25 December 2010

ஓரிறைக் கொள்கைக்காக போர் செய்தல்

இந்த ஓரிறைக் கொள்கையை நிலைநாட்டுவதற்காகத்தான் மார்க்கம் போர் செய்வதையே நமக்கு கடமையாக்கியுள்ளது. ஆயுதம் ஏந்தி போர் செய்வதற்கு பல்வேறு நிலைகளை திருமறைக் குர்ஆன் விளக்கினாலும் அந்தப் போர் என்பதை ஓரிறைக் கொள்கைகாகத்தான் வலியுறுத்துகிறது. இதிலிருந்து இந்த ஓரிறைக் கொள்கை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். இன்றைக்கு சிலர் திருமறைக்குர்ஆனில் ஜிஹாத் பற்றி வரும் வசனங்களை எடுத்துக் கூறி இளைஞர்களுக்கு தவறான பாதையின் பக்கம் வழிகாட்டுகின்றனர். ஆனால் போர் செய்யக் கூடிய நிலை ஏற்பட்டால் அதன் முதல் காரணம் சத்தியக் கொள்கைகாகத்தான் இருக்க வேண்டும் என்பதே மார்க்கத்தின் கட்டளையாகும். சத்தியக் கொள்கைûயும் அதன் வகைகளையும், இணைவைப்புக் கொள்கைகளையும் அதன் வகைகளையும் அறிந்து கொள்ளாதவர்கள் தங்கள் உயிர்களை இழப்பதால் அவர்களுக்கு இவ்வுலகத்திலும் மறுமையிலும் நஷ்டம்தான்.
                அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்' என உறுதிமொழிந்து, (கடமையான) தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத் (எனும் ஏழைகளின் உரிமையை) வழங்காதவரை (இணைவைக்கும்) மக்களுடன் போரிடும்படி நான் கட்டளையிடப் பட்டேன். இவற்றை அவர்கள் செய்துவிடுவார்களானால் தம் உயிரையும் உடைமை களையும் என்னிடமிருந்து அவர்கள் பாதுகாத்துக்கொள்ள முடியும். (மரண தண்டனைக்குரிய) இஸ்லாத்தின் இதர உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறினாலே) தவிர! மேலும் (இரகசியமாக குற்றமிழைத்தால்) அவர்களின் விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ளது.
அறிவிப்பவர் :அப்துல்லாஹ் பின் உமர் (ரலிரி) நூல் : புகாரி ( 25)
                அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று யார் (உறுதிமொழி) கூறி, (மக்களால்) வழிபாடு செய்யப்படும் இதர தெய்வங்களை நிராகரித்துவிடுகிறாரோ அவரது உடைமையும் உயிரும் பாதுகாப்புப் பெற்றுவிடும். அவரது (அந்தரங்கம் குறித்த) விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது.
அறிவிப்பவர் : தாரிக் பின் அஷ்யம் (ரலிரி) நூல் : முஸ்லிம் (37)
ஜிஹாத் என்பது அநீதி நடக்கும் போது அதை தட்டிக் கேட்பதற்காக ஒரு அரசாங்கம் ஆயுதம் தாங்கிப் போரிடுவது மட்டுமல்ல! மாற்றுமத மக்களிடயே இஸ்லாத்தை எடுத்துச் சொல்லி அவர்களுடைய மனங்களில் இந்தத் தூய மார்க்கத்தை நிலைபெறச் செய்வதும் ஜிஹாத் தான்.
இறைவன் குர்ஆனை வைத்து ஜிஹாத் செய்யச் சொல்கிறான். குர்ஆனை வைத்து ஜிஹாத் செய்வதென்றால் குர்ஆனுடைய கருத்துக்களை மக்களிடையே அழகிய முறையில் எடுத்துக் கூறி உண்மையை நிலைநாட்டப் பாடுபடுவதாகும். 
எனவே (ஏக இறைவனை) மறுப்போருக்கு நீர் கட்டுப்படாதீர்! இதன் மூலம் (குர்ஆன் மூலம்) அவர்களுடன் கடுமையாகப் போரிடுவீராக!
அல்குர்ஆன் (25: 52)
அன்றைக்கு இஸ்லாத்தை அழிப்பதற்காக இணை வைப்பாளர்கள் இஸ்லாத்தின் பெயரால் பலவிதமான அவதூறுகளை பரப்பிக் கொண்டிருந்தார்கள். முஸ்லிம்களை அழிக்க வேண்டும் என்று பேராசைப்பட்டார்கள். இப்படிப்பட்ட கொடிய உள்ளம் படைத்தவர்களிடத்திலும் குர்ஆனை எடுத்துச் சொல்ல வேண்டும் என்று இறைவன் இந்த வசனத்தில் குறிப்பிடுகின்றான். நபி (ஸல்) அவர்களும் மார்க்கத்தை எடுத்துச் சொல்லிப் போராடும் படி வலியுறுத்தியிருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஜிஹாதில் மிகச் சிறந்தது சத்தியக் கொள்கையை அநியாயக்கார அரசனிடம் எடுத்துக் கூறுவதாகும்
நூல் : நஸயீ (4138)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இணை வைப்பாளர்களிடத்தில் உங்களுடைய பொருட்களாலும் கைகளாலும் நாவுகளாலும் போரிடுங்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)    நூல்: நஸயீ (3045)
நாவுகளால் போரிட வேண்டும் என்றால் இணை வைப்பாளர்களிடத்தில் உள்ள அசத்தியக் கருத்துக்களை எடுத்துக் கூறி, அவர்களை சத்தியத்தின் பால் கொண்டு வருவதாகும். நபி (ஸல்) அவர்கள் எந்த ஒரு போருக்குச் சென்றாலும் முதலில் அவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றி எடுத்துச் சொல்வார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்தக் கூட்டத்தார்களிடத்தில் போரிட்டாலும் அவர்களை (இஸ்லாத்தின் பால்) அழைக்காமல் இருந்ததில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)  நூல்: அஹ்மத் (2001)
கைபர் போர்க்களத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக யூதர்கள் களம் இறங்கினார்கள். அவர்களிடத்தில் போரிடுவதற்காக நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களைத் தலைவராக நியமிக்கிறார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம், ''எதிரிகள் நம்மைப் போன்று இஸ்லாமியர்களாக ஆகும் வரை நான் அவர்களிடம் போர் செய்யட்டுமா?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறிய பதில் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.
''நிதானத்தைக் கடைபிடிப்பீராக! அவர்களுடைய களத்திற்கு நீர் சென்றவுடன் அவர்களை இஸ்லாத்தின் பால் அழைத்து அவர்கள் மீது கடமையாகுபவற்றை அவர்களுக்குத் தெரிவிப்பீராக! அல்லாஹ்வின் மீதாணையாக உங்கள் வாயிலாக ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியளிக்கப்படுவது சிகப்பு ஒட்டகங்களை விட உங்களுக்குச் சிறந்ததாகும்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் (ரலி)  நூல்: புகாரி (2942)
அலீ (ரலி) அவர்கள், 'நான் முதலில் சண்டையிடட்டுமா?' என்று கேட்கும் போது, 'அவசரப்படாதே! முதலில் அவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்' என்று கூறுகிறார்கள். இங்கு தான் நாம் ஒரு முக்கியமான ஒரு விஷயத்தை நினைவுக்குக் கொண்டு வர வேண்டும். இன்றைக்கு நம்மைச் சுற்றிப் பெரும்பாலும் கள்ளம் கபடமில்லாமல் அண்ணன் தம்பிகளைப் போன்று பழகிக் கொண்டிருக்கும் மாற்று மதச் சகோதரர்கள் அதிகமாக வாழ்கிறார்கள். கொடியவர்களுக்கு இஸ்லாத்தைச் சொல்வது நம்மீது கடமையென்றால் இந்த அப்பாவி மக்களுக்கு ஓரிறைக் கொள்கையை எடுத்துச் சொல்வது நம்மீது கடமையில்லையா?
மேற்கண்ட ஹதீஸ்கள் இணைவைப்புக்கு எதிராக நம்முடைய உயிரையும் நாம் கொடுக்கத் தயாராக வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகின்றன. இதன் மூலம் ஓரிறைக் கொள்கையை கற்றுக் கொள்வதின் அவசியத்தை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

0 comments:

Post a Comment