17 December 2010

இறைத்தூதருக்கு கட்டுப்படுதல்

திருமறைக்குர்ஆனில் அல்லாஹ் பல்வேறு இடங்களில் இறைத்தூதருக்கு கட்டுப்பட வேண்டும் என்று கட்டளையிடுகிறான். இறைத்தூதருக்கு கட்டுப்பட வேண்டும் என்று இறைவன் கட்டளையிடுவதற்குக் காரணம் இறைவனுடைய இறைச் செய்தியை இறைத்தூதர்தான் நமக்கு எடுத்துக் கூறுவார். இறைத்தூதர் மார்க்கமாகப் போதிப்பது அவருடைய சொந்தக்கூற்று கிடையாது. சில நேரங்களில் நபியவர்கள் இறைவனின் அனுமதியில்லாமல் சில வார்த்தைகளைக் கூறிய காரணத்தினால் அவர்கள் இறைவனால் கடுமையாகப் கண்டிக்கப்பட்டுள்ளார்கள். இறைத்தூதராக இருந்தாலும் இறைமார்க்கத்தில் அவர் தன்னுடைய சுயக்கருத்தினை கூற முடியாது என்பதை நாம் தனியாக விளக்கியுள்ளோம். இங்கே நாம் மிக முக்கியமாக விளங்கவேண்டியது இறைத்தூதருக்கு கட்டுப்பவதின் நோக்கின் அவர் இறைச்செய்தியை கூறுவதுதான். மார்க்கத்தில் இறைவன் வகுத்தான் சட்டமே தவிர அங்கு வேறுயாருடைய கருத்தும் கலந்துவிட இறைவன் அனுமதிக்க மாட்டான்.
அல்லாஹ்வின் விருப்பப்படி மக்கள் கட்டுப்பட வேண்டுமென்பதற்காகவே தவிர எந்தத் தூதரையும் அனுப்புவதில்லை. (அல்குர்ஆன் 4 : 64)
அல்லாஹ்வின் கட்டளைப்படி மக்கள் நடக்கவேண்டும் என்பதற்காகத்தான் இறைத்தூதர்கள் அனுப்பட்டார்கள். இறைத்தூதருக்கு கட்டுப்படுதல் என்பதே இறைவனுக்காகத்தான். அதாவது இறைச் செய்தியைத்தான் நாம் பின்பற்றவேண்டும். இறைச் செய்தியை பின்பற்ற வேண்டும் என்றால் அதைக்கூறும் இறைத்தூதரின் வார்த்தைகள் இறைச்செய்தி என நம்பிக்கை கொண்டு அவ்வார்த்தைகளுக்கு நாம் கட்டுப்பட வேண்டும். இதை அல்லாஹ் பல்வேறு வசனங்களில் தெளிவு படுத்துகின்றான்.
இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப் பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார். யாரேனும் புறக்கணித்தால் உம்மை அவர்களின் காப்பாளராக நாம் அனுப்பவில்லை (அல்குர்ஆன் 4 : 80)
இறைச்செய்திகளை இறைவனிடமிருந்து பெற்று இறைத்தூதர் அறிவிக்கின்ற காரணத்தினாலேயே இறைவன் இறைத்தூதருக்கு கட்டுப்பவதை தனக்கு கட்டுப்படுவதாக சொல்லிக்காட்டுகின்றான். பின்வரும் வசனத்திலிருந்து இதை நாம்தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
அல்லாஹ்வையும், அவனது தூதராகிய எழுதப் படிக்கத் தெரியாத இந்த நபியையும் நம்புங்கள்! இவர் அல்லாஹ்வையும், அவனது வார்த்தைகளையும் நம்புகிறார். இவரைப் பின்பற்றுங்கள்! நேர் வழி பெறுவீர்கள் (அல்குர்ஆன் 7 : 158)
அல்லாஹ் இறைத்தூதருக்கு கட்டுப்படுமாறு கூறிவிட்டு அதற்கான காரணத்தையும் கூறுகிறான். அதாவது '' இவர் அல்லாஹ்வையும், அவனது வார்த்தைகளையும் நம்புகிறார். இவரைப் பின்பற்றுங்கள்!''  என்ற வாசகமே அது.
''நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக (அல்குர்ஆன் 3 : 311)
இறைக்கட்டளைகளுக்கு முழுமையாகக் கட்டுப்படுவதுதான் இறைநேசத்தை பெற்றுத்தரும். அப்படிப்பட்ட இறைநேசத்தை பெறுவதற்கு நபிக்கு கட்டுப்பட வேண்டும் என இறைவன் கட்டளையிடுகின்றான். நபியவர்கள் இறைக்கட்டளைகளை எடுத்துக் கூறுகின்ற காரணத்தினால் அவர்களுடைய கட்டளைகளைப் பின்பற்றுவதுதான் இறைக்கட்டளைகளைப் பின்பற்றுவதாகும். இதன்காரமாகத்தான் இறைநேசம் பெறுவதற்கு இறைத்தூதருக்கு கட்டுப்படுங்கள் என இறைவன் கட்டளையிடுகின்றான்.
''அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக (அல்குர்ஆன் 3 : 32)
இறைத்தூதருக்கு கட்டுப்ட மறுத்தால் இறைவனை மறுப்பதாக அல்லாஹ் கூறுகிறான். இறைத்தூதர்தான் இறைவன் என வழிகேட்ர்கள் பொருள் கொள்வதைப் போன்று நாம் விளங்கி காஃபிர்களாகி விடக்கூடாது. மாறாக இதன் சரியான கருத்து இறைத்தூதர் கூறுவது அவரது சுயக் கருத்தல்ல. இறைக்கட்டளைகள். அவருடைய கருத்தை நாம் புறக்கணித்தால் இறைத்தூதரின் சுயக்கருத்தை நாம் புறக்கணிக்க வில்லை. மாறாக இறைவனின் கருத்தையே புறக்கணிக்கின்றோம். இதன் காரணமாகத்தான் அவர்களை காஃபிர்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
இறைவனுக்கும், இறைத்தூதருக்கும் கட்டுப்படுவதே முஃமின்களின் பண்பு
அவர்களிடையே தீர்ப்பு வழங்கு வதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது ''செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்'' என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 24 : 51, 52)
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார். (9 : 36)
(முஹம்மதே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். (அல்குர்ஆன் 4 : 65)
குர்ஆன் ஹதீஸை புறக்கணித்தால் ஏற்படும் நஷ்டம்
''அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்!'' என கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் இவர் (முஹம்மத்) மீது சுமத்தப்பட்டது இவரைச் சேரும். உங்கள் மீது சுமத்தப் பட்டது உங்களைச் சேரும். இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர்வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை.  (அல்குர்ஆன் 24 : 54)
அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! எச்சரிக்கையோடு இருந்து கொள்ளுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் தெளிவாக எடுத்துச் சொல்வதே நமது தூதரின் கடமை என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 5 : 92)
அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் தெளிவாக எடுத்துச் சொல்வது தான் நமது தூதர் மீது உள்ளது. (அல்குர்ஆன் 64 : 12)
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! முரண்படாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) கோழைகளாவீர்கள்! உங்களின் பலம் அழிந்து விடும். சகித்துக் கொள்ளுங்கள்! சகித்துக் கொள்வோருடன் அல்லாஹ் இருக்கிறான். (அல்குர்ஆன் 8 : 46)
நேர் வழி தனக்குத் தெளிவான பின் இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) மாறு செய்து நம்பிக்கை கொண்டோரின் வழியல்லாத (வேறு) வழியைப் பின்பற்றுபவரை, அவர் செல்லும் வழியில் விட்டு விடுவோம். நரகத்திலும் அவரை நுழையச் செய்வோம். தங்குமிடங்களில் அது மிகவும் கெட்டது (அல்குர்ஆன் 4 : 115)
நம்பிக்கை கொண்டோரே ! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் செவிமடுத்துக் கொண்டே அவரைப் புறக்கணிக்காதீர்கள்! (அல்குர்ஆன் 8 : 20)
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள்! (47 : 33)
குர்ஆன் ஹதீஸை மட்டும் பின்பற்றினாலே வெற்றி
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார். (அல்குர்ஆன் 33 : 71)
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர். (அல் குர்ஆன் 24 : 52)
அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 3 : 132)
அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், மற்றும் நல்லோருடன் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள் (4 : 69)
அவனது தூதருக்கும் கட்டுப்படுகிறாரோ, அவரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். யார் புறக்கணிக்கிறாரோ அவருக்குத் துன்புறுத்தும் வேதனை அளிப்பான். (அல்குர்ஆன்  48 : 17)
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் நீங்கள் கட்டுப் பட்டால் உங்கள் செயல்களில் எதையும் அவன் குறைத்து விட மாட்டான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 49 : 14)

0 comments:

Post a Comment