالَ «
بِاسْمِ اللَّهِ اللَّهُمَّ تَقَبَّلْ مِنْ مُحَمَّدٍ وَآلِ مُحَمَّدٍ وَمِنْ
أُمَّةِ مُحَمَّدٍ ». ثُمَّ ضَحَّى بِهِ.
ஆயிஷா (ரலி) அவர்கள்
கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கறுப்பில் நடக்கின்ற, கறுப்பில் படுக்கின்ற, கறுப்பில் பார்க்கின்ற
(கால்கள், வயிறு, கண் ஆகிய பகுதிகள் கறுப்பு நிறத்தில் அமைந்த) கொம்புள்ள செம்மறியாட்டுக் கடா ஒன்றைக்
கொண்டுவருமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே குர்பானிக்காக அது கொண்டுவரப்பட்டபோது அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "ஆயிஷா! அந்தக் கத்தியை எடு'' என்றார்கள். பிறகு "அதை ஒரு கல்லில் நன்றாகத் தீட்டு'' என்றார்கள். அவ்வாறே
நான் செய்தேன்.
பிறகு அந்தக் கத்தியை
வாங்கி, அந்தச் செம்மறியாட்டைப் பிடித்து, சரித்துப் படுக்கவைத்து அறுத்தார்கள். (அறுப்பதற்கு முன்) "பிஸ்மில்லாஹ்.
அல்லாஹும்ம தகப்பல் மின் முஹம்மதின் வ ஆலி முஹம்மதின் வமின் உம்மத்தி முஹம்மதின்' (அல்லாஹ்வின் பெயரால்!
இறைவா! முஹம்மதிடமிருந்தும் முஹம் மதின் குடும்பத்தாரிடமிருந்தும் முஹம்மதின் சமுதாயத்தாரிடமிருந்தும்
இதை ஏற்றுக் கொள்வாயாக!)' என்று கூறி, அதை அறுத்தார்கள்.
அறிவிப்பவர்
: ஆயிஷா (ரலி), நூல்
: முஸ்லிம்(3977)
عَطَاءَ
بْنَ يَسَارٍ يَقُولُ سَأَلْتُ أَبَا أَيُّوبَ الْأَنْصَارِيَّ كَيْفَ كَانَتْ
الضَّحَايَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
فَقَالَ كَانَ الرَّجُلُ يُضَحِّي بِالشَّاةِ عَنْهُ وَعَنْ أَهْلِ بَيْتِهِ
فَيَأْكُلُونَ وَيُطْعِمُونَ
”நபி (ஸல்) அவர்கள்
காலத்தில் குர்பானி கொடுப்பது எவ்வாறு அமைந்திருந்தது?” என்று அபூ
அய்யூப்(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், ஒருவர் தமக்காகவும், தம் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டையே
குர்பானி கொடுப்பார். அவர்களும் உண்பார்கள். பிறருக்கும் உண்ணக்
கொடுப்பார்கள்” எனப் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அதா இப்னு யஸார்
நூற்கள்: திர்மிதீ(1425), இப்னுமாஜா(3147)
ஒரு குடும்பத்திற்கு ஒரு குர்பானி போதுமானதாகும். மனத்தூய்மையான முறையில் அவர்களாக விரும்பி எத்தனை பிராணிகளை வேண்டுமானாலும் குர்பானி கொடுக்கலாம்.
திருமணமான பலர்
ஒரே நிர்வாகமாக இருந்தால் அது ஒரு குடும்பமாகத்தான் கருதப்படும். அதே நேரத்தில்
ஒரே வீட்டில் இருந்தாலும் தனித்தனி நிர்வாகமாக இருந்தால் அவை தனித்தனி
குடும்பமாகத்தான் கருதப்படும்.
குர்பானிப் பிராணிகள்
ஆடு, மாடு,
ஒட்டகம் ஆகிய மூன்று பிராணிகளில் ஏதாவது ஒன்றைத்தான் குர்பானி கொடுக்க வேண்டும்.
பிராணிகளுக்கான வயது.
عَنْ
جَابِرٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « لاَ تَذْبَحُوا
إِلاَّ مُسِنَّةً إِلاَّ أَنْ يَعْسُرَ عَلَيْكُمْ فَتَذْبَحُوا جَذَعَةً مِنَ الضَّأْنِ
».
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”முஸின்னா”வையே அறுத்துக் குர்பானி கொடுங்கள். அது கிடைக்கா விட்டால் செம்மறியாட்டில்
(ஆறு மாதத்திற்கு மேல்) ஒரு வயதுக்குட்பட்டதை அறுத்துக் குர்பானி கொடுங்கள்
அறிவிப்பபவர் ஜாபிர் (ரலி) நூல் முஸ்லிம் (3631)
முஸின்னா என்ற வார்த்தையின்
பொருள் ஆடு, மாடு , ஒட்டகத்தில் பல்
விழுந்தவைக்கு சொல்லப்படும்.
மாட்டில்
இரண்டு வருடம் பூர்த்தியடைந்திருந்தால் அதற்கு முஸின்னா என்று கூறப்படும்.
ஒட்டகத்தில்
ஐந்து வருடம் பூர்த்தியடைந்திருந்தால் அதற்கு முஸின்னா என்று கூறப்படும்.
ஆடுகளைப் பொருத்த வரை ஒருவருடம் பூர்த்தியடைந்த ஆடு என்றும், இரண்டு வருடம்
பூர்த்தியடைந்த ஆடு என்றும் இரண்டு கருத்துக்கள் அறிஞர்களிடம்
காணப்படுகிறது. எனவே ஆட்டிற்கு பல்விழுந்துள்ளதா என்பதைப் பார்த்து வாங்கினால்
அதில் எவ்விதப் பிரச்சினையுமில்லை.
செம்மறி ஆட்டில் மட்டும் ”முஸின்னா” பருவத்தில்
உள்ள பிராணிகள் கிடைக்காவிட்டால்”ஜத்வு” வகை ஆட்டை குர்பானி கொடுக்கலாம்.. “ஜத்வு”
என்பது ஆறுமாதம் பூர்த்தியடைந்த ஆட்டைக் குறிப்பதாகும்.
23172 - فقال رسول الله صلى الله عليه و سلم " إِنَّ الْجَذَعَةَ تُجْزِئُ مِمَّا تُجْزِئُ مِنْهُ الثَّنِيَّةُ " (رواه
أحمد - تعليق شعيب الأرنؤوط : إسناده قوي)
நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள் : பல்விழுந்த பிராணி எதற்குப் போதுமானதோ அதற்கு (செம்மறியில்
ஆறுமாதம் பூர்த்தியடைந்த) ஜத்வு வகையும் போதுமானதாகும்.
அறிவிப்பவர்
: நபித்தோழர்களில் ஒருவர். நூல் : அஹ்மத்(23172)
எனவே
செம்மறி ஆட்டைத் தவிர வேறு எந்த ஆடாக இருந்தாலும் அது பல்விழுந்த குட்டியாக இருக்க
வேண்டும்.
எவற்றை குர்பானி கொடுக்கக் கூடாது?
قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:"
أَرْبَعٌ لَا تُجْزِئُ: الْعَوْرَاءُ الْبَيِّنُ عَوَرُهَا، وَالْمَرِيضَةُ الْبَيِّنُ مَرَضُهَا،
وَالْعَرْجَاءُ الْبَيِّنُ ظَلْعُهَا، وَالْكَسِيرُ الَّتِي لَا تُنْقِي "
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான்கு (பிராணிகளை
குர்பானி கொடுப்பது) கூடாது. அவை 1. பார்வைக் குறைபாடு வெளிப்படையாகவுள்ள
பிராணிகள். 2. வெளிப்படையாகத் தெரியும் அளவுக்கு நோயுற்ற பிராணிகள். 3. வெளிப்படையாகத்
தெரியுமளவிற்கு நொண்டக்கூடிய பிராணிகள் 4. எலும்பில் மஜ்ஜை இல்லாமல் மெலிந்தபிராணிகள்.
ஆகியவையாகும்.
அறிவிப்பவர் : அல்பரா பின் ஆசிப் (ரலி)
நூற்கள் : திர்மிதீ(1417), அபூதாவூத்(4293), நஸயீ(4294) , இப்னுமாஜா (3135), அஹ்மத் (17777)
பாதிக்
கொம்பு ஒடிந்த பிராணிகள், பாதிக் காதுக்கு மேல் கிழிந்த பிராணிகள் இவையெல்லாம்
குறைகள் தெளிவாகத் தெரிகின்ற காரணத்தினால் அவற்றை குர்பானி கொடுப்பதை தவிர்ப்பதே
சிறந்ததாகும்.
குறைகள்
வெளிப்படையாகத் தெரியவில்லையென்றால் அவற்றை குர்பானி கொடுப்பதற்குத் தடையில்லை.
காயடித்த பிராணிகள், சிறிதளவு கொம்பு ஒடிந்தவை, கொம்பில் இலேசான கீறல், காயம், இது
போன்ற குறைகள் இருந்தால் அவற்றைக் குர்பானி கொடுப்பது கூடும்.
குர்பானி கொடுக்கும் நேரம் மற்றும் நாட்கள்
பெருநாள்
தொழுகைக்குப் பிறகுதான் குர்பானி கொடுக்க வேண்டும். தொழுகைக்கு முன்னால் அறுத்தால்
அது குர்பானி ஆகாது.
عَنِ الْبَرَاءِ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : سَمِعْتُ
النَّبِيَّ صلى الله عليه وسلم يَخْطُبُ فَقَالَ إِنَّ أَوَّلَ مَا نَبْدَأُ مِنْ
يَوْمِنَا هَذَا أَنْ نُصَلِّيَ ثُمَّ نَرْجِعَ فَنَنْحَرَ فَمَنْ فَعَلَ هَذَا
فَقَدْ أَصَابَ سُنَّتَنَا ، وَمَنْ نَحَرَ فَإِنَّمَا هُوَ لَحْمٌ يُقَدِّمُهُ
لأَهْلِهِ لَيْسَ مِنَ النُّسُكِ فِي شَيْءٍ
நமது இன்றைய (பெரு)நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்குச்) சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்து கொள்வாரோ அவர் நமது வழியில் நடந்து கொண்டார். யார் (தொழுவதற்கு முன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியில் (நன்மை) எதுவும் கிடையாது என்று நபி(ஸல்) அவர்கள் உரையாற்றும் போது கூறியதை நான் செவியுற்றேன் என பராவு பின் ஆசிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அறிவிப்பவர் : பரா பின் ஆசிப் (ரலி), நூற்கள் : புகாரி(5560), முஸ்லிம் (3627)
ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் மட்டுமின்றி
ஹஜ்ஜுப் பெருநாளை தொடர்ந்து வரக்கூடிய 11,12,13 ஆகிய நாட்களும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும்.
وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ
ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ (27) لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ
وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُمْ مِنْ
بَهِيمَةِ الْأَنْعَامِ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ (28)
ஹஜ்ஜைப் பற்றி மக்களுக்கு அறிவிப்புச்
செய்வீராக! அவர்கள் நடந்தும், வெகு தொலைவுகளிலிருந்து வருகின்ற ஒவ்வொரு
மெலிந்த ஒட்டகத்தின்மீதும் உம்மிடம் வருவார்கள். அவர்கள் தமக்குரிய பலன்களை அடைவதற்காகவும், அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகள்மீது அறியப்பட்ட
நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக்
கூறி (அறுத்தி)ட வேண்டும் என்பதற்காகவும் (வருவார்கள்.) எனவே, அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; சிரமப்படும் ஏழைக்கும் உணவளியுங்கள்.
(அல்குர்ஆன் 22 : 27,28)
“அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகள்மீது அறியப்பட்ட
நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக்
கூறி (அறுத்தி)ட வேண்டும்“ என்று அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.
ஹஜ் கிரியைகள்
துல்ஹஜ் பிறை எட்டில் ஆரம்பமாகி துல்ஹஜ் பிறை 13ல் நிறைவுறுகிறது.
ஹஜ்ஜில் குர்பானிப்
பிராணியை அறுக்கும் நாள் பிறை பத்து பகலில் ஆரம்பமாகிறது.
“(ஹஜ்ஜில்) அறியப்பட்ட
நாட்கள்” என திருக்குர்ஆன் குறிப்பிட்டிருப்பதால் பிறை 10 ல் துவங்கி ஹஜ்ஜின் நிறைவு
நாளான பிறை 13 வரை குர்பானி கொடுப்பதற்குரிய நாட்கள் என்பது தெளிவாகிறது. எனவே துல்ஹஜ்
பிறை 10 ல் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றியது முதல் துல்ஹஜ் பிறை 13 சூரியன் மறைவதற்கு முன் இரவு, பகல் எந்நேரத்திலும்
குர்பானி வணக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
குர்பானிப் பிராணியை அறுத்தல்
குர்பானிப் பிராணியை அறுக்கும் போது “பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்“ என்று கூறி அறுக்க வேண்டும்.
عَنْ
أَنَسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ بِاسْمِ
اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ (رواه مسلم)
நபி
(ஸல்) அவர்கள் (குர்பானிப் பிராணியை அறுக்கும் போது) “பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்”
என்று கூறியதை நான் பார்த்தேன்.
அறிவிப்பவர்
:அனஸ் (ரலி), நூல் : முஸ்லிம் (3976)
குர்பானி பிராணிகளின் சொந்தக்காரரே
அறுக்கலாம். அறுப்பதற்கு யாருமில்லையென்றால் முஸ்லிமான ஆணோ, பெண்ணோ யார்
வேண்டுமானாலும் அறுக்கலாம். ஹஜ்ரத்மார்கள் அறுக்க வேண்டும் என்பது கிடையாது.
மேலும் குர்பானி பிராணியை
குளிப்பாட்டுவது, மஞ்சள் பூசுவது, கொம்பில் பூ சுற்றுவது, வாயில் பாலூற்றுதல்,
இறைச்சியை வைத்து பாத்திஹா ஓதுவது போன்றவை நபியவர்கள் காட்டித்தராத பித்அத்தான
காரியங்களாகும். இவற்றை செய்வது கூடாது. மேலும் கூர்மையான கத்தியால் பிராணியை
அறுப்பது நபிவழியாகும்.
பங்கிடுதல்
22 : 28 வது வசனத்தில் குர்பானிப் பிராணிகளின் இறைச்சியைப் பற்றி குறிப்பிடும் போது
“அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; சிரமப்படும் ஏழைக்கும் உணவளியுங்கள்.“
என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். எவ்வளவு உண்ணலாம் எவ்வளவு வழங்கலாம் என்ற வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படாவிட்டாலும் இறைவனுக்கு பயந்து நியாயமான முறையில் நமக்கு தேவையான அளவு மட்டும் நாம் எடுத்துக் கொண்டு எஞ்சியவற்றை ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.
கூட்டுக் குர்பானி
கூட்டாகக் குர்பானி கொடுப்பதும
நபிவழியாகும். மாட்டில் அதிகபட்சம் 7 நபர்கள் சேர்ந்து குர்பானி கொடுக்கலாம்.
عَنْ
جَابِرٍ قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
مُهِلِّينَ بِالْحَجِّ فَأَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ أَنْ نَشْتَرِكَ فِي الْإِبِلِ وَالْبَقَرِ كُلُّ سَبْعَةٍ مِنَّا فِي
بَدَنَةٍ
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன்
ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டிக் கொண்டு புறப்பட்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
ஒரு பலிப் பிராணியில் ஏழு பேர் வீதம் ஒட்டகத்தி லும் மாட்டிலும் கூட்டுச் சேர்ந்துகொள்ளு
மாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல் :
முஸ்லிம் (2538)
மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் அதிகபட்சம் 7
பேர் கூட்டுச் சேரலாம். அது போன்று 2 அல்லது 3 அல்லது, 4 அல்லது 5அல்லது 6 நபர்கள்
சேர்ந்தும் கூட்டாக நிறைவேற்றலாம். அதிக பட்ச எண்ணிக்கைதான் 7 ஆகும். ஒரு
பிராணியில் கண்டிப்பாக 7 பேர் கூட்டாக வேண்டும் என்பது கிடையாது. அதற்கு குறைவான
நபர்களும் சேர்ந்து் கூட்டாக நிறைவேற்றலாம். தகுதியுடையோர் தனியாகவும்
நிறைவேற்றலாம்.
குர்பானி தோல் :
أَنَّ
عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ أَخْبَرَهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَهُ أَنْ يَقُومَ عَلَى بُدْنِهِ وَأَنْ يَقْسِمَ
بُدْنَهُ كُلَّهَا لُحُومَهَا وَجُلُودَهَا وَجِلَالَهَا وَلَا يُعْطِيَ فِي
جِزَارَتِهَا شَيْئًا
நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த
ஒட்டகத்தின் இறைச்சியை பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள்.
அதனுடைய இறைச்சி, தோல் ஆகிய அனைத்தையும் (ஏழைகளுக்கு) விநியோகிக்குமாறு
உத்தரவிட்டார்கள். ஆட்டை உரித்து, அறுத்து, பங்கிடக்கூடியவருக்கு கூலியாக அந்த
இறைச்சியையோ, தோலையோ கொடுக்கக் கூடாது எனவும் கட்டளையிட்டார்கள்.
நூல் : புகாரி (1717)
அதே நேரத்தில் கூலியாக அல்லாமல் உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் வழங்குவதைப் போல் உரிப்பவர்களுக்கும் அந்த இறைச்சியிலிருந்து வழங்கினால் அது தவறல்ல.
0 comments:
Post a Comment